என்று தொலையும் இந்த போரழிவு
வல்லவரென்று ஆயுதம் கொண்டு
வாழ்ந்திடும் மேலை நாட்டீரே
நல்லவர் வாழும் நாடுகள் மீது
நச்சுக் குண்டுகள் போட்டீரே
எளிமையிலுள்ள நாடுகள் இதயம்
அஞ்சி நடுங்குவதைப் பாரீரே
வளமையிலுள்ள ஆயுதத்தாலே
வாழ்வு தொலைவதைக் காணீரே
இயற்கை வளங்களை ஆக்கிரமித்து
ஏகபோகமாய்ச் செழிக்கின்றீர்
இரக்கமில்லாமல் அண்டை நாடுகளை
ஆணவத்துடனே அழிக்கின்றீர்
வட்ட நிலாவில் நாளும் நடந்து
வெட்டவெளியை ஏன் கெடுக்கின்றீர்
மிச்ச மீதியுள்ள பூமியில் மக்கள்
அச்சமின்றி வாழ தடுக்கின்றீர்
நாடொறும் அறிவியல் சாகசங்களை
நவ நவமாகப் புரிகின்றீர்
நாடு காக்கின்ற நல்லவர் கூற்றை
எல்லை தகராறில் எரிக்கின்றீர்
கண்டுபிடிப்புகள் வந்தென்ன பயனாம்
கதிகலக்குதே அணுயுத்தம்
குண்டுவெடிப்புகள் குறி தவறாமல்
நிகழ்கிற காட்சி நித்தம் நித்தம்
இனவெறியாலும் பணவெறியாலும்
எழுந்ததோ இந்த போரறிவு
என்று மலருமோ அமைதி வழியில்
நாடுகாத்திடும் நல்லறிவு