tamilnadu

img

மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய ஊழியர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி

கோவை, மே 24–தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதை நிரூபிக்க மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய ஊழியர்களின் கடும் உழைப்பால் கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதாக பி.ஆர்.நடராஜன் பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 17 ஆவது மக்களவை தேர்தலை சந்தித்தது. மறுபுறம் மாநிலத்தில் ஆளும் அதிமுகவும், மத்தியில் ஆளும் பாஜகவும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் நடைபெற்ற 38 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை ஈட்டியது. குறிப்பாக, கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதைத்தொடர்ந்து கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற பி.ஆர்.நடராஜன் சான்றிதழை பெற்றவுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், சி.பத்மநாபன், ஆர்.பத்ரி, கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், திமுக நிர்வாகிகள் முத்துசாமி, நாச்சிமுத்து, காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் வி.எம்.சி.மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பி.கே.சுகுமாரன் தலைமையில் பி.ஆர்.நடராஜனுக்கு மலர் கீரிடம் அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். மேலும், எல்ஐசி ஊழியர் சங்கத்தினர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் அமைப்பு, ஓய்வுபெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கம்,விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பி.ஆர்.நடராஜனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பி.ஆர்.நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசுகையில், கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றுள்ள இந்த மகத்தான வெற்றி என்பது மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் ஊழியர்களின் கடும் உழைப்பால் கிடைத்த வெற்றி. கோவையை மையமாக வைத்து தமிழகத்தில் கால்பதிக்க வேண்டும் என்கிற மதவெறி சக்திகளின் சூழ்ச்சியை முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து தகர்த்திருக்கிறது. கோவையின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் நாடாளுமன்றத்தில் எனது குரல் வலுவாக எதிரொலிக்கும் என்றார்.