திருச்சியில் இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் வேலை நிமித்த மாக நேற்று வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், மீரா ஜாஸ்மினின் செல்போன் டவரை வைத்து அவரது இருப்பிடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஆர்.பாளையம் அருகே உள்ள காப்பு காடு பகுதியில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்குச் சென்று தேடிப்பார்க்கையில் இளம் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில், எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தது காணாமல் போன இளம்பெண்ணின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்திட வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி வாலிபர் சங்கம், மாதர் சங்கம், உள்ளிட்ட சங்கங்கள் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
