tamilnadu

img

இந்தியாவில் தண்ணீர் கீழிருந்து மேல் நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது – சாய்நாத்

(மக்சேசே விருது பெற்றவரும், இந்தியா மற்றும் உலக அளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவரும் விவசாயத்துறையில் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளருமான சாய்நாத் அவர்களுடன் இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நிலவுகின்ற கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து 2019 ஜூன் 06 அன்று இந்தியா டுடே தொலைக்காட்சி சார்பில் ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு )

 சாய்நாத் நீங்கள் இதில் கலந்து கொண்டதைப் பாராட்டுகின்றேன்.  உங்களிடம் சில எண்களைக் கூற வேண்டியிருக்கிறது. கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் 60 கோடி இந்திய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இரண்டு லட்சம் இந்தியர்கள் இறந்து போகின்றனர் என்று தகவல்கள் தரப்படுகின்றன. 21 இந்திய நகரங்கள் அடுத்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் தவிக்கப் போகின்றன என்று நிதி ஆயோக் கூறுகிறது. இது குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா அல்லது  இதைத்தான் நான்  நீண்ட காலமாக சொல்லி வந்திருக்கிறேனே என்று சொல்கிறீர்களா?

அது சரி, நீங்கள் சொன்னதை  மீண்டும் சொல்வதை நான் தவிர்த்து விடுகிறேன். ஏனென்றால், உண்மையில் இந்த எண்கள் எல்லாம் நமக்குத் தெரிந்திருப்பதைவிட இன்னும் மோசமான எண்ணிக்கையிலேயே இருக்கின்றன. நமது கொள்கை முடிவுகள் இந்த பாதையிலேயே  சென்று கொண்டு இருக்குமென்றால், இந்த எண்ணிக்கை மேலும் மோசமடையும் என்பதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே  இந்த எண்களை நாம் அங்கீகரிப்பதை விட, இப்படியொரு இக்கட்டான நிலைமைக்கு ஏன் நாம் வந்து சேர்ந்தோம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இந்த தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நெருக்கடியை அதிகரிக்க வைக்கின்ற காரணிகள் யாவை? அவற்றை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என்றே நான்  நினைக்கிறேன். சூடான காற்று, மண்டையைப் பிளக்கிற வெயில் என்று இருக்கின்ற மே மற்றும் ஜூன் மாத ஆரம்பத்தில்தான் ஊடகங்கள் விழித்தெழுந்து கொண்டு வறட்சியைப் பற்றி எழுதவோ, பேசவோ ஆரம்பிக்கின்றன. மாபெரும் தண்ணீர் பற்றாக்குறையே இந்த நாட்டில் நம்மிடையே இருக்கின்ற உண்மையான பிரச்சனை. உண்மையில் இது  இங்கே நிலவுகின்ற வறட்சியைவிட மிகப் பெரியது. ஒரு கொலையாளியாக, முதுகுத் தண்டை ஒடிப்பதாக இந்த வறட்சி இருக்கிறது. மாபெரும் தண்ணீர் பற்றாக்குறையின் ஓர் அங்கமாகவே இந்த வறட்சி என்பது இருக்கிறது. மகாராஷ்டிராவிலும், சில அண்டை மாநிலங்களிலும் இருக்கின்ற  மிகக் கடுமையான வறட்சியைப் பற்றி  பேசுவதற்கு முன்னால், வறட்சிக்கும், இந்த தண்ணீர் பற்றாக்குறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த வறட்சி என்பது ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தொடங்குவதில்லை. குறைந்தபட்சம் 2018 அக்டோபரில் இருந்தே வறட்சி இருந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளைப் பார்த்தாலே இது தெரிய வரும். மழைக்காலத்திற்குப் பிந்தைய மழைப் பொழிவு குறித்த தரவுகளைக் கவனித்துப் பார்த்தால்,  அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான இந்த மழைக்காலத்திற்குப் பிந்தைய மழைப்பொழிவின் பற்றாக்குறை மராத்வாடாவில் 84 சதவிகிதம், விதர்பாவில் 88 சதவிகிதம், வடக்கு கர்நாடகாவில் 85 சதவிகிதம் என்றிருப்பதை நாம் அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே மழைக்காலத்திற்குப் பிறகான மழைப்பொழிவில் பற்றாக்குறை  என்பது பெரிய  அளவிலே இருந்து வருவது நமக்குத் தெரிய வரும்.

ஆனால் இப்போது அரசியல் காரணங்களுக்காக இயல்புக்கு நெருக்கமான அளவில் மழைப்பொழிவு என்று புதிய வார்த்தைகளை நாம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.  இதைப் பற்றி பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இயல்புக்கு நெருக்கமான என்றொரு வகையே உண்மையில் இல்லை. மழைப்பொழிவு என்பது பற்றாக்குறையாக அல்லது உபரியாக மட்டுமே இருக்க முடியும். இயல்புக்கு நெருக்கமான மழைப்பொழிவு என்ற வார்த்தை இந்த தேர்தல் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.  அதை இயல்புக்கு நெருக்கமான மழைப்பொழிவு என்றே அவர்கள்  அழைத்தாலும், உண்மையில் மழைப்பொழிவு சராசரியாக 9  சதவிகிதம் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இந்த 9 சதவிகிதம் என்பது ஒரு தேசிய சராசரி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த  சராசரி பற்றாக்குறை மழைப்பொழிவு அளவைப் பிரித்து இடம் வாரியாகப் பார்த்தால், அந்தப் பற்றாக்குறை  மராத்வாடாவில்  24 முதல் 25%,தெலுங்கானாவில் 25% முதல் 30%,  விதர்பாவில் 25% முதல் 30%  என்பதாக அதிக அளவில் இருக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக பற்றாக்குறை இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் வெடித்து விடக் கூடிய பிரச்சனை மீது உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்கள் அரசியல்ரீதியான வார்த்தைகளின் மூலம் அங்கேயே உட்கார்ந்து இருந்து விடலாம் என்று முயற்சிக்கிறீர்கள்.

வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு இடையேயான முக்கியமான வேறுபாட்டை நீங்கள் விளக்கியிருக்கிறீர்கள்.  பருவமழை தோல்வியடைவதால் அல்லது அவர்கள் சொல்வது போல இயல்புக்கு நெருக்கமான மழைப் பொழிவு காரணமாக வறட்சி ஏற்படுகிறது. கடைசியில் பார்த்தால் நீங்கள் குறிப்பிடுகிற இந்த பெரிய அளவிலான தண்ணீர் பற்றாக்குறை  என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பற்றாக்குறையாகவே தோன்றுகிறது. எனவே குற்றம் என்பது நம் மீதுதானே...

நிச்சயமாக.  மனிதர்களின் செயல்பாடுகளே இந்த பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்கின்றன. வறட்சியின் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிட மாட்டேன். 2016  டிசம்பரில் வறட்சியை மதிப்பிடுவதற்காக மத்திய அரசின் திருத்தப்பட்ட வறட்சி குறித்த கையேடு வெளியிடப்பட்டது வறட்சி என்பதை வரையறுக்கவும், அறிவிக்கவும் மாநில அரசாங்கங்களிடம் இருந்த அதிகாரங்களை அந்த திருத்தங்கள் பறித்துக் கொண்டன.  எனவேதான் இந்த எண்கள் அனைத்தும் உண்மை நிலைமைக்கு மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டு அறிவிக்கப்படுவதாக நான் கூறுகிறேன்.  திருத்தப்பட்ட அந்த வறட்சிக்கான கையேட்டில் உள்ளவாறு பார்த்தால், ஒரு மாநில அரசாங்கம் 300 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். மகாராஷ்ட்ரா 151 தாலுகாக்களில் வறட்சி என்று மட்டுமே அறிவிக்கிறது.

இந்த மாபெரும் தண்ணீர் பற்றாக்குறையும், வறட்சியும் தீவிரமான பிரச்சினைகள்தான். அவை உண்மையில் பெரும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன. ஏழை மக்களிடமிருந்து அதிக சலுகை பெற்றிருக்கும் மக்களுக்கு, விளிம்புநிலையில் வாழ்பவர்களிடமிருந்து மிகவும் வசதியான நிலையில் வாழ்பவர்களுக்கு தண்ணீரை அன்றாடம் இடம் மாற்றுவதாலேயே இந்த மாபெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஐந்து வகையான தண்ணீர் இடமாற்றங்கள் இத்தகைய தண்ணீர் பற்றாக்குறையை உருவாக்குகின்றன. அன்றாடம் நடக்கின்ற  இந்த இடமாற்றங்கள் பின்வாசல் வழியாக தண்ணீரை தனியார்மயமாக்குவதற்குத் துணை நிற்கின்றன. 

முதல் வகையான இடமாற்றம் என்பது விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு தண்ணீரை இடமாற்றம் செய்வதாக இருக்கிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி 14 பேர் இறந்தனர். இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் 1000 லிட்டர் தண்ணீரை 10 ரூபாய்க்கு பெற்றுக் கொண்டது. ஆனால் அந்த ஸ்டெர்லைட்டைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்த பெண்கள் 10 ரூபாய் கொடுத்து 25 லிட்டர் தண்ணீரைப் பெறுவதற்காக, தங்களுடைய பணத்தைச் சேமிப்பதற்காக பிளாஸ்டிக் குடங்களைச் சுமந்து கொண்டு மிக நீண்ட தூரம் நடந்து செல்கின்றனர். நாடெங்கிலும் இவ்வாறான தண்ணீர் இடமாற்றம் நடந்து கொண்டுதானிருக்கிறது. மகாராஷ்ட்ராவில் 2011ஆம் ஆண்டு பிம்பிரி சின்ச்வாட்டில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பாசன நீரை பாட்டில் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்துப் போராடிய 5 அல்லது 6 விவசாயிகள்  சுட்டுக் கொல்லப்பட்டது உங்களுடைய நினைவில் இருக்கும். 

இரண்டாவது வகையான தண்ணீர் இடமாற்றம் எப்படி நடைபெறுகிறது? வேளாண்மையிலிருந்து தொழில்துறைக்கு முதல் வகை தண்ணீர் இடமாற்றம் நடைபெறுவதாக கூறினீர்கள். விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரை தொழிற்சாலைகள் எடுத்துக் கொள்வதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தப் பற்றாக்குறையை இன்னும் மோசமாக்கும் வகையிலான இரண்டாம் வகை தண்ணீர் இடமாற்றம் எவ்வாறு நடக்கிறது?

