tamilnadu

img

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் மீது தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்ய தீஒமு வலியுறுத்தல்!

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர்  மீது தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்ய தீஒமு வலியுறுத்தல்!

தஞ்சாவூர், மார்ச் 8 - தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் எடக்குடி கிராமம் பட்டியலின மக்களின் வழிபாட்டுதலத்தை பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த அறிவழகன் என்பவர் ஆக்கிரமித்து மார்ச் 1 ஆம் தேதி தனது விவசாய நிலத்திற்கு பாதை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியுற்று தடுக்க வந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் சாதி சொல்லி திட்டி தாக்கப்பட்டுள்ளார்.   பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் தடுத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சாதியவாதி அறிவழகன் மற்றும் அவரது மகன்கள் அஜித் குமார், அரவிந்த் ஆகியோர் அரிவாள் மற்றும் கட்டையுடன் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து புண்ணியமூர்த்தி மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி, பி.எஸ்சி புவியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மகள் கோகிலா, 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் சுந்தர் ஆகிய நால்வர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இத்தாக்குதலில் படுகாயமடைந்து புண்ணியமூர்த்தி, மகேஸ்வரி, கோகிலா, சுந்தர் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோகிலாவின் கையிலும், மகேஸ்வரியின் தலையிலும் அறிவாளால் வெட்டியதில் கொடுங்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களது வீடும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வி.ரவி மற்றும் கே.முனியாண்டி, ஆர்.பிரதீப் ராஜ்குமார், பி.மாணிக்கம், முகமது அலி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இவ்வன்கொடுமை குறித்து மெலட்டூர் காவல் நிலையத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 நாட்கள் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.   உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீடு செய்து குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை, சட்டப்படி தீர்வுதவி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பட்டியலின மக்களின் வழிபாட்டுதளத்தை பாதுகாத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது என்று மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.