tamilnadu

img

விசைத்தறி தொழிலை பாதுகாக்க துரும்பைக் கூட அசைக்காத அதிமுக அரசை அகற்ற பாடுபடுவோம்... விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் அறைகூவல்

ஈரோடு:
விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க துரும்பைக் கூட அசைக்காத அதிமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்றப் பாடுபடுவோம் என்று தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

சங்கத்தின் மாநில குழு கூட்டம் கடந்த சனி அன்று ஈரோடு சிஐடியு அலுவலகத்தில் மாநிலத்தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எம்.சந்திரன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாநில குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜவுளித் தொழிலின் அங்கமான விசைத்தறி பாரம்பரியமான தொழில், தொழிலாளிகள் 7 லட்சம் பேர் மற்றும் நெசவாளர்கள், உரிமையாளர்கள் என சுமார் 12 லட்சம் பேர் உள்ளனர். பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடிஅரசுகளின் தவறான கொள்கை காரணமாக நெருக்கடியில் இருந்து வந்தது.பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் விசைத்தறி தொழில் வளர்ச்சி அடையும் என்று மோடி சொன்னார். அதை அப்படியே எடப்பாடி பழனிசாமி வழி மொழிந்தார். ஆனால் வளர்ச்சி வரவில்லை. மாறாக நெருக்கடிதான் தீவிரமானது.

கொரோனா பொது முடக்கம் வந்தபோது தறிகள் ஓடவில்லை. வருமானம் இல்லை. பட்டினி, வறுமை, தற்கொலைச் சாவுகள் ஏராளம். நம்முடைய தொழிற்சங்க அமைப்புகள் அனைவருக்கும் மாதம் ரூ.7500 வழங்க கோரிக்கை விடுத்தும் எடப்பாடி பழனிச்சாமி வழங்கவில்லை. அதனால் கொரோனா நிவாரணம் கேட்டு ஏராளமான போராட்டங்கள் நடத்தியும் ஏமாற்றமே மிஞ்சியது. பொது முடக்க தளர்வு வந்த பின்பு முழுமையாக தறிகள் ஓடவில்லை. வேலை இல்லை.வருமானம் இல்லாமல் வாழ முடியாமல் தொழிலாளர்கள், நெசவாளர்கள் இன்று வரை தாங்க முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். எடப்பாடியின் அறிவிப்பில் தீர்வுகாணவில்லை.கொரோனா காலத்தில் பொதுத்துறை பங்கு விற்பனை, தொழிலாளர் சட்டங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்தது. மின்சார சட்ட திருத்தம் காரணமாக விசைத்தறித் தொழிலுக்கு உள்ள750 யூனிட் மின்சாரம் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மின்சார கட்டணம் பல மடங்கு அதிகமாகும்.தற்போது கூட நூல்விலை உயர்வு காரணமாக விசைத்தறி தொழில் நெருக்கடியின் விளிம்பில் உள்ளது. பல மாவட்டங்களில் தறி நிறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் உரிய தலையீடு செய்யாமல் பார்வையாளராக இருந்தது. இந்நிலை தொடர்ந்தால் தொழில் அழியும் நிலை உருவாகும். மேற்கண்ட நெருக்கடியில் இருந்த விசைத்தறி தொழிலை பாதுகாக்க தமிழக அரசுதுரும்பைக் கூட அசைக்கவில்லை, இப்போதுஎடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்.

பிரதமர் கிசான் திட்டத்தில் பல 100 கோடிஊழல், குட்கா ஊழல் தமிழக அமைச்சர்களில் சரிபாதி பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. தமிழகத்தில் வரலாறு காணாத மோசமான ஆட்சி நடக்கிறது. எனவே மக்கள் கோரிக்கைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றி கவலைப்படுகிற அரசை நாம் தேர்வு செய்ய வேண்டும். தமிழக மக்களின் உரிமைகளுக்கு கடந்த காலத்தில் ஏராளமான போராட்டங்கள் நடத்திய இடதுசாரிகள் உள்ளிட்ட திராவிட முன்னேற்ற கழக அணி வெற்றி பெற வேண்டும். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் மேற்கண்ட அணிக்கு வாக்களித்தும் வாக்குகள் சேகரித்தும், வெற்றி பெறச் செய்யவேண்டுமாய் மாநில விசைத்தறி சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கிறது.

;