திருச்சிராப்பள்ளி, டிச.22- விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சி அஸ்ட்ரோ கிளப் சார்பில் ஞாயிறு அன்று திருச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் புதுதில்லி விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாநகர செயலாளர் மனோகர், அறிவியல் பலகை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார், திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் பாலா.பாரதி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: சூரிய ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான்பொருளில் விழுவதைத் தான் கிரகணம் என்கிறோம். சூரியனை நிலவு மறைத்து, அதன் நிழல் பூமியில் விழும் போது அது சூரிய கிரகணம் ஆகும். இதே போல் பூமியின் நிழல், முழு நிலவின் மீது விழுந்து, அது மறைவது சந்திர கிரகணம். வரும் 26ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வு தமிழ்நாட்டில் அற்புத சூரிய கிரகணமாக வருகிறது. அன்று காலை சுமார் 8:07 க்கு துவங்கும் கிரகணம் காலை 11:16 மணி வரை நிகழ்கிறது. அப்போது திருச்சி, திண்டுக்கல், கோவை, ஊட்டி திருப்பூர், கரூர், காரைக்குடி, புதுக்கோட்டை சிவகங்கை போன்ற இடங்களில் வானில் ஒரு அதிசய காட்சியாக காலை 9.31 மணி முதல் 9:33 மணி வரை சில நிமிடங்கள் வரை தீ வளையம் போல சூரியன் அற்புதமாக காட்சி தரும். சுமார் இரண்டு நிமிடம் வரை நெருப்பு வளையம் போல தென்படும் காட்சி இருக்கும். தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் பகுதி சூரிய கிரகணம் தெரியும். 26ந் தேதி அன்று பூமி சூரியனுக்கு அருகாமையில் இருக்கும். எனவே சூரியனின் தோற்றம் நிலவை விட சற்று பெரியதாகத் தெரியும். இதன் காரணமாக நிலவு முழுமையாக சூரியனை மறைக்க முடியாது. சூரியனின் விளிம்பு நிலவின் வட்டத்தை தாண்டி அமையும். எனவே தான் அன்றைக்கு வானில் நெருப்பு வளையம் போல தென்படும். இதை வளைய சூரியகிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என அழைக்கிறோம். இந்த அரிய வான் நிகழ்வை அனைவரும் பாதுகாப்பாகக் கண்டு களிக்க விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை, கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், இந்திய வானியல் கழகம் சார்பில் திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியில் உள்ள பாரதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கே.கே.நகர், எல்.ஐ.சி காலனி ஆர்சிஸ்ட் பள்ளி, நாகமங்கலம் கிரியாமெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.