tamilnadu

img

இலக்கிய - தத்துவ சாராமாய் இரு நூல்கள் - மதுக்கூர் இராமலிங்கம்

திருக்குறள் அறத்  துப்பால் உரை யை ஒரு தனி நூலாகவும், பொருட்பால் மாற்றும் காமத்துப்பால் உரைகளை ஒரு தனி நூலாகவும் வெளியிட்டுள்ள பேராசிரியர் அருணன், அடுத்தடுத்து இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையை பகுப்பாய்வு செய்து ஒரு நூலும் நீலகேசி குறித்து ஒரு நூலும், வெளியிட்டுள்ளார்.  சிலம்பும், மேகலையும் என்ற நூல் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை யை விரிவாக ஆய்வு செய்கிறது. சிலப்பதி காரம் பேசப்பட்ட அளவுக்கு மணி மேகலை பேசப்படவில்லை. திராவிட இயக்கமும், தமிழரசு கழகமும் தங்களது தமிழ் தேசிய சிந்தனைக்கு ஏதுவாக சிலப்பதிகாரத்தை கையில் எடுத்த நிலையில், ஏழைகளின் பசிப்பிணி போக்கும் இயக்கமாம் கம்யூனிஸ்ட்  இயக்கம் இயல்பாக எடுக்க வேண்டிய காப்பியமாக மணிமேகலை இருந்தது. மேலும் மணிமேகலையில் வலுவான பெண்ணியச் சிந்தனை இருந்தது என்று முன்னுரையில் பேராசிரியர் குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் களில் ஒருவராகிய தோழர் கே.டி.கே. தங்கமணி, தொடர்ந்து மணிமேகலை குறித்து பேசி வந்த தோடு, மணிமேக லைப் பற்றி ஒரு நூலையும் எழுதியுள் ளார். ஆதி காலத்திய நாத்திகவாதமாகிய பூதவாதம் தோழர் கே.டி.கே.யை ஈர்த்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். தோழர் கே.முத்தையா சிலப்பதி காரம்; உண்மையும், புரட்டும் என்ற நூலை எழுதியுள்ளார். ஆனால் மணி மேகலைப் பற்றிய தோழர் கே. முத்தையாவின் கருத்து ஏனோ எதிர்மறையாக இருந்தது. மன்னர் குலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து வணிக குலம் போராட முடியவில்லை என்பதை  ஒப்புக் கொள்ளும் நூலாக மணிமேக லை அமைந்தது என்று கே.முத்தையா குறிப்பிட்டிருந்தார். ஆனால் பசிப்பிணி போக்கும் அமுதசுரபியை மணிமேக லை கையில் ஏந்தியது தமிழ் இலக்கி யத்திற்கு தரப்பட்ட தனிக்கொடை. இதற்கு முன்பும், பின்பும் இப்படி ஒரு  காப்பியம் பிறக்கவில்லை என்கிறார் அருணன்.

சிலம்பும், மணிமேகலையும் இரட்டை காப்பியம் (போட்டிக் காப்பியம்) என்று கூறப்பட்டாலும் உண்மையில் சிலம்பும் மேகலையும் சமண, புத்த கருத்தியல்களுக்கு இடையிலான போட்டிக் காப்பியம் என்கிறார் அருணன். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகள் யார் என்பது குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. தோழர் தொ.மு.சி.ரகுநாதன், ‘இளங்கோ அடிகள் யார்?’  என்ற தலைப்பில் பெரு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இளங்கோ அடிகள் மன்னர் குலத்தை சேர்ந்தவர் அல்ல, மாறாக வணிகர் குலத்தை சேர்ந்தவர். நிலவுடமை வர்க்கத்தை எதிர்த்த வணிக குலத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக இளங்கோ அடிகள் சிலம்பை கையி லெடுத்தார் என்பது தொ.மு.சி.யின் துணிந்த முடிவு.  இளங்கோ அடிகள் சமணத்துறவி என்று கூறும் அருணன், வஞ்சிக் காண் டம் இடைச்செருகலாக இருக்கலாம் என்று கூறியுள்ளதோடு, அதற்கான காரணங்களையும் அடுக்குகிறார். சிலம்பும் மேகலையும் என்ற நூல் இலக்கிய திறனாய்வாக மட்டு மின்றி, வரலாற்றுப் பின்புலத்தை விரி வாக விவாதிக்கும் நூலாகவும் அமைந்துள்ளது. கண்ணகி மதுரையை எரித்தது குறித்து கூறும் போது, கண்ணகி யின் அறைகூவலை ஏற்று பொங்கி எழுந்த மக்களின் கலகத்தை எரியூட்டல் எனலாம் என்கிறார். தீ என்பது கண்ண கிக்காக மக்கள் நெஞ்சில் எழுந்த தீதான் என்கிறார் ஆசிரியர்.  மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலை சாத்தனார் குறித்தும் பல புனைவுகள் உண்டு. எழுத்தாணியை எடுத்து அவர் தலையில் அவரே அடிக்கடி குத்திக் கொண்டதால் சீழ் பிடித்த  தலை. அதனால் சீழ்த்தலை சாத்தனார் என்பதுதான் சீத்தலை சாத்தனார் என ஆனது என்று அபத்தமாக சிந்திக்கும் அளவுக்கு சிலர் சென்றுள்ளனர். ஆனால் மதுரையைச் சேர்ந்த தானிய  வியாபாரிதான் சீத்தலை சாத்தனார் என பொருத்தமாக நிறுவுகிறார் அருணன். தன்னுடைய மகளுக்காகவும் துற வறத்தை ஏற்றாள் மாதவி என்றும், இது  கணிகைத் தொழிலுக்கு எதிரான கலகம் என்றும் கூறும் நூலாசிரியர், மணி மேகலை பசி நோய் போக்க அமுதசுரபி யை ஏந்தியதை பல இடங்களில் புகழ்ந்து பேசியுள்ளார்.

