மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகேயுள்ள தாழஞ்சேரி கிராமத்தில் பொது குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாகதண்ணீர் வீணாகி ஓடுவதை படம்பிடித்துமுகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவரின் குடும்பத்தினரை அக்கிராமத்தின் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட சிலர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாழஞ்சேரி ஊராட்சி பெரியத்தெருவில் கடந்த சில நாட்களாக பொதுகுடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தெருவில் வழிந்தோடிய நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் அதே பகுதியில் வசித்து வரும் ரகுவரன்(23) என்ற இளைஞர் படம் பிடித்து அதைமுகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அதையறிந்த ஊராட்சி மன்ற தலைவரான ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோர் கடந்த 4/3/2021 அன்றுவீடு புகுந்து ரகுவரன், அவரது தாயார்
ராஜாமணி ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவலறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அறிவழகன், மாணவர் சங்க தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
சிபிஎம் எச்சரிக்கை
இச்சம்பவம் குறித்து சிபிஎம் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறுகையில், தாழஞ்சேரி ஊராட்சிதலைவர் ராஜ்குமார், பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கடந்த ஓரிருமாதங்களுக்கு முன்பு பெண் ஊராட்சி துணைத் தலைவரை தரக்குறைவாக பேசி புகாருக்கு உள்ளாக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில், அடிப்படை வசதிகளை செய்ய கோரிக்கை விடுத்தாலே தாக்குதல் நடத்தும்அளவிற்கு அராஜகமாகச் செயல்படுகிறார். காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக ராஜ்குமார் மீது உரியவழக்குப்பதிவு செய்து கைது செய்யவில்லை எனில் கட்சியின் சார்பில் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.