நாகர்கோவில், ஜூலை 19- அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான தட களப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள் வென்ற கன்னியா குமரி மாவட்ட பெண் தலைமைக் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை நடத்திய உலக அளவிலான தடகள போட்டி ஜூன் 27 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை அமெரிக்காவில் அலபாமாவின் பர்மிங்கா மில் நடைபெற்றது. இந்தியா சார்பில் இப்போட்டியில் கன்னி யாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமைக் காவலர் கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இத்தகைய சூழலில் தலைமை காவலர் கிருஷ்ண ரேகாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ரா.ஸ்டாலின், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் நேரில் பாராட்டி வாழ்த்தினார்.