மணிமேகலை, அரசனுக்கு அடங்க மறுத்தவர்களுக்கும் அன்னம் அளித்ததையும் ஆபுத்திரன் பேசிய சமூக நீதியையும் விரிவாக பேசியுள்ளதோடு மணிமேகலை பல சமயத்தவரோடு நடத்திய விரிவான தத்துவ விவாதங் களையும் பொருத்தமாக ஆய்வு செய்துள்ளார்.  ‘இறைவனும் இல்லை; இறந்தோர் பிறவர்’ என்று வாதிட்ட பூதவாதம் அன் றைய தமிழகத்தில் பிரபலமாக இருந்தது என்பதையும் உலோகாயத வாதம் எனும் வேறு வகை நாத்திகம் அந்தளவுக்கு பிரபலமாக இல்லை என்பதையும் அருணன் குறிப்பிடுகிறார். அதே  நேரத்தில் சமணத்திற்கும் புத்தத்திற் கும் இடையிலான கடுமையான மோத லையும் சிலம்பும் மேகலையும் வேறு வேறு கருத்தியலை முன்வைத்ததையும் நூல் முழுவதும் அருணன் விளக்கி யுள்ளார். இலக்கியம், தத்துவம், வரலாறு என அனைத்தும் பின்னிப் பிணைந்ததாக அதே நேரத்தில் வாசிப்பு ருசியோடு படைக்கப்பட்டிருக்கிறது சிலம்பும் மேகலையும் என்ற நூல்.

நீலகேசி

நீலகேசி தமிழின் முழு முதல் தத்துவ நூல் என்ற தலைப்பிலான நூல்  தத்துவ திரட்சியாக உருவெடுத்துள்ளது. நீலகேசி சிறு காப்பியமல்ல, அது தமிழின் முழு முதல் தத்துவ நூல். இதை காப்பியக் கணக்கில் சேர்த்தது நியாயமற்றது என்று நூலின் துவக்கத்தில் அருணன் கூறுகிறார். தன்னுடைய இந்தக் கூற்றுக்கு இந்த நூலின் மூலம் நியாயம் செய்துள்ளார் என்றே கூறலாம். நீலகேசியின் அனைத்து சருக்கங்களும் தத்துவம் பேசின. மெய்ப்பொருள் தேடின என்கிறார்.  ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாக கூறப்படும் குண்டலகேசியும் தத்துவ நூலே. ஆனால் அந்த நூல் முழுமையாக கிடைக்கவில்லை. பௌத்தம் பேசிய குண்டலகேசிக்கு போட்டியாக எழுந்ததுதான் நீலகேசி என்று கூறும் நூலாசிரியர் பல்வேறு தத்துவ வாதிகளுடன் நீலகேசி நடத்திய கருத்தியல் போரை சுவைப்பட தொகுத்து தந்துள்ளார். நீலகேசி எழுதப்பட்ட காலம் பக்தி இயக்க காலத்திற்கு முந்தியது. அதாவது களப்பிரர் காலத்தில் எழுதப்பட்டதுதான் நீலகேசி. குண்டலகேசியோடு நீலகேசி நேருக்கு நேராக மோதுவது என்பது புத்த, சமண தத்துவங்களுக்கு இடை யிலான மோதலாக உள்ளது. அதிலும் புத்தரையும் குண்டலகேசியையும் நீல கேசி தனிப்பட்ட முறையில் தாக்குவதை அருணன் எடுத்துக்காட்டுகிறார்.  காவி என்பது பவுத்தத்துக்கு உரியது.  ஆனால் வர்ணாசிரம வாதிகள் பல்வேறு கருத்துக்களை கவர்ந்து கொண்டது போல காவியையும் கவர்ந்தனர். தங்க ளது உடைக்கு காவிச் சாயம் ஏற்ற பிக்கு கள் மெனக்கெட்டதை சொல்லி அப்படியே சோற்றையும் ஆக்கிவிட வேண்டியது தானே. எதற்காக பிச்சை யெடுக்க வேண்டும் என்று கூட நீலகேசி கேட்டிருக்கிறார். 

உடலா, உயிரா, உயிரா அறிவா,  வலி என்பது உடலுக்கா, ஆன்மாவுக்கா என்றெல்லாம் அன்றைக்கே விவாதிக்க ப்பட்ட பல்வேறு கேள்விகளை படிக்கும் போது வியப்பாக இருக்கிறது. நூலின் இறுதியில் நல்வாய்ப்பாக அழியாமல் நீலகேசி நூல் முழுமையாக கிடைத்தது. இன்றைக்கு நடத்த வேண்டிய தத்துவப் போருக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிடும் பேராசிரியர் அருணன் அன்றைய தமிழர் வாழ்வையும், தத்துவ நோக்கையும் புரிந்து கொள்ளவும் உதவும் என்கிறார்.  காப்பியங்களையும் தத்துவங்களையும் அப்படியே அள்ளிப் பருக முடியாதவர்களுக்கும் அதற்கான கால அவகாசம் இல்லாதவர்களுக்கும் சாறுபிழிந்தும் தரப்பட்டுள்ள நூல்கள் தான் இவை. படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இந்த இரு நூல்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

 சிலம்பும் மேகலையும், விலை ரூ.150
2. நீலகேசி,  விலை ரூ.150
ஆசிரியர் : அருணன் 
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம் 
69- 24 ஏ அனுமார் கோவில் படித்துறை, சிம்மக்கல், மதுரை- 625001
அலைபேசி : 9384813030