எறும்பே எறும்பே ஊர்ந்தேவா எள்ளு மிட்டாய்த் தின்றிடவா ! மாறும் குணத்து மக்களுக்கு மாறா வரிசை காட்டிடவா! இறுக்கி மூடிய டப்பாவில் இனிப்பைச் சுவைக்க நுழைந்திடுவாய் ! குறுக்கு வழியில் வாழாமல் கூட்டத் தோடு உழைத்திடுவாய்! மழையின் காலம் வருமுன்னே மலைபோல் உணவைச் சேர்த்திடுவாய்! உழைப்பை விலையாய்க் கொடுத்திடுவாய் ஒன்றாய்ச் சேர்ந்தே வாழ்ந்திடுவாய்! தீங்கு செய்தால் கடித்திடுவாய் தீமைச் செயலைத் தவிர்த்திடுவாய்! வாங்கும் இனிப்பைக் கவனமுடன் வைத்தால் நீயும் தொடமாட்டாய்! எங்கும் உன்னைக் கண்டிடலாம் எண்ணும் பெயரில் பல ஆவாய்! உங்கள் பெயராய்ப் பல இருந்தும் உரைக்கும் பொதுப்பெயர் எறும்பாகும்!