tamilnadu

img

போட்டித் தேர்வு : ரெண்டுக்கும் ஒரே நேரத்துல படிக்கலாமா? - ஹரி

என்ன தம்பி, ரெண்டு, மூணு நாளா ஆளயே காணோம்..?
ஆமா சீனியர்... சென்னைக்குப் போயிருந்தேன். ஒரு இன்டர்வியூக்கு கூப்புட்டு இருந்தாங்க..
ரெண்டு மாசமாத்தான பயிற்சி எடுத்துட்டு இருக்கீங்க... ஏன் திடீர்னு இன்டர்வியூக்குப் போயிட்டீங்க..?
வீட்டுல கேக்க ஆரம்பிச்சுட்டாங்க... எவ்வளவு நாளைக்குப் படிப்பேன்னு கேக்குறாங்க.. யாரோ ஒரு பொண்ணு ஒரு மாசம்தான் படிச்சுதாம்.. இப்போ போஸ்ட் ஆபீஸ் வேலைக்குப் போயிடுச்சாம்.. போன வாரம் எங்க ஊர்ல வீட்டுக்குப் பக்கத்துலயே வேலை கிடைச்சுருக்கு..
தம்பி... நாம போன வாரத்துல U, P, S & C னு பேசுனோம்..
ஆமா, சீனியர்... அதுல நீங்க இன்னும் கடைசிப்பகுதியான C பத்திச் சொல்லவேயில்ல. கொஞ்சம் இடைவெளி விழுந்துருச்சு.. பொதுவா நாம பாக்குறப்ப, மத்த தேர்வர்களும் இருந்ததுனால நானும் அது பத்திக் கேட்டுக்கவேயில்ல..
அதச் சொல்றதுக்கு இதுதான் சரியான நேரம்.. முதல்ல ஒண்ணு தெளிவாகனும்.. உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு போயிருக்குற வேலை, GDS ஆ..? இல்லேனா எஸ்.எஸ்.சி. தேர்வு எழுதிப் போயிருக்காங்களா..?
அலைபேசி மணி ஒலித்தது. “சீனியர், எங்க அக்காதான் பேசுறாங்க..” என்று சொல்லிக் கொண்டே அழைப்பை ஏற்றுப் பேசினார். வைத்தபிறகு, அது GDS வேலையாம் என்றவாறே சீனியரின் முகத்தைப் பார்த்தார்.
அப்படித்தான் இருக்கும்னு நான் நெனச்சேன். அதுக்கு ஒரு மாசமெல்லாம் தனியாப் படிக்க வேணாம். பத்தாம் வகுப்பு மார்க் வெச்சு எடுப்பாங்க.. பெரும்பாலும் வீட்டுப் பக்கத்துலயே வேலை போட்டுருவாங்க. பெரிய சம்பளம் இருக்காது. அஞ்சு வருஷம் கழிச்சு துறைரீதியான தேர்வு எழுதி தபால்காரரா ஆகலாம்... 
ஓ... எஸ்.எஸ்.சி ல எழுதிப் போறவங்களுக்கு என்ன மாதிரியான வேலை?
தபால் உதவியாளரா போவாங்க... நல்ல சம்பளம்... படிப்படியாகப் பதவி உயர்வும் இருக்கும்.. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துற ஒருங்கிணைந்த பட்டதாரி மட்டத் தேர்வு (SSC - CGL) எழுதித் தேர்ச்சி பெற்றா இந்தப் பணிக்குப் போகலாம்.. 
பட்டம் படிச்சவங்க மட்டும்தான் எஸ்.எஸ்.சி நடத்துற தேர்வுகள எழுத முடியுமா... நம்ம டி.என்.பி.எஸ்.சில பத்தாம் வகுப்பு படிச்சவங்க குரூப் 4 எழுதுற மாதிரி அங்க எதுவும் இல்லையா..?
இருக்கே... ஒருங்கிணைந்த மேல்நிலைக்கல்வி மட்டத் தேர்வு உள்ளது. Combined Higher Secondary Level என்பார்கள். இந்த தபால் உதவியாளர் பணியிடம் கூட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்தத் தேர்வுலதான் இருந்துச்சு.. இதுல இப்போ பணியிடங்களோட எண்ணிக்கை குறைஞ்சுருச்சு.. 
பத்தாம் வகுப்பு படிச்சுருந்தா..?
இருக்கு.. இருக்கு.. பலபணிகளைச் செய்யக்கூடிய ஊழியர்களை எடுக்க MTS தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.. முன்பெல்லாம் இந்தப் பணிகளைச் செய்பவர்களைக் கடைநிலை ஊழியர்கள் என்று சொல்லுவோம்..
டி.என்.பி.எஸ்.சிக்குப் படிக்குறவங்க, எஸ்.எஸ்.சி. தேர்வுக்காகத் தனியாகத் தயாரிக்கனுமா..?
இல்ல தம்பி.. ஆனா, பயிற்சி மையங்களுக்குப் போனா தனிப்பயிற்சிக் கட்டணம்தான்.. இதுக்குப் படிக்குற பொது அறிவுதான் அங்கயும்... கணிதம், காரணம் அறிதல், நடப்பு நிகழ்வுகள்னு எல்லாமே இதே மாதிரிதான்... ஒவ்வொரு பிரிவிலிருந்தும் எழுப்பப்படும் வினாக்களின் எண்ணிக்கை வேறுபடும்.. ஆனா, வினாவகைகள் ஒரேமாதிரிதான் இருக்கும். 
வட மாநிலங்கள்ல கிடைக்குற வினா வங்கிகள வாங்கிப் படிச்சாதான் தேர்ச்சி பெற முடியும்னு சொல்றாங்களே..
அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, அந்த வினா வங்கிகள் உண்மையிலேயே மிக நேர்த்தியா தயாரிச்சுருப்பாங்க.. பள்ளிக்கூடங்கள்ல சரியாகப் படிக்காதவங்க கூட, படிச்சுப் பாஸ் பண்றத இலக்கா வெச்சுருப்பாங்க..
ஏன் அந்த சிறப்புக்கவனம்..?
இப்போ உத்தரப்பிரதேசத்த எடுத்துக்கலாம்.. அங்க இருக்குற கல்வி முறை அப்புடி.. இப்ப இங்க பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குது... யார் பாஸ் பண்ணுவாங்க..
அஞ்சு பாடம் இருக்கு...எல்லாத்துலயும் தனித்தனியா 35 மார்க் வாங்கனும்..
சரியாச் சொன்ன தம்பி..  அப்படின்னா, மொத்தமா குறைஞ்சது 175 மார்க் வாங்கனும்ல..
ஆமா சீனியர்... உ.பி.ல எப்புடி..?
அங்க தனித்தனியா ஒவ்வொரு பாடத்துலயும் 33 மார்க் வாங்கனும்.. 
அப்படின்னா, 165 எடுத்தாப் போதுமா..?
இல்ல.. 132 எடுத்தாலே போதும்..
கணக்கு வரலையே... 33ஐ அஞ்சால் பெருக்கினால் 165தான வரும்..
கணக்கு வரவே இல்லேனாலும் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிரலாம்... கணக்குப் பாடத்துல பூச்சியம் வாங்கி, மத்த பாடங்கள்ல 33 மார்க் வாங்கிருந்தாலே போதும்..
கணக்குல மட்டுமா..?
இல்ல தம்பி.. இந்தி தவிர மத்த பாடங்கள்ல ஏதாவது ஒண்ணுல மார்க் வாங்கலேன்னாலும் அடுத்த வகுப்புக்குப் போயிரலாம்..
ஓ... இத மனசுல வெச்சுக்கிட்டுதான் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டிப் புத்தகங்கள் தயாராகுதா..?
ஆமா... 
அப்படின்னா, நாமளும் அத வாங்கிப் படிக்கலாமே..?
படிக்கலாம்... ஆங்கிலத்துலயும் இருக்கு... ஆனா, பெரும்பாலும் இந்திலதான் இருக்கும். அங்கதான் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துல மார்க்கே வாங்கலேன்னாலும் அடுத்த வகுப்புக்குப் போயிரலாமே.. ஆனா இந்தில பாஸ் பண்ணிருப்பாங்கள்ல..
அந்தப் பக்கம்லாம் நெறயா தில்லுமுல்லு நடக்குனு சொல்றாங்களே.. அதனாலதான் அங்கருந்து நிறையப் பேர் அரசுப் பணிகளுக்கு வர முடியுதுன்னு சொல்றது உண்மையில்லையா..?
அதுல ஓரளவுக்கு உண்மை இருக்கலாம்... ஆனா, தேர்வு நோக்குல படிச்சுப் பாஸ் பண்றவங்க அதிகம்தான்.. தேர்வு முறையும் அவங்களுக்கு சாதகமாத்தானே இருக்கு..
அப்போ எஸ்.எஸ்.சி. எழுத வேண்டாம்னு சொல்றீங்களா..?
எழுதனும்தான் சொல்றேன்... அந்த வினா வகைகள், தேர்வு முறை பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத் தயாராகலாம்.. ஒரே நேரத்துல இரண்டு தேர்வுகளவும் எழுதுனவங்க நிறையப் பேர் இருக்காங்க.. தேர்ச்சியும் பெற்றிருக்காங்க..
சில பாடங்களப் படிக்குறப்ப வட மாநிலங்கள் சார்ந்த பல்வேறு அம்சங்களக் கூடுதலாப் படிச்சுக்கனும். எஸ்.எஸ்.சி.ல அது தொடர்பான வினாக்கள் அதிகமா வரும். அவங்களுக்குலாம் விடுதலைப் போராட்டம்னாலே வட இந்தியாவுல நடந்ததுதான்.  அதனால அதக் கொஞ்சம் கூடுதலாப் படிச்சுக்க வேண்டியதுதான்..
சீனியர்... இவ்வளவு நேரமா இதப்பத்திப் பேசிட்டே வந்துட்டோம். நாம ஆரம்பிச்சது அந்த U, P, S & C... அதுல C பத்திப் பேசவேயில்லைனுதான் நான் கேட்டேன்.. ஆனா பக்கத்து வீட்டுப் பொண்ணு ஒரே மாசத்துல வேலைக்குப் போனதப் பேச ஆரம்பிச்சோம். இப்போ வகுப்புக்கு நேரமாச்சு..
பரவாயில்ல... நாளைக்கு முத வேலையா அதப் பேசிடுவோம். U னா Understanding... P னா Proceed... S னா Strengthen.. இந்த மூணு விஷயத்தப் பத்தியும் நாம பேசிட்டோம்... கடந்த சில நாளாப் பேசுனதும் இந்த S-ஐ மனசுல வெச்சுதான்.. அடுத்து C பத்திப் பேசலாம்..  ஆனா அந்த மூணு விஷயத்தையும் நீங்க நடைமுறைப்படுத்திட்டீங்களானு சோதிச்சுக்கோங்க தம்பி..
சரி சீனியர்...நாளைக்குப் பார்க்கலாம்..