மதுரையில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பட்டா வழங்கப்பட உள்ள நிலையில், முதல்வருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"வெற்றித் திருநாள்!
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கில் பல பத்தாண்டுகளாக வசித்து வருகின்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்.
2011 ஆண்டு மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிப் பகுதியில் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமானோருக்கு அரசு அனுமந்த பட்டா கொடுத்திருந்தது. அவர்களுக்கெல்லாம் தோராயப்பட்டா கொடுத்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குடிசை மாற்றுவாரியம், நகர்புற மேம்பாட்டு வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்திய பின்பும் ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு பத்திரம் பதிந்து கொடுக்காத நிலை உள்ளது.
மேற்கண்ட நிலையில் உள்ள மக்களுக்கு பட்டா மற்றும் பத்திரம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தந்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்களின் சார்பில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்ற பட்டா கேட்டு முறையீடு இயக்கம் கடந்த 7.10.2024 அன்று மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இறுதியில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மாநகராட்சி மக்களின் பட்டா பிரச்சனை குறித்த முறையீட்டை முன்வைத்தோம்.
அவர் தமிழக அரசின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்று உரிய தீர்வைக் காணுவதாக உறுதியளித்தார்.
இந்த இயக்கத்தின் முடிவில் ஊடகங்களை சந்தித்த போது மாநகராட்சிப் பகுதிகளில் பட்டா இல்லாத மக்களும் பயன் பெறும் வகையில் புதிய அரசாணை தேவைப்படுகிறது. மாநகராட்சிக்குள் பல்லாண்டுகள் வசிப்பவர்களுக்கு கூட பட்டா கொடுக்க முடியாதபடி விதி இருப்பது மக்கள் விரோதமானது. மாநகராட்சிக்குள் வசிப்பது மக்கள் செய்த குற்றமல்ல . மாநகராட்சிக்குள் இருப்பது மக்களுக்கான தண்டனையல்ல. மாநகராட்சிக்குள் வசிக்கிற மக்களுக்கும் அரசின் எல்லா சட்டமும் பொருந்தும். இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்தப் பிரச்சனையை கொண்டு செல்கிறோம். நிச்சயமாக ஒரு நல்ல முடிவை மாநில அரசு எடுக்கும் என நம்புகிறோம் என்னும் நம்பிக்கையை வெளிப்படுத்தினோம்.
அதன் விளைவாக நகர்புற விதிகள் என்ற பெயரில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையிலிருந்த அநீதிக்கு முடிவு கட்டும் வகையில் 11/02/2025 அன்று நடைபெற்ற தமிழக அரசின் 18 வது அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் குடியிருக்கும் 86,000 மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. இதன் மூலம் நகர் புற ஏழைகளின் பல பத்தாண்டு காலக் கனவு நினைவானது. இது மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி .
இதன் அடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டு இன்று பல்லாயிரக்கணக்கான மதுரை மக்களுக்கு தமிழக முதல்வரால் பட்டா வழங்கப்பட இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் பல்லாயிரம் குடும்பங்களில் ஒளியேற்றுகிற திருநாள் இன்று. இதற்கான அரசாணையை வெளியிட்டு, மக்களுக்கு பட்டாவை வழங்க இன்று மதுரைக்கு வருகை தந்துள்ள முதல்வருக்கு நன்றி! நன்றி ! நன்றி !" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
