tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 3 பேர் கைது....

கோயம்புத்தூர்:
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக பிரமுகர்கள் மூன்று பேர் அடுத்தடுத்து கைது  செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்தியஅமைச்சர் நிதின்கட்காரி, தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆளும் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.ஆனால், இதுகுறித்து முறையாக விசாரணை செய்யாமல் காவல்துறையினர், அரசியல் அழுத்தம் காரணமாக வழக்கை மெத்தனமாக கையாண்டனர். இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், ஜனநாயக இயக்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐயிடம் விசாரணை ஒப்படைக்கப் பட்டது. 

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கோவை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம் மற்றும் கரோன்பால், பாபு ஆகிய மேலும் மூன்று பேரை சிபிஐயினர்செவ்வாயன்று கைது செய்தனர். இவர்கள் மூவரையும் புதனன்றுகோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில்நீதிபதி நந்தினி தேவி மூவரையும் விசாரித்தார். இந்த வழக்கில்  பாதிக்கப்பட்ட 3 பெண்கள் கொடுத்தவாக்குமூலத்தின் அடிப்படை யில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து மூவரை யும் வரும் ஜனவரி 20 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். இதனை யடுத்து பலத்த பாதுகாப்புடன் கைதுசெய்யப்பட்ட அருளானந்தம்,  பாபு, கரோன் பால் ஆகிய மூவரும் கோவைமத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைத்தனர்.

அமைச்சர்களுடன் நெருக்கம்
கைது செய்யப்பட்ட மூவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அருளானந்தம் என்பவர் அதிமுக மாணவரணி செயலாளராக உள்ளார்.  இவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய அமைச்சர் நிதின்கட்காரி உள்ளிட்டோரிடம் நெருக்கமாக எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று அதிமுகவின் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ஊராட்சித் தலைவர் ரெங்கநாதனுடன் கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளான கரோன்பால் மற்றும் பாபு ஆகியோர் நெருக்கமாக உள்ள படங்களும் வைரலாகி வருகிறது. 

மாதர் சங்கம் போராட்டம் - கைது
முன்னதாக, குற்றவாளிகளை கோவை நீதிமன்றத்திற்குள் இருந்துவெளியே அழைத்து வருகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவை நீதிமன்ற வாயில் முன்பு அமர்ந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்ப தாகவும், உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதனால் நீதிமன்றம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்,  காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களைகாவல்துறையினர் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;