tamilnadu

img

ஆலங்குளம் அரசு சிமிண்ட் ஆலையை சீரமைக்க தொழில்துறை அமைச்சரிடம் சிபிஎம் வலியுறுத்தல்....

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமிண்ட் ஆலையை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம்  மனு அளிக்கப்பட்டது.

காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக்குமார், எல்.முருகன், தமுஎகச மாவட்டத் தலைவர் தேனிவசந்தன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
 வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளத்தில் உள்ள  அரசு சிமென்ட் ஆலை கடந்த ஆட்சியாளர்களால் பெரிதும் சீர்குலைக்கப்பட்டுள்ளது.  1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இந்த ஆலை முற்றிலும் செயலிழந்துள்ளது. அந்த ஆலையை புணரமைத்து மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.திருவில்லிபுத்தூர்-மதுரை சாலையில்  உள்ள கூட்டுறவு நூற்பாலை 1,500 தொழிலாளர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2003-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மூடப்பட்டது.

மிகப்பெரிய கட்டடங்கள்,  நிறைய காலியிடம் பயன்பாடின்றி உள்ளது. மீண்டும் கூட்டுறவு நூற்பாலையை செயல்படுத்தலாம். அல்லது அங்கு பொருத்தமான தொழில் தொடங்கலாம். குறிப்பாக மாம்பழக்  கூழ் தயாரித்தல்  போன்ற தொழில் துவங்கலாம்.
 விருதுநகர் - சாத்தூர் இடையே தொழிற்பேட்டை  தொடங்க விரைவாக   நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவது  பட்டாசுத் தொழில். இந்தத் தொழில் ஒவ்வொரு ஆண்டும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பல மாநிலங்களில் திடீரென பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதால் உற்பத்தியான பட்டாசு தேங்கி  கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிப்பதன் மூலமே பட்டாசு தொழிலைப் பாதுகாக்க முடியும்.  

 மாவட்டத்தில் மற்றுமொரு பிரதான தொழில்  ஜவுளித் தொழில். பஞ்சாலைகள், விசைத்தறி, கைத்தறி, கார்மென்ட்ஸ் ஆகியவை உள்ளன. அதிகமான மின் கட்டணம் மற்றும் மத்திய அரசின் ஏற்றுமதிக் கொள்கைகளால் பஞ்சாலைகள் பல  நெருக்கடியை சந்திக்கிறது.இதனால்,  இராஜபாளையம் பகுதியில் பல ஆலைகள் மூடப்பட்டுள்ளது. பஞ்சாலை தொழில் பாதுகாப்பிற்கும், மேம்பாட்டிற்கும் தொழில்முனைவோருடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

;