இரண்டாவது வகையான தண்ணீர் இடமாற்றம் என்பது விவசாயத்திற்குள்ளேயே, அதாவது உணவுப் பயிரில் இருந்து பணப் பயிருக்கு தண்ணீரை இடமாற்றம் செய்வதாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் என்றைக்கும் தீராத பிரச்சனையாக இருக்கின்ற விஷயத்திற்கு நாம் இப்போது திரும்புவோம். கரும்பு பயிர் ஏராளமான தண்ணீரை எடுத்துக் கொள்வதை மக்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடுவதற்கு 18 மில்லியன் முதல் 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது ஏறத்தாழ 12 ஏக்கர் நிலத்தில் கம்பு, சோளம் பயிரிடுவதற்குத் தேவையான தண்ணீரின் அளவாகும்.

ஆனால் வறட்சி பற்றியும், தண்ணீர் பற்றக்குறையைப் போக்குவதற்கு பயிர் வகைகளை மாற்றி பயிரிட வேண்டுமா என்று இந்தியா டுடே பத்திரிகை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸிடம் கேள்வி எழுப்பிய போது அவர் அளித்த பதிலை நீங்கள் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குறைவான நீர் தேவைப்படும் பயிர்களுக்கு கரும்பு விவசாயிகள் மாற வேண்டும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று முதல்வர் எங்களிடம் கூறினார். சாய்நாத் அவர் கூறியதைக் கேளுங்கள். அதன் பிறகு நான் உங்கள் பதிலைப் பெறுகிறேன்.

பட்னாவிஸ் (மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சர்): திடீரென கரும்பு பயிரிடக் கூடாது என்று சொல்லி நாம் கரும்பு விவசாயிகளைப் பயமுறுத்த முடியாது. ஏனென்றால், கரும்பு நீடித்து நிற்கும் பயிராகும். அது பல ஆண்டு பயிர் ஆக இருக்கிறது. பருவம் தவறிய மழை அல்லது வேறு பல காரணங்களால் கரும்பு சாகுபடி ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. கரும்புக்கென்று பலமான சந்தை இருக்கிறது. அதனால்தான் விவசாயிகள் கரும்பை விரும்பி பயிரிடுகிறார்கள். நான் அதை முற்றிலும் சரி என்று கூறவில்லை. கரும்பு அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர். சொட்டு நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்கள் இப்போது நம்மிடம் இருக்கின்றன. ஆரம்பத்தில் மக்கள் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்த தயங்கினர் என்பதே உண்மை.

இது மகாராஷ்டிரா முதலமைச்சர் கூறியது. இப்போது பதில் சொல்லுங்கள். அதிகம் தண்ணீர் தேவைப்படுகின்ற பயிரில் இருந்து விவசாயிகளை எவ்வாறு மாற்றுவது?

விவசாயிகளிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதில் உள்ள சிரமம் என்பதாக அவரது கருத்தைப் புரிந்து கொள்கிறேன் ஆனால் நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். கரும்பு சாகுபடி குறித்து பயமுறுத்துவதில் எனக்கும் ஆர்வமில்லை. கரும்பே சாகுபடி செய்யக் கூடாது என்றும் நான் கூற மாட்டேன். ஆனால் வறட்சி வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள வறண்ட நிலத்தில் மிகப் பெரிய அளவில் கரும்பு சாகுபடி செய்வது என்பது ஆர்க்டிக் பிரதேசத்தில் காபி மற்றும் மிளகு போன்றவற்றை வளர்ப்பதற்கு முயற்சி செய்வதற்கு ஒப்பானது என்றே நான் கருதுகின்றேன். வற்றாத நதி, பெருமளவில் நீராதாரம் உள்ள பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்வதில் பிரச்சனை எதுவுமில்லை. அந்தப் பகுதிகளில் கரும்பைச் சாகுபடி செய்யலாம். ஆனால் மராத்வாடாவில் அதைச் செய்வது சரியல்ல. அதுமட்டுமல்ல… கரும்பு சாகுபடியானது அனைத்து மனிதர்களையும் பாதிப்பதாக இருக்கிறது, மற்ற உயிரினங்களையும் பாதிக்கிறது, பிற உணவுப் பயிர்களைப் பாதிக்கிறது. மொத்த விவசாயிகளில் கரும்பு விவசாயிகளின் சதவிகிதம் என்ன என்று கனக்கிட்டுப் பாருங்கள். இன்று மகாராஷ்டிராவில் பாசனத்திற்காகப் பயன்படுகின்ற நீரில் 68 சதவிகிதமானது 4% விவசாயிகளால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், மற்ற விவசாயிகளின் நிலை என்ன? இந்த விவசாயிகள் எவ்வாறு விவசாயம் செய்ய முடியும்? மீதமுள்ள இந்த 96 சதவிகித விவசாயிகளின் கருத்தை, அவர்கள் செய்ய விரும்புவதை பட்னாவிஸ் உண்மையில் மதிக்கிறாரா? அது குறித்தும் நாம் விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சாய்நாத், இதுவரை கிராமப்புற இந்தியாவை நாம் பார்த்தோம். ஆனால் இப்போது வேறு பெரிய நெருக்கடியை நான் உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நமது நகரங்கள் வறண்டு போய் இருக்கின்றன. தண்ணீர் பிரச்சனை நம் அனைவரையும் ஒன்றாக இணைத்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். டெல்லி, ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களை நம்மால் பார்க்க முடிகிறது. கிராமப்புறம் அல்லது நகர்ப்புறம் என்று நாம் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், தண்ணீர் தட்டுப்பாடு என்பது  அவ்வாறான பிரிவினை எதுவும் இல்லாமல் நிரந்தரமாக நம்மிடையே இருப்பதாகத் தெரிகிறதே.

