tamilnadu

img

மின்சாரம் தாக்கி இறந்த யானையை பிற காட்டுயிர்களுக்கு உணவாக்கும் முயற்சி

மேட்டுப்பாளையம், ஏப். 24-மேட்டுப்பாளையம் அருகே பாக்கு தோப்பிற்குள் மின்சாரம் தாக்கி இறந்த யானையின் உடலை பிற வேட்டை விலங்கினங்களின் இரைக்காக காட்டுக்குள் வனத்துறையினர் கொண்டு சென்றனர்.மேட்டுப்பாளையத்தில் உள்ள நெல்லிதுறை கிராமத்தினுள் செவ்வாயன்று அதிகாலை புகுந்தகாட்டு யானையொன்று அங்குள்ள தோப்பில் இருந்த பாக்கு மரத்தை சாய்க்க முயற்சித்தபோது, அருகில் இருந்த மின்கம்பம் சரிந்ததில் மின்சாரம் தாக்கிஇறந்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க இந்த ஆண் காட்டு யானை கடந்த இரண்டு வருடங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றி வந்தது. மனிதர்களுக்கு எவ்வித தொந்தரவும் தராத இந்தயானையினை இப்பகுதி மக்கள்கட்டைக் கொம்பன் என அழைத்து வந்தனர். ஆரோக்கியமாக வலம் வந்த யானை திடீரென மின்சாரம் பாய்ந்து பலியானதால் இப்பகுதி மக்களும் வனத்துறையினரும் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில் யானையின் உடல் வழக்கமான பிரேத பரிசோதனைக்கு பின்னர் அதன் தந்தங்கள் அகற்றப்பட்டது. இந்த நடைமுறைகளுக்கு பின்பு இறந்த யானையின் உடலை குழிதோண்டி புதைப்பதோ அல்லது தீயிட்டு எரித்து விடுவதோ வனத்துறையினரின் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இறந்த யானை முழு ஆரோக்கியத்தோடு இருந்ததையும் யானையின் இறப்பிற்கு மின்சார தாக்குதல் மட்டுமே காரணம் என்பதையும் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இதுகுறித்து தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து நடைபெற்ற ஆலோசனையில் இறந்த யானையின் உடலை காட்டுக்குள் கொண்டு சென்று புலி, சிறுத்தை போன்ற வேட்டை மற்றும் வேட்டை விலங்களின் மிச்சத்தை உண்டு வாழும் விலங்கினங்களுக்கு இரையாக வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் யானையின் உடலை தூக்கி டிப்பர் லாரியில் வைத்துமேட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.ஏற்கனவே மேட்டுப்பாளையம் வனச்சரக எல்லைக்குள் புலி,சிறுத்தை போன்ற விலங்கினங்களின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இறந்த யானையின் உடல் காராச்சி மரக்குட்டை என்னுமிடத்தில் வைக்கப்பட்டது. பின்னர் யானையின் உடல் போடப்பட்ட இடத்தில வனத்துறை கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு இறந்த யானையின் உடலை உண்ணும் விலங்குகளை கண்டறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுவரை வனத்திற்கு வெளியே இறந்த விலங்கினங்களை மீண்டும் காட்டிற்குள் கொண்டு செல்லும் நடைமுறை இல்லாத சூழலில், தற்போது முதன்முறையாக ஒரு பரிசோதனை முயற்சியாக இந்த நடவடிக்கையினை கோவை மாவட்டவனத்துறை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினரின் இப்புதிய முயற்சியினை வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

;