tamilnadu

அரசுப் பேருந்தில் தவறவிட்ட பணம், பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

 திருப்பூர், ஜூன் 11 - திருப்பூரில் பேருந்தில் தவற விடப்பட்ட பணம் ரூ.11 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டை உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக எடுத்து வைத்து, உரியோரிடம் ஒப்படைத்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருப்பூர் மண்டலத்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செந்தில் குமார்.  திங்களன்று இவர் திருப்பூர் கணக்கம்பாளையம் எனும் ஊரில் இருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் எண் 38 வழித்தட மாநகரப் பேருந்தில் பணியில் இருந்தார். அப்போது பேருந்தின் முன்பகுதியில் பெண்கள் அமரும் இருக்கையின் பக்கவாட்டு பகுதியில் ஒரு கைப்பை கிடந்துள்ளது. செந்தில்குமார் அதை எடுத்துப்  பார்த்தபோது, உள்ளே ரூ.11,610 பணம் மற்றும் ஏடிஎம் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.  அதைத் தொடர்ந்து அந்த பையை எடுத்து பத்திரப்படுத்திய செந்தில்குமார் மற்றும் ஓட்டுநர் துரைசாமி இருவரும், அதை உரியவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இது தொடர்பாக வாட்ஸ்ஆப் சமூக ஊடகத்தில் தகவலை பகிர்ந்தனர். கைப்பையில் இருந்த ஒரு ரசீதில் புதுக்கோட்டையில் உள்ள நகைக்கடையின் அலைபேசி எண், வாடிக்கையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருந்துள்ளன. அந்த அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி, பணத்தை தவற விட்டவர் திருப்பூர் பாண்டியன் நகரில் வசித்து வரும் பெண் நளா என்பதைத் தெரிந்து கொண்டனர். பிறகு நளாவைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் செவ்வாயன்று திருப்பூர் பழைய பேருந்து  நிலையத்தில் வைத்து நளாவிடம் பணம், ஏடிம் அட்டை  உள்ளிட்டவற்றை அவர்கள் ஒப்படைத்தனர். அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநரின் பொறுப்பான இந்த  செயலுக்கு திருப்பூர் பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித் தனர். இது குறித்து நடத்துனர் செந்தில்குமார் கூறும்போது, பணத்தை தொலைத்த பயணி கணக்கம்பாளையம் பிரிவில் பேருந்தில் ஏறினார். பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். ஆனால் அவர் கைப்பையை தவற விட்டுச் சென்றது அதற்கு பிறகே தெரிந்தது. பணத்தின் மதிப்பு எங்களுக்கு தெரியும். தொலைத்தவரின் சிரமத்தை அறிந்து, அதை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணி, ஒப்ப டைத்தும் விட்டோம், என்றார்.