ஈரோடு, நவ.2- இந்திய தொழில் கூட்ட மைப்பின் சார்பில் ஈரோட்டில் பொன் மஞ்சள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெள்ளியன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். ஈரோடு மாவட்டம், திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, கஸ்தூரிபாய் அரங்கில் நடை பெறும் இக்கருத்தரங்கில் பங் கேற்றமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் பேசுகையில், இந்தி யாவில் ஆண்டு தோறும் 6 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தி செய்யப் படுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், தாளவாடி, சேலம், ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அதிகளவு மஞ்சள் விளைவிக்கப் படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் இந்திய சமையலில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய் களுக்கு எதிர்பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது.இதன் காரணமாக, பலவகையான அழகு சாதன பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், துணிகளுக்கு சாயமேற்றுவதிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுவதால் சந்தையில் இதற்கு நல்ல வர வேற்பு உள்ளது. உலகின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 90 சத விகிதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நம் நாட்டு மண்ணில் விளையும் மஞ்சளில் ‘குர்குமின்” என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் தான் இந்திய மஞ்ச ளானது வெளிநாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மஞ்சள் ஏற்றுமதியில் 60 சத விகிதம் இந்தியாவில் இருந்து செய்யப்படுகிறது. இந்தியாவை அடுத்து பாகிஸ்தான், சீனா, ஜமைக்கா, பெரு, தைவான், தாய் லாந்து உள்ளிட்ட நாடுகள் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் குறிப் பாக ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மஞ்சளில் தான் ‘குர்குமின்” என்ற மருந்து பொருள் 3.5 சதவிகிதம் வரை இருப்பதால், வியாபாரிகள் விரும்பி மஞ்சளை வாங்குகின் றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மஞ்சள் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தி மஞ்சள் ஏற்றுமதியை அதிகப்படுத்துவது குறித்தும், இயற்கை விவசாயம் மூலம் மஞ்சள் சாகுபடி, நஞ்சில்லாத இயற்கை மஞ்சள் சாகுபடி, மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடு பயிர், மஞ்சள் பயிரில் நுண்ணூட்ட சத்து மேம்பாடு, மஞ்சளில் நஞ்சில்லா பயிர் பாதுகாப்பு, மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தடுப்பது குறித்தும், மஞ்சள் அறுவடையில் எளிய இயந்திரம், அறுவடை பின் செய் தொழில் நுட்பம், நஞ்சில்லா சேமிப்பு முறை, ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவ சாயிகள் சந்திப்பு என பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து அரசு அலுவலர்கள், வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விவ சாயிகள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்கள் எடுத்துரைக்க உள் ளார்கள். எனவே, ஈரோடு மாவட்டத் தில் உள்ள அனைத்து மஞ்சள் உற்பத்தியாளர்களும் 2 நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, கருத்தரங்கில் தெரிவிக்கப்படும் உயரிய தொழில்நுட்பம் மூலம் மஞ்சள் சாகுபடியில் அதிக வருமானம் ஈட்டும் வழிமுறைகளை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இக்கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் என்.குமார்,மத்திய துணை வேளாண் வணிக ஆலோசகர் டி.எம்.கோவிந்தரெட்டி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை) ப.தமிழ்செல்வி, இந்திய நறுமண பொருட்கள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் டி.பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.