tamilnadu

img

நம்புவதெல்லாம் உண்மைதானா? - என்.கண்ணம்மா

பேச்சோடு பேச்சாகப் பல நம்பிக்கைகள் நம் மனங்களில் புகுந்திருக்கின்றன. நாம் உண்மை என்று கருதிக் கேட்டுக்கொள்கிற, நாமும் சொல்கிற அப்படிப்பட்ட பல நம்பிக்கைகள் உண்மையில் தவறானவை என்று  தெரிந்தால் முதலில் வியப்பாக இருக்கும். பின்னர் உண்மைகள் மனதில் பதியும். அந்த உண்மைகளைச் சொல்லத் தொடங்குவோம். அத்தகைய சில நம்பிக்கைகளையும் உண்மைகளையும் பார்ப்போம்:

நிறம் மாறும் பச்சோந்திகள்

நேரத்திற்குத் தகுந்தாற்போலக் கொள்கைகளையோ கருத்துகளையோ மாற்றிக் கொள்கிறவர்களை “சரியான பச்சோந்திகள்,” என்று வர்ணிக்கிறோம். பச்சோந்தி எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தின் பின்னணிக்கு ஏற்பத் தனது  தோல் நிறத்தை மாற்றிக்கொள்கிறது, தனது  பாதுகாப்புக்காகவும், மறைந்திருந்து இரைகளைப் பிடிப்பதற்காகவும இவ்வாறு  செய்கிறது என்று சொல்லப்பட்டு வந்திருக்கி றது. பரவலாக இவ்வாறு நம்பப்பட்டாலும், பச்சோந்திகளால் தங்கள் மேனி நிறத்தை  எந்தப் பின்னணியானாலும் அதனுடன் வேறுபாடின்றிப் பொருந்திப் போவது போல  மாற்றிக்கொள்ள இயலாது. மாற்றிக் கொள்ள முடியாத பின்னணிகளும் இருக்கின்றன. பச்சோந்தி போலவே நிறம் மாறும் வேறு  சில உயிரினங்களும் உண்டு. பாது காப்பிற்காகத் தங்களது இயற்கையான சூழலுடன் பொருந்திப் போகிற நிறத்தில்  பிறக்கின்றன. அதற்கு ஒத்தாசையாகத் தோல் நிறத்தின் அடர்த்தியைக் கூட்டிக்  கொள்கின்றன, அல்லது குறைத்துக்கொள் கின்றன. குறிப்பிட்ட பின்னணியில் தனித்துத் தெரிவது போல  நிறத்தை மாற்றிக் கொள்ளும் உயிரினங்களும் இருக்கின்றன. தங்களது இணைகளைக் கவர்வதற்காக அவ்வாறு செய்கின்றன. எதிரிகளிடம் தங்களின் ஆத்திரத்தையோ, அடங்கிப்போக நினைப்பதையோ வெளிப்  படுத்துவதற்காகவும் சூழலின் பின்னணி யுடன் ஒட்டாமல் தனித்துக் காட்டிக்கொள் கின்றன. வம்பு வேண்டாம் என்று சில  ஆண் உயிரிகள் பெண்ணினம் போலக்  காட்டிக்கொண்டு மோதலைத் தவிர்ப்ப துண்டு. ஆகவே, கொள்கையில் தடுமாறு கிறவர்களுக்கு இனிமேல் வேறு உவமை  சொல்வோம். பச்சோந்திகளைக் காயப்படுத்த வேண்டாம், பாவம்.

குளிர்ந்த பாலைவனம்

பாலைவனம் என்றாலே கொதிக்கும் மணல் வெளிதான் நம் கற்பனைக்குத் தோன்றும். கதாநாயகனைச் செடிகொடி களே இல்லாத கொதிக்கும் பாலைவனத்  தில் நடக்கவிடுகிற வில்லன், கடைசியில்  வில்லனை அப்படி நடக்கவிடுகிற கதா நாயகன் என்று காட்டுகிற சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பூமியின் எல்லாப் பாலைவனங்களும் அப்படித் தாங்க முடியாத வெப்பத்துடன் இருப்ப தில்லை. ஏன், வெதுவெதுப்பாகக் கூட  இருப்பதில்லை. குளிர்ச்சியான, பனிமூட்ட மான,  புதர்கள் மண்டிய,  எங்கும் உப்பாக இருக்கிற,  மலைகளும் பாறைகளுமாக உள்ள பாலைவனங்களும்  இருக்கின்றன. சிலி நாட்டின் அடாகாமா பாலைவனம் ஆண்டு முழுவதும் இதமான, சுகமான வெப்ப நிலையுடன்தான் இருக்கும். அவ்வப்போது பனி மூட்டத்துடனும் இருக்கும். அண்டார்டிகா கண்டத்தின் வெறும் பகுதியில் பரவியிருக்கும் பாலைவனம் இந்த பூமியிலேயே மிகவும் குளிர்ச்சியான இடமாகும். இனிமேல் யாராவது, “உன்னையெல்லாம் பாலை வனத்திலே கொண்டுபோய்தான் விட ணும்,” என்று சொன்னால், அடாகாமாவில் போய் இறக்கிவிடச் சொல்லுங்கள்

