tamilnadu

img

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை

மதுரை, ஜூன் 20 -  சாதி மறுப்புத் திருமணம்  செய்து கொண்ட மூன்று தம்பதிக ளுக்கு சாதி மறுப்புத் திருமண ஊக்கத்தொகை   வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் வழக்கறி ஞருமான ஆர். கிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:  திருநெல்வேலி மாவட்டம்   கம்மங்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் (பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்) நிவேதாவையும், சாத்தூரைச் சேர்ந்த செல்வின் தியாகராசன் (பட்டியல் சாதி யைச் சேர்ந்தவர் ) சரண்யா கனிமொழியையும் நாகர்கோவிலைச் சேர்ந்த நடேஷ் - மணிகண்டீஸ்வரி (பட்டியல் சாதியைச் சேர்ந்த வர்) யையும் சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் மூவரும் இந்துக்கள்.  மத்திய அரசின் சமூகநீதித் துறையின் சார்பில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நிறுவனம்  சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால் அந்தத் தம்பதிகளுக்கு ரூ.2.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்குகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று தம்பதிகளும் முறையாக சான்றுகள் பெற்று ஊக்கத்தொகை பெறுவதற்கு மனு செய்தி ருந்தனர். ஆனால் அந்தத் திருமணங்கள் சாஸ்திர சம்பிரதா யங்களுடன் உள்ள இந்து முறை திருமணம் அல்ல என்று டாக்டர் அம்பேத்கர் நிறுவனத்தால் அவர்களது கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.  எனவே இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழ்நாடு அரசு, இந்து திருமணம் சாஸ்திர சம்பிரதாயங்களுடன் தான் இருக்க வேண்டும் என்பது  அவசியமில்லையென சட்டத் திருத்தம் செய்துள்ளது. மாலை மாற்றிக் கொள்வது, மோதிரம் அணிந்து கொள்வது, தாலி கட்டுவது போன்ற முறைகளில் சீர்திருத்த திருமணம், சுயமரியாதை திருமணமும் இந்து சட்டப் படியான திருமணம் தான் என்பதை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட மூன்று தம்பதிகளுக்கும் ஊக்கத்தொகையை எட்டு  வார காலத்திற்குள் வழங்க வேண்டுமென கடந்த ஜூன் 4- ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளார்.