இரண்டு தினங்களுக்கு முன்பு பல்லடம் அருகில் உள்ள ஐயம்பாளையம் கிராமத்திற்கு சென்று விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் வேலுச்சாமியை சந்தித்தோம். “விசைத்தறி தொழில் நலிவடைந்து வருவதாக சொல்கிறார்கள்; உங்கள்வீட்டுக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் விசைத்தறி சத்தம் கேட்கிறதே” என்று உரையாடலை துவங்கினோம். “உண்மைதான் நான் என்னுடைய விசைத்தறிகளை நட்டத்திற்கு ஓட்டுகிறேன். கறிக்கோழி மற்றும்வேறு தொழிலில் கிடைக்கும் வருவாயை வைத்து விசைத்தறியை கௌரவத்திற்காக நடத்தி வருகிறேன். காரணம், சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு நானே விசைத்தறியை மூடிவிட முடியுமா” -எதிர்கேள்வி கேட்டார் வேலுச்சாமி.அவரோடு நானும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலு அவர்களும் அரை மணிநேரம் உரையாடினோம். அவர் சொன்ன விசயங்களை எழுதுவதற்கு முன் அடுத்த கிராமத்திற்கு சென்று அவர்சந்திக்க சொன்ன இன்னொரு விசைத்தறி உரிமையாளரின் துயரக்கதையை இங்கு விளக்குவது பொருத்தமாக இருக்கும்.
ஐயம்பாளையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு அருகில் சின்னய்ய கவுண்டம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் நடுத்தர வயதுள்ள செந்தாமரையை சந்தித்தோம். அவருடைய தந்தை தலைமைக்காவலராக பணியாற்றிக் கொண்டிருந்த போது 1988ல் திடீரென மரணமடைந்தார். கருணை அடிப்படையில் தனக்கு கான்ஸ்டபிள் வேலை கிடைத்து ஓராண்டு பயிற்சிக்கு சென்றதாக கூறினார். அப்போது தனக்குவயது 33 என்றும் பயிற்சியை தாக்கு பிடிக்க முடியாமல்வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டதாகவும் கூறினார்.இதனையடுத்து கோழிப்பண்ணை வைத்தார். நட்டத்தினால் அதனை மூடிவிட்டு 2008ல் பத்து லட்சம்ரூபாய் வங்கிக்கடன் பெற்று 12 விசைத்தறி இயந்திரங்களை வாங்கி இயக்கிவந்தார். ஒரளவுக்கு தொழிலில் லாபம் ஈட்டி வந்தார்.
இடியாய் இறங்கிய பணமதிப்பு நீக்கம்
2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை திட்டம் பேரிடியாய் செந்தாமரை மீது இறங்கியது.தனது தறிகளை இயக்கும் தொழிலாளர்களுக்கு கூலிகொடுக்க பணம் இல்லை. நூல் வாங்க பணம் இல்லை. நாளடைவில் தொழிலாளர்கள் வேலையை விட்டு நின்றுவிட்டார்கள். விசைத்தறியை இயக்கமுடியவில்லை. வருமானமும் இல்லை. குடும்பத்தை நடத்துவதே பெரும்பிரச்சனையாகிவிட்டது. வேறு வழியின்றி தன்னுடைய 12 விசைத்தறி இயந்திரங்களையும் உதிரி உதிரியாக பிரித்து பழைய இரும்புக்கடைக்கு விற்றுவிட்டார். செய்துகொண்டிருக்கும் தொழிலை கைவிடுவதும் இயந்திரங்களை பிரித்து உடைப்பதும் அதி பயங்கரமான மன வேதனைதரக்கூடியது. வேறு தொழில் தெரியாது; வேறு வேலையும் கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலை கைவிட்டுஇயந்திரங்களை விற்போரிடத்தில் அவற்றை விலைக்குவாங்கி உதிரி பாகங்களை பிரித்து விற்பதும் பயன்படாத சில பாகங்களை பழைய இரும்புக்கடைக்கு எடைபோட்டும் விற்கக்கூடிய தொழிலை செய்து குடும்பத்தை சிரமத்துடன் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது, செந்தாமரையின் மனைவி எங்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு இந்த துயரத்தில் இருந்து மீள உங்களால் ஏதாவது செய்ய முடியுமா என எங்களைப் பார்த்து கேட்டார்.நாங்கள் செந்தாமரையின் துயரக்கதையை கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த நேரத்தில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தலைவர் வேலுச்சாமி அங்கு வந்தார்.
