tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

பைக் சக்கரத்தில் சேலை சிக்கி  பெண் பலி

கிருஷ்ணகிரி,மார் 10- திருப்பத்தூர் மாவட்டம் ராவுத்தம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி அலமேலு (52 வயது) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மன்னாண்டியூரில் உள்ள தன்னுடைய மகளை வந்து பார்த்துவிட்டு, மருமகனின் இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி சென்றுள்ளார். எம்ஜிஆர் நகர் அருகே  அலமேலுவின் சேலை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கியுள்ளது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அலமேலு பலியானார். ஊத்தங்கரை காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இனி டீ, காபி கிடையாது

சென்னை, மார்ச் 10- சென்னையில் உள்ள விடுதிகளில் டீ, காபி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், சப்பாத்தி மற்றும் தோசை போன்ற உணவுகளும் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக கலவை சாதங்கள் வழங்கவும், வாரத்தில் இரு முறை அப்பளம் அல்லது முட்டை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு

கடலூர், மார்ச் 10- கடலூர் மாவட்டத்தில் சமையல் எரி வாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாள்கள் எரிவாயு முகமை அலுவலகத்தை நாடி வரத் தொடங்கி யுள்ளனர். மத்திய கிழக்கில் போர் விரிவடைந்து வரும் நிலையில், எரிவாயு உருளை விநி யோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.889, இல் இருந்து ரூ.949ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், வணிக ரீதியான எரிவாயு உருளை விலை ரூ.1,993.50 இல் இருந்து ரூ.2,078 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் வீட்டு உபயோக எரி வாயு உருளை முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள எரிவாயு உருளை விநியோகம் முகமை அலுவலகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். பலர் கைப்பேசி மூலமும் தொடர்பு கொண்டு காரணத்தை கேட்டதை காண முடிந்தது. இந்நிலையில், 1800224344 என்ற வாட்ஸ் அப் எண்ணில் இருந்து செவ்வாய்க்கிழமை முன்பதிவு நடைபெற்றது. அதுவும், ஒரு எண்ணில் இருந்து குறைந்தது 5 நபர்களுக்கு முன்பதிவு செய்யலாம் என எரிவாயு உருளை விநியோகம் முகமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். மேலும், வீட்டு உபயோக எரிவாயு உருளை முன்பதிவு இனி 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டும்தான் செய்யப்படும் எனவும், எரிவாயு உருளை விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

உணவகங்களுக்கு தடையின்றி  எரிவாயு உருளை வழங்க வேண்டும் உணவக உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

கடலூர், மார்ச் 10- உணவகம் அத்தியாவசியமான ஒன்று என்பதால், எங்களுக்கு எரிவாயு உருளை தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று, கடலூர் மாவட்ட உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் ராம்கி நாராயணன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக வீட்டு உபயோகம் மற்றும் வணிக ரீதியான எரிவாயு உருளைகள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக வணிக ரீதியான எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் ராம்கி நாராயணன் கூறுகையில், போர் காரணமாக எரிவாயு உருளை விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான உணவகங்கள் உள்ளன. உணவகங்களுக்கு வழங்கும் எரிவாயு உருளைகளை வணிக பயன்பாட்டின் கீழ் கொண்டுவந்து கொடுக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர். உணவகம் அதியாவசியமான ஒன்று. அதனால், எங்களுக்கு எரிவாயு உருளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், எங்கள் மாநிலத் தலைவர், புதுதில்லியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர். இந்த சூழ்நிலையில் எங்கள் வாடிக்கை யாளர்களிடம் அனைத்து நேரத்திலும் அனைத்து உணவையும் எங்களால் வழங்க முடியாது என வேண்டுகோள் விடுக்கிறோம். குறிப்பிட்ட உணவு மட்டும் தான் வழங்க முடியும். சில உணவுகளை கரி மூலம் செய்யலாம் என்றால், அதுவும் கடலூர்மாவட்டத்தில் தட்டுப்பாடாக உள்ளது. விறகு அடுப்பில் சமையல் செய்யும் அளவிற்கு தற்போதையவர்களுக்கு திறமை இல்லை. மேலும், பொலியூஷன் கண்ட்ரோல் பிரச்சனை உள்ளது. மின்சாரத்தை வைத்து செய்யலாம் என நினைத்தால் அதற்கான உபகரணங்கள் கிடைக்கவில்லை. காலத்திற்கு தகுந்தால் போல் அனைத்தையும் மாற்றிக்கொண்டு வந்துவிட்டோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல முடியாது. உணவகம் மூடப்பட்டால் அனைத்துத்தரப்பினரும் பாதிக்கப்படுவர் என்றார்.