கிராமப்புற நகர்ப்புற பிரிவினைகளைப் பார்ப்பதற்கு முன், மூன்றாவது வகையான தண்ணீர் இடமாற்றம் என்பது கிராமப்புறத்தில் இருந்து நகர்ப்புறத்திற்கு தண்ணீர் இடம் மாறுவதாக இருப்பதை நாம் காண வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புறங்களை விட அங்கிருக்கும் நகரங்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளுக்கு 400 மடங்கு அதிக குடிநீர் கிடைப்பதாக தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட   தகவல்கள் கூறுன்றன. கிராமப்பகுதிகளில் இருப்பவர்களுக்கு தாகம் இருப்பதில்லையா, இல்லை அவர்கள் மிகக் குறைந்த உடல் உழைப்பை செய்பவர்களாக இருக்கிறார்களா அல்லது அவர்களின் உடலில் இருந்து மிகக் குறைவான தண்ணீரே வெளியேறுகிறதா? இல்லை, நிச்சயமாக இல்லை. எனவே நகர்ப்புற மகாராஷ்டிரா தங்கள் கிராமப்புறங்களை விட 400% அதிகமான தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறது. அதாவது இங்கே நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கிடையே தண்ணீரைப் பகிந்து கொள்வதில் அதிக இடைவெளி இருக்கிறது. ஆக இந்த தண்ணீர் இடமாற்றம் இந்த இடைவெளிகளை அதிகரிக்கச் செய்கிறது என்று நீங்கள் சொல்வது சரிதான்.

ஏழை மற்றும் பணக்காரர்களுக்கிடையே இடைவெளி இருக்கிறது. மலபார் ஹில், கஃப் பரேட் போன்ற பகுதிகளில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு கிடைக்கின்ற தண்ணீரின் அளவு என்பதை இப்போது பார்க்கலாம். மும்பையின் ஒரு பக்கத்தில் 500 அல்லது 600 லிட்டர் தண்ணீர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு என்ற அளவிலும், பிற பகுதிகளில் 60 அல்லது 70 லிட்டர் என்ற அளவிலும்,ஏறத்தாழ 200 முதல் 300% வரை வித்தியாசத்துடனே  தண்ணீர் கிடைக்கிறது. கிராமப் பகுதிகளுக்குச் சென்றால் இவ்வாறு வர்க்கங்களுக்கிடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பதை உங்களால் காண முடியும். அவுரங்காபாத், பீட், உஸ்மானாபாத் போன்ற கிராமப்புறப் பகுதிகளில் நீண்ட வரிசையில் தண்ணீர் லாரிகளுக்கு அருகில் காத்து நிற்கும் ஏழைப் பெண்களை உங்களுடைய தொலைக்காட்சி காமிராக்கள் ஒவ்வொரு ஆண்டும் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பெண்கள் ஒரு லிட்டர் தண்ணீருக்காக எவ்வளவு பணம் செலவழிக்கிறார்கள் என்பதை  நம்மில் எவ்வளவு பேர் கேட்டிருப்போம் என்று தெரியாது. பருவகாலத்தின் ஆரம்பத்தில் அவர்கள் லிட்டருக்கு 45 பைசா கொடுக்கிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தில் இருக்கின்ற காலத்தில் அவர்கள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த  வரிசையில் 4 மணி நேரம் அவர்கள் காத்துக் கொண்டு நிற்பதற்கான செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்…அது அந்த தண்ணீருக்கு ஆகின்ற செலவவை விட அதிகமாகவே இருக்கும்.

ராஜ்தீப், அதே மராத்வாடாவில் 24 பீர் மற்றும் ஆல்கஹால் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு ஒரு நாளைக்கு 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அந்த ஏழைப் பெண்களுக்கு தண்ணீர் வழங்குகின்ற அதே அரசாங்கம்தான் அதே தண்ணீரை, தண்ணீரை லிட்டர் 4 பைசா என்ற விலைக்கு இந்த தொழிற்சாலைகளுக்குத் தந்து கொண்டிருக்கிறது. பம்பாய் உயர்நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்து, ஒரு வருடத்திற்கு இவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவைப் பாதியாகக் குறைத்து ஒதுக்கீடு செய்தது உங்கள் நினைவில் இருக்கிறதா? அப்படியொரு வறட்சி ஆண்டில்தான் பம்பாய் உயர்நீதிமன்றம் மகாராஷ்டிராவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான தடையையும் விதித்தது. ஆல்கஹால் தொழிற்சாலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 பைசா செலுத்துகிற வேளையில், அந்த ஏழைப் பெண்கள் இருபத்தைந்து மடங்கு அதிகமாக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு ஒரு ரூபாய் என்ற அளவில் அதாவது 100 பைசா செலுத்துகிறார்கள்..

