tamilnadu

img

போர்க்களத்தில் பூக்களுக்கு என்ன பங்கு? - ப.முருகன்

வரலாறு நெடுகிலும் போர்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆதி மனிதர்கள் இனக் குழுக்களாக இருந்த போதும், குறுநிலமன்னர்கள் சிற்றரசர்கள் என ஆன போதும், சிற்றரசுகளைச் செரித்து பேரரசுகளாய் பெருத்த போதும் போர்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. பின்னர் முடியரசுகளின் காலம் முடிந்து குடியரசுகள் ஆன பின்னும் முதலாளித்துவ மக்களாட்சி - ஜனநாயகம், ஏகாதிபத்திய சர்வாதிகார , பாசிச, நாஜிசம் ஆன போதும் போர்கள் தொடரத்தான் செய்கின்றன. முன்பு பேரரசர்கள் செய்த வேலையை இப்போது பெருமுதலாளிகள் செய்கிறார்கள். போர் ஆளுகைக்கும் பொருள் குவிப்புக்கும் ஒரு வழியாகவே அந்த நாள் முதல் இந்த நாள் வரை இருக்கிறது. புராண, இதிகாசங்களிலும் இலக்கி யங்களிலும் வரலாறுகளிலும் எத்தனை எத்த னையோ போர்களை இந்த உலகம் கண்டி ருக்கிறது. சங்க இலக்கியம் பல்வேறு பாடல்  களில் போர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. போர் வேண்டாம் என்று சமாதானத்தூது போன நிகழ்வும் நடந்திருக்கிறது. “ அடுதீ அல்லது சுடுதீ  வேண்டாம் “என்ற பாடல்  அமைதியை வலியுறுத்துகிறது. ஆயினும் போர்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.  நாடு பிடிக்கும் ஆசையும் பொருள் குவிக்கும்  ஆசையும் பதவிப் பேராசையும் போர்களை உற்பத்தி செய்து கொண்டேயிருந்தன. சிலுவைப் போர், உலகப் போர் என நடந்த  போர்கள் எண்ணற்றவை.

தமிழ் மண்ணில் இனக்குழு சமுதாய காலம் முதல் நடந்த போர்கள் பல இலக்கி யத்தில் பதிவாகியுள்ளன. இனக் குழுத் தலைவர்கள், குறுநில மன்  னர்கள், சிற்றரசர்கள், மூவேந்தர்கள் தங்க ளுக்குள்ளும் மற்றவர்களோடும் போர் புரிந்த நிகழ்வுகள் பாடல்களாக உள்ளன. இத்தகைய போர்கள் நடைபெறும் முறை கள், அதன் வழிமுறைகள், நெறிமுறைகள் பற்றி வரையறைகள் செய்து அதையும் இலக்கணம் போல் எழுதி வைத்துள்ளனர். அந்தக் காலத்தில் மக்களின் செல்வமாக  இருந்தது ஆநிரைகள் (கால்நடைகள்) தான்.  எனவே அவற்றை கவர்ந்து செல்வது போருக்கான முதல் நிகழ்வாக அமைந்தி ருக்கிறது. அப்படி ஆநிரைகளை களவாடிச் செல்வது இருவருக்கும் இடையிலான போரின் துவக்கமாகவும் இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆநிரைகளை மீட்பது போரின் அடுத்த கட்டமாக ஆகிவிடுகிறது. கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? இத னால்போர் நடப்பது தவிர்க்க முடியாததா கிறது. இந்த நிகழ்வுகளின் போது, அதில் ஈடுபடு பவர்கள் தாங்கள் யார் என்பதையும் என்ன  செய்கிறோம் என்பதையும் மற்றவர் களுக்கு அதாவது எதிர்த்தரப்புக்கு உணர்த்து வதற்காக தங்கள் தலைகளில் குறிப்பிட்ட மலர்களை சூடிக் கொண்டிருக்கின்றனர். அந்தப்பூக்களே அவர்கள் என்ன செய்கி றார்கள் என்பதை எதிராளிகளுக்கு தெரியப்படுத்துகின்றன. இதற்குரிய திணை, அதற்குரிய மலர்  என்னவென்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுவது தான், “வெட்சி நிரை  கவர்தல்” என்பது.

வெட்சித்திணை என்பது ஐவகை தமிழ் நிலங்களில் ஒன்றான குறிஞ்சித்திணையின் புறத்திணையாகும். அதில் சூடிக் கொள்ளும்பூ வெட்சிப் பூ ஆகும்.  போர்க்களத்தில் மட்டுமின்றி இன்றைய ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவற்றின் முன்னோடியான ஏறுதழுவுதல் நிகழ்வின் போது காளையை அடக்கச் செல்லும் வீரர் கள் தலையில் சூடியிருந்த பூங்கொத்தில் வெட்சிப் பூவும் இடம் பெற்றிருந்தது குறிப்பி டத்தக்கதாகும். இந்த வெட்சிப்பூ எப்படி இருக்கும்? இந்தப் பூவை இட்லிப்பூ என்று இப்போது குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் இதன் அமைப்பு அப்படி இருக்கிறது. முன்பு காட்டுப் பூவாக மலர்ந்தது இப்போது வீட்டுப்பூவாக தொட்டிகளில் வளர்கிறது. இதில் செந்நிறப்பூவே போர்க்களத்தில் சூடிக்கொள்ளும் பூவாகும். ஆனால் கடை யெழு வள்ளல்களில் ஒருவரான அதிய மானுக்கோ வெள்ளை நிற வெட்சிப் பூவே பிடித்தமானதாக இருந்திருக்கிறது. அவன் போருக்குச் சென்ற சமயங்களில் பனம்பூ, வேங்கைப்பூ வோடு வெட்சிப்பூவையும் சேர்த்தே ஒன்றாகக் கட்டி தலையில் சூடியிருந்தான் என்கிறார்கள். இந்த வெட்சிப்பூ குறிஞ்சி நிலத்துக்கே உரியதாகும். அதனால் அங்குள்ள மக ளிர்க்கும் அவர்கள் வழிபடும் முருகனுக்கும் இது உகந்ததாகவும் இருந்திருக்கிறது. இது  மருத நிலத்து மங்கையர்க்கும் பிரியமான தாகவே இருந்ததால் தான் வையை நதியில்  நீராடச் சென்றபோது பெண்கள் தங்கள் தலையில் வெட்சிப் பூவைச்சூடியிருந்ததாக பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

வெட்சி எனும் அன்றைய போர்க்களப் பூ இன்றைய போன்சாய்ப் பூவாக வீடு களை அலங்கரித்துக் கொண்டுள்ளது விசித்திரமானதுதான். இந்தப் பூவின் தாவரவியல் பெயர் இக்ஸோரா காக்கினியா (ixora coccinea) இது ரூபியேசியே எனும் குடும்பத்தை சேர்ந்  தது என்று தாவரவியலார் வகைப் படுத்திக்  கூறுகின்றனர். போர்க்களத்தில் பூக்களுக்கு  என்ன வேலை? ஆனால் போர் வீரர்கள்  அவற்றை தலையில் வைத்தல்லவா கொண்  டாடுகிறார்கள். இது மருத்துவக் குணம் கொண்ட மலர்  என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியாகும்.