5 ஆண்டாக அமலாகாத ஒப்பந்தம்
ஒருபகுதி கதையைத்தான் கூறினேன். மறுபகுதி கதையை விளக்குவதற்குத்தான் மீண்டும் வந்தேன் என வேலுச்சாமி பேசத் துவங்கினார்:“மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரிச்சட்டமும் விசைத்தறி தொழிலைமட்டுமல்ல; ஒட்டுமொத்த சிறுகுறு தொழில்களையே அழித்து வருகிறது. இந்த தொழில் நலிவிற்கு மாநிலத்தைஆளும் அதிமுகவிற்கும் பொறுப்பு உள்ளது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது விசைத்தறி வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது. தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சேர்ந்து நடத்திய போராட்டம் அது. அவசரஅவசரமாக ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் அரசின் சார்பில் ஒப்பந்தம் போட்டார்கள். அந்த ஒப்பந்தம் இதுவரையில் அமலாகவில்லை. ஒப்பந்தம் அமலாகி இருந்தால் ஒரு மீட்டர் துணிக்கு உரிமையாளர்களுக்கு 85 பைசாவும், கூலி தொழிலாளிக்கு 40 பைசாவும் கிடைத்திருக்கும். அன்றிலிருந்து நலிவடையத் துவங்கிய விசைத்தறித் தொழிலை பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி வரிச்சட்டமும் புதைகுழிக்குள் தள்ளியது.
விசைத்தறி உரிமையாளர்கள் வாங்கிய வங்கிக்கடன் ரூ.63 கோடியை திருப்பிச் செலுத்த முடியாத அவலநிலையே உள்ளது” திடீரென்று செந்தாமரை குறுக்கிட்டு, தான் வாங்கிய 10 லட்சம் ரூபாய் கடனை திருப்பிசெலுத்த முடியவில்லை என்றும் இப்போது அதற்கு வட்டியும் சேர்ந்து எத்தனை லட்சம் ஆகியிருக்கிறதோ என்று தன்னுடைய துயரத்தையும் தெரிவித்தார்.அவர்கள் மேலும் கூறுகிறார்கள் : “வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு சில முதலாளிகள் நாட்டைவிட்டே தப்பித்து ஓடிவிட்டனர். மத்திய அரசு கார்ப்பரேட்முதலாளிகள் வாங்கிய கடன் சுமார் ரூ.4 லட்சம் கோடியை ரத்து செய்துள்ளது. இதையெல்லாம் செய்தமத்திய அரசு, விசைத்தறி உரிமையாளர்கள் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாத 63 கோடி ரூபாய் கடனைரத்து செய்திட வேண்டும். கைத்தறிக்கு சில ரகங்களைஒதுக்கீடு செய்ததுபோல் விசைத்தறிக்கும் சில ரகங்களை ஒதுக்கீடு செய்து அரசு உதவி செய்தால்தான் எங்கள் தொழில் பிழைக்கும். நாடு முழுவதும் சுமார் 26 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும்6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. அதில் பெரும் பகுதி திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ளன.பணமதிப்பு நீக்க திட்டம் கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை: சிறுகுறு தொழிலைத்தான் நலிவடையச்செய்தது. கொஞ்சம் எழுந்து நிற்க முயற்சித்தபோது ஜிஎஸ்டி வரிச்சட்டம் மீண்டும் சிறுகுறு தொழில்களை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது.
வேதனையும் கொதிப்பும் அவர்களது வார்த்தைகளில் கொப்பளித்தன.விசைத்தறி தொழிலை நலிவடையச்செய்த மோடியும், எடப்பாடியும் இப்போது இணைந்து போட்டியிடுகிறார்கள்.பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடித்து கொள்கைகளில் மாற்றம் கண்டால்தான் விசைத்தறி தொழிலை மட்டுமல்ல இதர தொழில்களையும் பாதுகாக்க முடியும்.பாஜகவை தோற்கடிப்போம் தேசத்தை பாதுகாப்போம். அதிமுகவை தோற்கடிப்போம் தமிழகத்தை பாதுகாப்போம்.