ஐந்தாவது வகை இடமாற்றம் என்பது வாழ்வாதாரத்திலிருந்து சொகுசு வாழ்க்கை முறைக்கு தண்ணீரை இடமாற்றம் செய்வதாக இருக்கிறது. உதாரணமாக மும்பையில் போரிவாலி பகுதிக்குச் சென்றால்… மும்பை மட்டுமல்லாமல் புனேயிலும் பெரிய பெரிய வளாகங்கள் கட்டப்படுகின்றன. 30-40 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  ஒவ்வொரு மாடியிலும் ஒரு நீச்சல் குளத்துடன் இருப்பதாக அந்த வளாகங்கள் கட்டப்படுகின்றன. என் வார்த்தைகளை நீங்கள் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். செய்தித்தாள்களைப் பிரித்து அதில் வருகின்ற விளம்பரங்களில் உள்ள படங்களைப் பார்த்து நீங்களே அதை அறிந்து கொள்ள முடியும். ஒரே வளாகத்தில் 100 முதல் 150 சிறிய நீச்சல் குளங்கள்கூட இருக்கக் கூடும். அப்படி என்றால் அங்கே உபயோகிக்கப்படும் தண்ணீரின் அளவு எவ்வளவு இருக்கும்?

இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகின்ற பணியாளர்கள் யார்? அவர்களிடம் போய் நீங்கள் யார், இங்கே என்ன செய்கிறீர்கள், ஏன் உங்கள் கிராமத்திலேயே நீங்கள் இருக்கவில்லை என்று கேட்டால், விவசாயம் செய்வதற்கான தண்ணீர் கிராமத்தில் எங்கே இருக்கிறது என்று அவர்கள் நம்மிடம் திரும்பக் கேட்கிறார்கள். கிராமத்தில் தண்ணீர் இல்லை என்பதால், விவசாயத்தைக் கைவிட்டு விட்டு அவர்கள் இங்கே வந்து உங்களுக்கும் எனக்கும் நீச்சல் குளம் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை விவசாய நிலத்திலிருந்து கோல்ஃப் மைதானத்திற்கான தண்ணீர் இடமாற்றம் என்றும் சொல்லலாம் கோல்ஃப் விளையாட்டு. வேறெந்த விளையாட்டு நிகழ்வுகளையும் விட மிக அதிகமாக தண்ணீர் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாக இருக்கிறது. ஆக இந்த ஐந்து வகையான தண்ணீர் இடமாற்றங்கள்  ஏழைகளிடமிருந்து வசதி படைத்தவர்களுக்கு தண்ணீரைத் தள்ளி விடுவதை நாம் காண்கிறோம். பின்வாசல் வழியாக தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதற்கு முன்னோடியாக இருந்த மகாராஷ்டிரா தவிர, சந்திரபூர், நாக்பூர் போன்ற நகரங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பாக தனியார்மயத்திற்கு கதவைத் திறந்து விட்டிருக்கின்றன. ஆக இந்தியாவில் ஏழைகளிடமிருந்து பணக்காரர் என்று கீழிருந்து மேல் நோக்கி தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கின்றது.

வாழ்வாதாரத்தில் இருந்து சொகுசு வாழ்க்கை முறைக்கு என்று மிக அழகாகச் சொன்னீர்கள். ஆனால் சாய்நாத் இவையெல்லாம் தவிர வேறொரு வகையிலும் தண்ணீர் இடமாற்றம் செய்யப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக அல்லாமல், செழித்து வளர்ந்து வருகின்ற தனியார் டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர்காரர்களால் நடத்தப்படுகின்ற மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் தனியார் டேங்கர் லாரிகளை நாடெங்கிலும் சுற்றி வருகின்ற எமது நிருபர்கள் காண்கின்றனர். இது இப்போதைக்கு மாறப் போவதில்லை என்றே தோன்றுகிறது.

