tamilnadu

img

இந்நாள் ஆக. 19 இதற்கு முன்னால்

1839 - லூயி டாகெர் உருவாக்கிய, ‘டாகெரோடைப்’ என்ற ஒளிப்படம்(ஃபோட்டோக்ராஃப்) பதிவுசெய்யும் முறையை, உலகிற்கு இலவசப் பரிசாக அளிப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பே, ஒளிப்படவியலின்(ஃபோட்டோக்ராஃபி) பிறப்பாக பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது. கேமராவின் வரலாறு, ஒளிப்படத்தைப் பதிவுசெய்வதற்கு மிகமிக முந்தையது என்பதால் அதை தனியே இன்னொரு நாள் பார்க்கலாம். ஒளியால் மனிதத் தோலின் நிறம், உடையின் நிறம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை பழங்காலத்திலிருந்தே மனிதன் அறிந்திருந்தாலும், ஒளியைக்கொண்டு படங்களைப் பதிவு செய்வதற்கான முயற்சி, 1700களுக்கு முன்பு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

1260-1390 காலத்தில் இத்தாலியில் உருவாக்கப்பட்ட, ‘புனிதப் போர்வை’யில் ஒரு மனித முகத்தின் எதிர்மறை(நெகட்டிவ்) பிம்பம் பதிவாகியிருப்பதிலிருந்து, ஒளிப்படத்தைப் பதிவுசெய்ய பண்டைய முறைகள் எதுவுமிருந்து, ஆவணப்படுத்தப்படாமல் அழிந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 1717இல் ஜெர்மானிய பல்துறை அறிஞரான ஜொஹான் ஷுல்ஸ், வேதிமக்கலவை கொண்ட கண்ணாடிப் புட்டிகளின்மீதான ஒளியின் விளைவைக் கண்டறிந்து, உள்வெட்டுத் தகடுகளைக்கொண்டு(ஸ்டென்சில்), புட்டிகளின்மீது எழுத்துகளைப் பதிவுசெய்துகாட்டினார். ஒளியால் மாற்றமடையும் வேதிமங்களைப் பூசி, பிம்பங்களை நிரந்தரமாகப் பதிவுசெய்யலாம் என்று முதன்முதலில் (1790 காலகட்டத்தில்) கூறியவர் தாமஸ் வெட்ஜ்வுட்-தான். 1816இல் நீஸ்ஃபோர் நியப்ஸ், வெள்ளி க்ளோரைட் தடவப்பட்ட தாளில் எதிர்மறைப் படங்களைப் பதிவுசெய்வதில் வெற்றிபெற்றாலும், வெளியில் எடுத்ததும் மீதப்பகுதிகளும் கருப்பாகி படம் மறைந்துபோனது. பின்னர், தகட்டில் பெட்ரோலியக் குழம்பைப் பூசி, படமெடுத்து, ஒளிபட்டு இறுகிய பகுதிகளைத்தவிர மற்றவற்றை எண்ணெய்யால் கழுவி நியப்ஸ் உருவாக்கிய செதுக்கப்பட்ட படமே கேமராவால் பதிவுசெய்யப்பட்ட உலகின் முதல்  படமாகும். ஆனால், இதற்கு, பல மணிகளிலிருந்து சிலநாட்கள்வரை படத்தைப் பதிவுசெய்யவேண்டியிருந்தது. நியப்சின் ஆய்வுகளைப் பயன்படுத்தி டாகெர் உருவாக்கிய முறையில் சில நிமிடங்களில் படமெடுக்க முடிந்ததால் அது உலகப் புகழ்பெற்றது. கிரேக்க மொழியில் ஒளி என்ற பொருளுடைய ஃபோட்டோ, வரைதல், எழுதுதல் என்ற பொருளுடைய க்ராஃபி ஆகிய சொற்களைக்கொண்டு, ஜான் ஹெர்ஷல் 1839இல் ஃபோட்டோஃக்ராஃப் என்ற சொல்லை உருவாக்கினார். கருப்பாக இருந்ததால் புகைப்படம், நிழற்படம் என்ற சொற்கள் முன்பு பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஒளிப்படம் என்பதே சரியான தமிழ்! (அதைப்போலவே, நிகழ்வதைப்  படமாகக்காட்டும் வீடியோவுக்கு நிகழ்படம் என்பதே பொருத்தம்!)

;