திருப்பூர், அக். 29 - திருப்பூர் மாவட்டத்தில் மக்காச் சோளப் பயிர்களில் அமெரிக்க படைப்புழுத் தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளனர். இது பற்றி முழுமை யாகக் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். சமீப ஆண்டுகளாக மக்காச் சோள பயிர்களை அமெரிக்க படைப்புழுக்கள் தாக்கி அழித்து வருகின்றன. கடந்த ஆண்டு நடை பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகள் நிவா ரணம் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு மக்காச்சோள விவசாயி களுக்கு ரூ.182 கோடி இழப்பீடு வழங்கியது. இதில் திருப்பூர் மாவட் டத்துக்கு ரூ.18 கோடி கொடுக்கப் பட்டது. இந்த ஆண்டும் மக்காச் சோளப் பயிர்களில் அமெரிக்க படைப்புழுத் தாக்குதலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப் படுத்துவதற்கு வேளாண்மை பல் கலைக் கழகம் பரிந்துரைத்த மருந்தைத் தெளித்தாலும் படைப்புழுத் தாக்குதல் கட்டுப்படவில்லை. இனக்கவர்ச்சிப் பொறி வைக்கப்பட்டு அந்துப்பூச்சி மூலம் படைப்புழுவை அழிக்க ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் இதன் மூலம் ஒரேயொரு அந்துப்பூச்சி கூட படைப்புழுவை அழிக்கவில்லை. பயிர் முளைக்கும்போதே படைப்புழுத் தாக்குதலை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறி னார்.
மேலும் அவர் கூறியதாவது, சில தனியார் மருந்து நிறுவனங்களின் மருந்துகளை வாங்கி தெளிப்பது ஓரளவு பயன்பட்டாலும் முழுமையாக இந்த படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விவசாயிகள் கூறினர். இந்த சூழ்நிலை யில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2000த்தில் இருந்து ரூ.3100 வரை விலை போனது. இந்த ஆண்டு பூச்சி தாக்குதலால் விளைச்சல் குறையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் மக்காச் சோளத்துக்கு விலை கிடைக்குமா என்பதும் தெளிவாகத் தெரிய வில்லை. இந்நிலையில் அரசு கடந்த அக் டோபர் 9ஆம் தேதி அரசாணை எண் 205-ன் மூலம் படைப்புழுத் தாக்கு தலில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.18 கோடியே 66 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்துக்கு வெறும் ரூ.8 லட் சத்து 80 ஆயிரம் மட்டுமே வந்தி ருப்பதாகத் தெரிகிறது. அரசாணை ஒதுக்கப்பட்டாலும் அதற்குரிய நிதி ஒதுக்கீடு வந்து சேர்ந்ததாகத் தெரியவில்லை. மேலும் மக்காச் சோள பாதிப்பு குறித்து மாவட்டம் முழுவதும் முழுமையான கணக் கெடுப்பு நடத்தப்படவில்லை.எனவே ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதல்ல, அந்த நிதியும் காலந்தாழ்த்தி வழங் கப்பட்டால் அதற்குள்ளாக படைப் புழுக்கள் மொத்த மக்காச்சோள பயிர்களையும் நாசம் செய்து விடும். எனவே திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிர் செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
அமெரிக்கப் படைப்புழுத் தாக் குதலைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடந்த காலத்தில் பருத்தி விவசாயம் பூச்சித் தாக்குதலில் முற்றாக அழிந்தது போன்ற நிலை இதற்கும் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே இப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழி முறையை உடனடியாக கண்டறிய நடவடிக்கை எடுப்பதுடன், உரிய இழப்பீடு விவசாயிகளுக்குக் கிடைக் கவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து கிராமங்களுக்கும் நேர டியாகச் சென்று பார்வைிட்டு அஜ்மாய்ஸ் எனும் பயிர்வாரி கணக் கெடுப்பு நடத்துவதில்லை. இத னால் முழுமையான பாதிப்பு விபரங்கள் எடுக்கப்படாமல் விடு படுகிறது. அத்துடன் மக்காச் சோளத்துக்குப் படைப்புழுத் தாக்கு தல் போல நெல், காய்கறிகளுக்கும் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகளைக் காக்க தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலம் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.