இன்றைய நிலைமையில் மகாராஷ்டிரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இரண்டு தொழில்கள் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. ஒன்று இந்த டேங்கர் லாரி தொழில் மற்றொன்று ஆழ்துளைக் கிணறு அமைக்கின்ற தொழில். நாட்டின் பிற பகுதிகளை விட மிக அதிகமாக மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது நடைபெற்று வருகின்றது. டேங்கர் லாரி மாபியா என்பது மகாராஷ்டிரா தயாரிப்பாக உள்ளூரிலேயே நடைபெறும் தொழிலாக நடைபெற்று வருகிறது. இந்த டேங்கர் லாரிகளைப் பற்றி இப்போது நான் உங்கள் பார்வையாளர்களுக்கு அவசியம் விளக்க வேண்டும். இந்த லாரிகளில் உள்ள தொட்டிகள், அடிப்படையில் 10000 லிட்டர் டேங்கர்கள் மூன்று 3.5மிமீ தடிமனான மெல்லிய ரோலிங் எஃகு தகடுகளைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. இது கொஞ்சம் பழைய தகவல்தான் என்ராலும், 2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜல்னா நகரத்தில் மட்டும் தண்ணீரை இவ்வாறு இடமாற்றம் செய்ததன் மூலம் குறைந்தபட்சம் 80 லட்சம் ரூபாய் இவர்கள் சம்பாதித்திருக்கின்றனர்.  மிகப் பெரிய டாங்கர்கள் தொழில்துறைக்குச் சென்று விடுகின்றன. சேவை செய்கின்ற என்ற வார்த்தையை நான் பயன்படுத்த முடியும் என்றால், 5000 லிட்டர், 2000 லிட்டர், 1000 லிட்டர் என்று சிறிய டேங்கர்களே பொதுமக்களுக்குச் சேவை செய்கின்றன. இவர்களில் பலரும் சட்டமன்ற உறுப்பினர்களாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களாக, எந்தவித வேறுபாடுகளுமின்றி பிரதான அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அகமது நகர் மாவட்டத்தில் உள்ள அகமது நகர் டவுன் அருகில் உள்ள ரகுரி நகரம், டேங்கர்களுக்கான இந்த தகடுகளைத் தயாரிக்கின்ற மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக இருக்கிறது. மதிப்பிடுவதற்காக ஜல்னா நகரை எடுத்துக் கொண்டால், 6-7 மாதங்களில் இங்கு மட்டும் ஏறத்தாழ ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு இந்த வணிகம் நடைபெறுகிறது. 2015, 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிரா எனப்படும் ஒரு பெரிய மாநிலத்தில் ஜல்னா என்றொரு நகரில் மட்டும் இவ்வளவு பெரிய அளவில் வணிகம் நடைபெற்றிருக்கிறது என்றால், இப்போது கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? இதை நாம் எப்பாடியாவது தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

ஒரு நிமிடம்… இனிமேல் நாம் மீள முடியாது என்ற உணர்வு என்னிடம் இருக்கிறது. அவ்வாறு நான் சொல்லலாம் அல்லவா? நீங்களும் நானும் வறட்சி மிகுந்திருந்த கடந்த காலங்களிலும் இது பற்றி விவாதித்திருக்கிறோம். இந்தப் பிரச்சனைக்கு உண்மையான தீர்வுகள் ஏதேனும் இருக்கின்றனவா? இந்த மீள முடியாத நிலைமைக்கு நாம் ஏன் வந்தடைந்திருக்கிறோம்?

நிலத்தடி நீர் முன்னர் இருந்த அளவிற்கு மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இனிமேல் இல்லை என்ற நிலைமைக்கு நாம் வந்து விட்டோம் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் நிலத்தடி நீரை மீட்டெடுப்பதற்கு இனி சாத்தியமில்லை. ஆனாலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக் கண்டடைவதற்குத் தேவையான அடிப்படை கேள்விகளை நாம் கேட்க வேண்டும். பிற வகையான தீர்வுகள் இருக்கவே செய்கின்றன. அதை எவ்வாறு நாம் முடிவு செய்வது? தண்ணீர் என்பது சந்தைப்படுத்தப்படுவது, விற்பனைக்கு உகந்தது, லாபம் தருவது, வணிக ரீதியான பண்டம் என்பதாக முடிவு செய்வதா அல்லது அது மனிதர்களின் அடிப்படை உரிமை, நம்முடன் இந்தப் பூமியைப் பகிர்ந்துகொள்ளும் கோடிக்கணக்கான பிற உயிரினங்களுக்குமான உரிமை என்பதாக முடிவு செய்வதா? மனிதர்களால் மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை. தண்ணீர் இல்லாததால் மகாராஷ்டிராவில் கால்நடைகள் இறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தேவதை கதைகளில் சொல்லி இருப்பதைப் போன்று பத்து மாடுகள், கொய்யா தோட்டம் வைத்திருக்கும் கிராமப்புற இந்தியாவிலுள்ள ஒருவர் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டி முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொண்டால், மாடுகள், கொய்யா தோட்டம் இரண்டிற்கும் தேவையான அளவு தண்ணீர் இல்லை என்பதால், அந்த மாடுகளை உயிருடன் காப்பாற்ற முடிவு செய்கிற அவர் தோட்டத்தை அழித்து விடுகிறார். தண்ணீர் என்பதை ஒருவர் தனக்கென்று தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாடலாமா என்ற கேள்வி இப்போது எழுகிறது. 

தண்ணீர் குறித்து எழுந்திருக்கும் நெருக்கடிக்கான தீர்வாக, வருமானத்தின் அடிப்படையில் இல்லாமல் இந்திய குடிமக்கள் அனைவரும் தண்ணீர் பெறுவது என்பது  அவர்களுக்குரிய அடிப்படை உரிமை என்று மாற்றுவதே இருக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

