தாராபுரம், மே 12 -தாராபுரத்தில் 27 பள்ளிகளை சேர்ந்த 176 வாகனங்களை துணை ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.தாராபுரம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் சார்பில், பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு விவேகம் மேல்நிலைப்பள்ளியில், துணை ஆட்சியர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வேலுமணி, வட்டாரபோக்குவரத்து அலுவலர் தங்கவேல் அடங்கிய குழுவினர் 27 பள்ளிகளை சேர்ந்த 176 வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் பள்ளி வாகனங்களில் காப்பீடு, எப்சி உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? மற்றும் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவிகள், விபத்துக் கால அவசர கதவு செயல்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.முன்னதாக துணை ஆட்சியர் பவன்குமார் ஓட்டுநர்களிடம் பேசுகையில், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. உடல்நலக்குறைவு ஏற்பட்டால் விடுப்பு எடுத்துக்கொள்ளவேண்டும். வாகனங்களை முறையாக சோதனை செய்த பிறகே பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதன்பின் ஆய்வில் குறைபாடுள்ள வாகனங்களுக்கு, குறைபாடுகளை நீக்குமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.