tamilnadu

img

கேக்கி தாருவாலாவின் எழுச்சிப் பாடல்... - எழுச்சி

2024ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி மறைந்த கேக்கி தாருவாலா லாகூரில் பிறந்தவர். பஞ்சாபைச் சேர்ந்த இந்தியக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர். காவல் துறை அதிகாரி. 15 கவிதை தொகுதிகளும் 10 சிறுகதை/ நெடுங்கதைகளையும் படைத்திருக்கிறார். சாகித்ய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார். அவரது ஒரு பாடல் அழிவையும் எழுச்சியையும் பாடுகிறது.
எழுச்சி 
ஆயிரம் கண் அரக்கன் போல் 
தேன்கூடு விழித்திருந்தது. 
வேப்ப மரத்தில்  
விழுந்த வெளிச்சத்தில்  
மஞ்சள் தேனீக்கள்  
மரக்கலங்களாய் 
அலைந்து திரிந்தன. 

மறை பொருள் மந்திரம் போல் 
தேனடையில் கருஞ்சொட்டுகள் 
கண்மூடியிருந்தன.  

மாலை மயங்கும் வேளையில்  
தேன் திருடர்கள்  
தீப்பந்தம் கொண்டு 
ஈக்களை விரட்டி  
பிறை நிலா போலொரு பாகம் 
பிய்த்து எடுத்தனர் 
மிச்சமிருந்ததெல்லாம்  
மெழுகு மட்டுமே. 

கலைந்த தேனீக்கள்  
கலங்கி சுற்றின. 
குழந்தைகளைக் கொட்டவும் மறந்தன. 
கருகிப்போன மரக்கிளை பற்றி 
இரவில் கண் மூடின. 

மறு நாள், 
குருவியும் அணிலும் 
கறுப்புக் கொண்டையும்  
சிவப்புப் பிறை இமையும்  கொண்ட பறவையும்்
மிச்சமிருந்த மெழுகிற்கு.  
அடித்துக் கொண்டன 
அப்பொழுது 
இற்று விழும் இதயத்திலிருந்து  
ஆர்த்தெழும் உணர்ச்சி போல் 
இரைச்சலிடும் இயந்திரங்களாய் 
பறந்தன தேனீக்கள்.”  
இதில் மனிதர்களின் பேராசை தேன் 
திருடர்களாக குறியீடு செய்யப்பட்டுள் ளது. இயற்கையில் அழிவும் பின் அதை 
ஏற்றுக்கொண்டு உயிர்கள் மீண்டும் வாழ தொடங்குவதை இந்தக் கவிதை கூறுகிறது. (Classwithmason.com). ஆனால் இதை இப்படியும் பார்க்கலாம்.   
தேனை சேகரித்து கூட்டில் திரட்டி
யிருக்கும் தேனீக்களை நாம் உழைப் பாளிகளுக்கு உவமையாக எடுத்துக் கொள்ளலாம். அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மக்களை அல்லது 
ஆதிவாசிகளை தொழிற்சாலை அல்லது அணைகளுக்காக  முதலாளிகள் மற்றும் 
அரசுகள் விரட்டியடிப்பது போல தேனீக்க
ளின் கூடுகள் பியக்கப்படுகின்றன. அவை 
கலங்கி திரிகின்றன. கொட்டவும் மறந்து
விடுகின்றன.  அரசுகளை எதிர்க்க முடியாத 
மக்கள் போல அவை உள்ளன. அவர் களின் அழிவின் மேல் எழுப்பபடும் புதிய 
சாமராஜ்ஜியங்களில் ஒரு சிலர் பலனடை
வார்கள். அது போல குருவி,அணில் மற்றும் பறவைகள் மீதமிருக்கும் மெழு
கிற்கு அடித்துக் கொள்கின்றன. தேனீக் 
களின் இதயம் போல், வாழ்விடத்தை
யும் வாழ்வாதாரத்தையும்  இழந்த மக்க
ளின் மனம் இற்று விழுந்துவிடுகிறது. ஆனாலும் அவை தங்கள் உணர்ச்சி
களை புதுப்பித்துக் கொண்டு புது வாழ்வி
டத்தை தேடி பறக்கத் தொடங்குகின்றன. ஆனால் மனிதர்கள் தேனீக்கள் இல்லையே! அவர்கள் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள போராடுவார்கள்.  
கேக்கி குறித்து நமிதா கோகலே அவர்கள் இந்து ஆங்கில நாளிதழ் ஞாயிறு 
மலரில் (06.10.24) புகழஞ்சலிக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் கவிஞரின் வெளி
யிடப்படாத ஒரு கவிதையின் சில பகுதி
களை பகிர்ந்திருந்தார்.
பிரார்த்தனை  
நம் காலத்து கொடும் காற்று  
அன்பை அடித்துக் கொண்டு செல்லாதிருக்கட்டும். 
நம் காலத்து கொடும் காற்று  

திரைக்கு பின்னால் கத்தியை தீட்டிக் கொண்டிருப்பதாக 
எண்ணுவற்கு  
நம்மை நகர்த்தி செல்லாதிருக்கட்டும். 
நம் காலத்து கொடும் கனவுகள்  
நம் விருப்பத்துடன் சேர்த்து நம்மையும் விழுங்காதிருக்கட்டும். 

சிதிலங்கள் நிறைந்த இந்நிலத்திலிருந்து  
நீரை நோக்கி எங்களை இட்டு செல்க. 
நீரலைகளின் சத்தம் மெய்யானதாக இருக்கட்டும். 

ஊர்திகளின் சத்தம் கூட  
இரவில் அலைகளாய் ஒலிக்கின்றன. 
நீர் குருதியாய் மாறாமல்  
நீராகவே இருக்கட்டும். 

அடக்கப்பட்டவைகள் வெளிச்சத்திற்கு வரட்டும். 
மறைக்கப்பட்டவைகள் அறியப்படட்டும். 
காரிருளையும் கதிரவனையும் பேசுபவர்களிடையே 
இணக்கம் உண்டாகட்டும்.  

ஏற்றப்படாத தீபங்களுக்கு ஒளியூட்டுக. 
அந்த வெளிச்சம் நம் பாதையின் மேல் கவிழட்டும். 
கானகத்து  இலைகளும்  
கவிதை இலைகளும் காணட்டும்.