நிச்சயம். குடிமக்கள் ஒவ்வொருக்கும் குறைந்தபட்சம் கிடைக்க வேண்டிய அளவு தண்ணீரின் குறைந்தபட்சத் தேவையை உறுதி செய்வதன் மூலமாக, தண்ணீர் பற்றாக்குறையால் கொழித்துக் கொண்டிருக்கும் சந்தையை, டேங்கர் மாஃபியாவை, ஆழ்துளைக் கிணற்றுத் தொழிலை நாம் ஒழித்து விட முடியும். ராஜ்தீப்…பல நாடுகளிலும் செய்திருப்பதைப் போல சட்டப்பூர்வமாக இதனை உறுதிப்படுத்துவதன் மூலமாக ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச அளவு தண்ணீர் நிச்சயம் கிடைக்கும். அரசின் தலையீடு இருந்தால், இவ்வகையான கொள்ளைகளுக்கான சாத்தியம் இருக்காது. உணவுக்கும் இது போலச் செய்யலாம். குறைந்த மக்கள்தொகை கொண்ட உருகுவே என்ற மிகச் சிறிய, மும்பை நாடாளுமன்ற தொகுதி அளவிலான நாடு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. தண்ணீரை தனியார்மயமாக்குகின்ற பிரச்சினையாலேயே லத்தீன் அமெரிக்காவில் இருந்த  பெரும்பாலான அரசாங்கங்கள் வீழ்ந்தன. ஆனால் இங்கேயோ இவ்வாறு இடமாற்றம் செய்வதன் மூலம் பின்கதவு வழியாக இவர்கள் புத்திசாலித்தனமாக தண்ணீரை தனியார்மயமாக்குகிறார்கள். உருகுவே நடத்திய வாக்கெடுப்பில் 70% மக்கள் தண்ணீர் பெறுவது அடிப்படை மனித உரிமை, தண்ணீர் ஒருபோதும் தனியாரின் சொத்தாக இருக்க முடியாது என்று வாக்களித்தனர். 2002, 2003இல் அவர்கள் அந்த வாக்கெடுப்புக்கு வழிவகுத்தனர். மற்ற நாடுகளும் தண்ணீர் குறித்து மக்களுக்கிருக்கும் உரிமை பற்றி குறிப்பிட்ட சில ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன. எனவே இது ஏதோ செய்ய முடியாத காரியம், நம்மால் முடியாது என்பதாக தயவுசெய்து நாம் பாவனை காட்ட வேண்டாம், பிற நாடுகளில் அது செய்து காட்டப்பட்டிருக்கிறது. நம்மாலும் அதைச் செய்ய முடியும்.

இல்லை..இல்லை. நான் அப்படிச் சொல்லவில்லை. தண்ணீருக்கான அடிப்படை உரிமை என்பதாக மாற்றுவதன் மூலம், இந்த தண்ணீர் பற்றாக்குறை மூலமாகப் பலன் அடைந்துள்ள, அரசியல் ஆதரவுடன் இருக்கின்ற இந்த டேங்கர் மாபியாவின் பிடியில் இருந்து மக்களைத் தப்பிக்க வைக்குமா? ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல வேலையைத் தக்க வைத்துக் கொள்ளத்தானே நினைப்பார்கள்?

தண்ணீரைப் பெறுவது அடிப்படை உரிமை என்றாக்கும் போது, பற்றாக்குறை சந்தைக்கான தேவையை நீங்கள் குறைத்து விடுகிறீர்கள். பற்றாக்குறை சந்தைக்கான தேவை குறைந்தாலும், அந்தப் பற்றாக்குறையை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு தினந்தோறும் தேவையான குறைந்தபட்ச தண்ணீர்  கிடைக்குமென்றால், அது அந்த சந்தையின் மீது பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும். மற்றொரு விஷயத்தையும் மறந்து விடக் கூடாது. இந்த பிரச்சனையில் காலநிலை குறித்த பார்வையும் இருக்கிறது. கிணறுகள் வற்றிப் போகும் போது, அது மண்ணின் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. நிலத்தடி நீரை மீட்டெடுப்பதற்கு எதையும் செய்யாமலேயே நாம் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் நீரை நிலத்திலிருந்து உறிஞ்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு செய்வது காலநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு நமது மண்வளத்தையும் பாதிக்கின்றது.

இந்தியாவில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுத் தொழில் என்பது உலக அளவில் மிகப் பெரியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஈரோடு அருகே உள்ள நகரத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுத் தொழிலின் மூலம், 16 ஆபிரிக்க நாடுகளிலும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும், ராஜஸ்தானில் இருந்து சிரபுஞ்சி வரைக்கும் உள்ள அனைத்து இடங்களிலும், ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 200 கோடி அடி ஆழத்திற்கு பூமியில் துளையிடப்பட்டு நீர் உறிஞ்சப்படுகிறது. இதுபோன்ற தொழில் இப்போது பஞ்சாப், குஜராத் போன்ற இடங்களிலும் வரத் தொடங்கியிருக்கின்றது. இதுபோன்று நிலத்தடி நீரை வெளியேற்றுவதில் நாம் பித்துப் பிடித்தவர்களாக மாறியிருக்கிறோம். பாசனத்திற்காகப் பயன்படுகின்ற நீரில் ஏறத்தாழ 60% நீரை நாம் நிலத்தடியில் இருந்தே எடுத்து வருகிறோம்.

கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன். வறட்சி என்பதை வெறுமனே மழை பற்றாக்குறையால் ஏற்படுகின்ற நிகழ்வாக மட்டுமே காணாதீர்கள். அது ஒருவகை வறட்சி. வானிலை தொடர்பான வறட்சியாக மட்டுமே அது இருக்கிறது. வறட்சி என்பது நீர்வள வறட்சி என்றும், வேளாண் வறட்சி என்றும் 5, 6 வகைகளில் பல்வேறு வடிவங்களில் ஏற்படுகின்றது. இவையனைத்தும் சேர்ந்துதான் நான் இப்போது பேசிக் கொண்டிருக்கின்ற இந்த மாபெரும் தண்ணீர் பற்றாக்குறையை உருவாக்கி இருக்கின்றன.  

அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தண்ணீரை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்ற உங்களுடைய சுவாரஸ்யமான கருத்துக்கே நான் மீண்டும் வருகிறேன். இதற்கு நாம் நேர்மையாக பதிலளிப்போம். நீச்சல்குளம் கொண்ட அடுக்குமாடி கட்டிட உரிமையாளர்கள் தண்ணீரை குடியிருப்பு பகுதிகளில் வாழ்பவர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்ள முன்வருவார்களா? பணம் கொடுத்து தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கும் சமமாக தண்ணீரை வழங்க தனியார் டேங்கர் லாரிகள் முன்வருமா? தண்ணீர் மீது சமமான அடிப்படை உரிமை அனைத்து குடிமக்களுக்கும் இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசுகின்ற உலகத்தில் இருந்து நிஜ உலகம் விலகி நிற்கவில்லையா? நீங்கள் ஒரு லட்சியவாத கோட்பாட்டு உலகைப் பற்றி பேசுகிறீர்கள். நிஜ உலகம் அதை ஏற்றுக் கொள்ளுமா?

உணவை நீங்கள் அடிப்படை உரிமை என்று மாற்றியிருக்கிறீர்கள். அது போதுமான அளவிற்கு இல்லையெனினும், இந்த நாடு உணவு பாதுகாப்பு சட்டத்தை இயற்றவில்லையா? ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமையை அது மாற்றியிருக்கிறது அல்லவா? நடைமுறையில் அந்தச் சட்டம் மிகவும் மோசமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். இடைப்பட்ட நிலையில் இருக்கின்ற அது மீண்டும் ஒரு மோசமான நிலைக்கே சென்று விடும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற ஒன்றை இயற்றும் போது ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமையை அது மாற்றுகிறது அல்லவா? தண்ணீர் பாதுகாப்பு இல்லாமல் உணவு பாதுகாப்பை பெற முடியாது என்பதையும் நான் இங்கே கூற விரும்புகிறேன். தண்ணீர் எனப்தை அடிப்படை உரிமையாக மாற்றும் போது, இந்த தண்ணீர் வணிகத்தை அதன் லாபத்தை உங்களால் குறைக்க முடியும். அவ்வாறு மாற்றப்படும் போது உங்களால் அந்த வளாகங்களில் இருக்கின்ற 200 நீச்சல் குளங்களை இல்லாமல் செய்து விட முடியும்.

தண்ணீர் தொடர்பான அனைத்து விஷயங்களும் ஜலசக்தி என்ற அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவதாக  நரேந்திர மோடி அரசாங்கம் அறிவித்திருப்பது சரியான திசையில் இருக்கிறதா அல்லது அந்த அறிவிப்பு மிக தாமதமானது என்பதில் எதை நீங்கள் நம்புகிறீர்கள்? மிகப் பரந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சனைக்கு மிகக் குறுகிய பகுதிக்கான தீர்வு என்பதுதான் இப்போது தேவைப்படுகிறதா? மேலிருந்து கீழாக அரசு மேற்கொள்ளும் அணுகுமுறையைக் கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தின் முயற்சிகள் மூலம் இதை தீர்க்க முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் இந்தப் பிரச்சனைகள் ஆரம்பித்ததாக நான் நம்பவில்லை. நிலைமை மிகவும் மோசமாகி இருப்பதாகவே நான் கருதுகிறேன். இது ஒரு தனிப்பட்ட அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த சிக்கல்களில் பெரும்பாலானவற்றிற்கு முழுவடிவம் கொடுக்கப்பட்டு இருந்தன. தொடர்ச்சியான பொருளாதார கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த அரசாங்கம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் செய்ததை அப்படியே கடைப்பிடித்து வந்திருக்கிறது.

இது உரையாடலை முடிப்பதற்கான நேரம். இவ்வாறு அடிக்கடி கலந்து கொள்பவர் இல்லை என்பதால் சாய்நாத், நீங்கள் இங்கே கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.  

இது ஒரு மாத காலத்திற்கான நீண்ட பிரச்சாரம். பிரேக்கிங் நியூஸ் என்பதாக வந்து கொண்டிருக்கும் மற்ற பெரிய செய்திஅகளை மறந்து விடுங்கள். இதுதான் உண்மையான பிரேக்கிங் நியூஸ். இதற்கு முன்ன்பு இல்லாத அளவில் நமது நாடு தண்ணீர் நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அது குறித்த செய்திகளைத் தரவிருக்கிறோம். இன்றிரவு எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி.

இந்தியாவில் தண்ணீர் கீழிருந்து மேல் நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது – சாய்நாத்

மக்சேசே விருது பெற்றவரும், இந்தியா மற்றும் உலக அளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவரும் விவசாயத்துறையில் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளருமான சாய்நாத் அவர்களுடன் இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நிலவுகின்ற கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து 2019 ஜூன் 06 அன்று இந்தியா டுடே தொலைக்காட்சி சார்பில் ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு

 https://www.youtube.com/watch?v=xTP_cz9vLU0 

- தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு,
விருதுநகர்