tamilnadu

புதிர் விளையாட்டு... - மஞ்சு

புதிர் விளையாட்டுகள் வெறும் விளையாட்டல்ல. நமக்கு மனமகிழ்வை ஏற்படுத்துவதோடு, அறிவைக் கூர் தீட்டிக்கொள்ளவும் புதிர் விளையாட்டுகள் உதவுகின்றன. வளரும் குழந்தைகள் மனங்களில் விடைகளைக் கண்டுபிடிப்பதில் ஒரு சுவையை ஏற்படுத்துகின்றன. பெரியவர்களுக்கும் இந்த எளிய புதிருக்கு  விடையைக் கண்டுபிடிக்காமல் விடுவதா என்று, சவாலைச் சந்திக்கும் முனைப்பை முடுக்கிவிடுகின்றன. முதியவர்களுக்கு, ஞாபக மறதி, தனிமை உணர்வு, இளையவர்களோடு இணைந்திருக்க முடியாதோ என்ற ஏக்கம் ஆகியவற்றைக் களைவதற்குப் புதிர் விளையாட்டுகள் பேருதவியாக இருக்கின்றன. வாழ்க்கையே சுவை மிகுந்த புதிர்தானே! வாரம் ஒரு புதிரோடு சந்திப்போம். விடையை முதலிலேயே பார்ப்பதில்லை  என்று உறுதியேற்றுக்கொண்டு விளையாட்டுக்கு வாருங்கள்.

நட்டம் எவ்வளவு?

அது பலவகைப் பொருள்களையும் விற்கக்கூடிய சிறிய கடை. அந்தக் கடைக்  குள் நுழைகிறான் ஒருவன். உள்ளே கடைக்காரரைக் காணவில்லை. பக்கத்தில் எங்காவது சென்றிருப்பார் என்று ஊகித்துக்கொண்டான்.. அவன், பணம் வாங்கிப்போடும் மேசைக்கு அருகில் சென்றான். மேசை யின் அறையை ஓசைப்படாமல் இழுத்துப்  பார்த்தான். அதனுள் இருந்த பண நோட்டுகளில் இருந்து ஒரு 100 ரூபாய்த் தாளை எடுத்துத் தனது சட்டைப் பையில்  வைத்துக்கொண்டான். பிறகு, அப்பாவி  போல கடை வாசலில் நின்றுகொண்டான்.  சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்தார். “சாரிங்க, ஒரு டீ சாப்பிட்டுட்டு வர லாம்னு போயிருந்தேன்…” என்றவாறு உள்ளே நுழைந்து மேசைக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். கடைக்குள் அடுக்கி வைக்கப்பட்டி ருந்த விற்பனைப் பொருள்களைப் பார்ப்பது போலச் சுற்றி வந்த அவன், ஒரு ரொட்டியை எடுத்து வந்து மேசை மேல் வைத்தான். அதன் விலை 50  ரூபாய் என்று போட்டிருந்தது. மறுபடி யும் உள்ளே சென்றவன் இரண்டு பிஸ்கட் உறைகளை  எடுத்து வந்தான். ஒவ்வொன்றின் விலை 10 ரூபாய். “எழுபது ரூபாய் ஆச்சுங்க,” என்றார் கடைக்காரர். அவன் தன் சட்டைப் பையில் வைத்தி ருந்த 100 ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.  அதை வாங்கி மேசைக்குள் போட்ட கடைக்காரர், மீதி 30 ரூபாயைக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ரொட்டியையும் பிஸ்கட்டுகளையும் எடுத்துக்கொண்டு அவன் வெளியேறி னான். கடைக்காரருக்கு ஏற்பட்ட  நட்டம் எவ்வளவு?