tamilnadu

img

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒரு வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.... மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்.....

கரூர்:
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒரு வார காலத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என, மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடுசெய்தித்தாள் காகித நிறுவனத்தில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.  வடநேரே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று (மே 17) நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர்வி.செந்தில்பாலாஜி பங்கேற்றார்.
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க, சேலம் இரும்பாலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து, அங்கேயே 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைத்துள்ளது போல, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இதில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் அலுவலர் ஹரிகிருஷ்ணன், தங்கராசு, டேவிட் மாணிக்கம், சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைத்த தொழில்நுட்ப அலுவலர்கள், எம்எல்ஏக்கள் (குளித்தலை) இரா.மாணிக்கம், (அரவக்குறிச்சி) ஆர்.இளங்கோ, (கிருஷ்ணராயபுரம்), சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தி யாளர்களிடம் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படு பவர்களுக்குக் கூடுதலாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி செய் வதற்கான இயந்திரங்கள் இத்தாலி யில் இருந்து வருவதற்கு மாத இறுதியாகும். இதனால், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூன் 2-வது வாரமாகிவிடும். அவசர, அவசியம் கருதி, சேலம் இரும்பாலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதுடன், அங்கேயே 500 படுக்கைகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இங்குள்ள சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்படும். இதற்கான பணிகள் செவ்வாயன்று (மே 18) தொடங்கி ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;