நிலாவின் இருண்ட பக்கம்

வாழ்க்கையில் துன்பமும் கூடவே வரும்  என்ற தத்துவத்திற்கு உதாரணமாக,  அல்  லது ஒருவரது ஆழ் மனதில்  என்ன இருக்கி றது என்று யாருக்கும் தெரியாது என சித்த ரிப்பதற்காக  “நிலாவின்  இருண்ட மறுபக்கம்” என்று சொல்லப்படுகிறது. நமது  கண்ணுக்கு நேரடியாகத் தெரியாத நில வின் அந்தப் பக்கம் இருண்டதாகத்தான் இருக்கும், ஏனெனில் அதற்குச் சூரிய ஒளி  கிடைப்பதில்லை என்று விளக்கம ளிக்கப்படுகிறது. நிலா எப்போதும் பூமியோடு இணைந்தே  சுற்றி வருவதால் அதன் ஒரே பக்கத்தைத் தான் நாம் பார்க்கிறோம். மறுபக்கத்திற்குச் சூரிய ஒளி கிடைக்காது, ஆகவே அது ஒளி ராது என்று நினைத்துக்கொள்கிறோம். உண்மையில், நிலா தன்னைத் தானே  சுற்றிக்கொள்கிறபோது அந்த மறுபக்கத் திற்கும் சூரிய ஒளி கிடைக்கவே செய்கி றது, விண்வெளிப் பயணத்தில் நிலாவைத் தாண்டிச் சென்று எட்டிப் பார்த்தால் அதன் மறுபக்கமும் ஒளிர்வதைக் காணலாம். ஆகவே ஆழ மனசுக்கான வசனத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். பெட்ரோல் டேங்க் சர்க்கரை கடுப்படித்தவர்களைக் கடுப்படிக்க அவர்களது வண்டிகளின் பெட்ரோல் டேங்க்கில் ஒரு பை நிறைய சர்க்கரையைப் போட்டுவிட்டால் போதும், வண்டி ஓடாது என்று நினைத்து சர்க்கரைப் பையைத் தேடுவோர் உண்டு. பெட்ரோலில் சர்க்கரை  கரைந்து அதன் எரிதன்மை மாறிவிடுவதால் என்ஜின் இயங்காது, ஆகவே முழுப் பெட்ரோலையும் கொட்டிவிட்டுப் புதிதாக நிரப்பினால்தான் வண்டி ஓடும் என்று கூட்டாளிகளுக்கு விளக்கமளிப்பார்கள். உண்மை என்னவென்றால், பெட் ரோலை சர்க்கரை ஒரு இனிப்புப் பான மாக மாற்றிவிடுவதில்லை. ஏனென்றால் பெட்ரோலில் சர்க்கரை கரைவதே இல்லை.  அது அடியில் தேங்கி, டேங்க் ஃபில்டரை அடைத்துக்கொள்ளும் அவ்வளவுதான்.

புலனறிவு ஐந்துதானா?

ஒளியைக் காண்பது, ஒலியைக் கேட் பது, வாசனையை முகர்வது, சுவையை ருசிப்பது,  தொடுவதை உணர்வது ஆகிய  ஐந்து புலனுணர்வுகள் பற்றிப் படித்திருக்கி றோம். உடலில் இந்த ஐந்து புலனுணர்வு கள் மட்டுமே இருக்கின்றன என்று நினைக்கி றோம். காலங்காலமாக  இப்படித்தான் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.தொடக்கப் பள்ளிப் பாடங்களிலும், குழந்தைகளுக்கு எளிதில் புரிய வைப்பதற்காக இப்படியே கற்பிக்கப்படுகிறது. ஆனால் தொடக்கப்பள்ளி அளவோடு நின்றுவிட முடியாதல்லவா? இந்த ஐந்தோடு, வெப்ப உணர்வு, வலியுணர்வு, சமநிலையுணர்வு, உடல்நிலையுணர்வு, நேரம் கடக்கும் உணர்வு ஆகிய உணர்வு களும் உண்டு. முக்கியமாகப் பசியுணர்வும்  தாக உணர்வும் உள்ளன. இத்தகைய வேறு  பல உள்ளார்ந்த உணர்வுகளும் இருக் கின்றன. இவையெல்லாம் இருக்கிற விசயங்க ளைப் பற்றிய தேவையற்ற நம்பிக்கைகள். இல்லாத இரண்டு விசயங்கள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுவதும் வலு வாகப் பரவியிருக்கின்றன. அந்த இரண்டும்  என்னவென்று உங்களால் ஊகிக்க முடி யாதா என்ன?