tamilnadu

img

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் பங்கேற்பதற்கு தகுதிச் சான்றிதழை வழங்கிடுக - ஆர்.சசிதானந்தம் எம்.பி

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மருத்துவ மாணவர்கள் FMGE தேர்வில் கலந்து கொள்வதற்கு  தேசிய மருத்துவ ஆணையத்தின் தகுதி சான்றிதழுக்காக 18 மாதங்களாக காத்திருக்கின்றனர். தகுதி சான்றிதழுக்காக அவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். 
2018 - 2019, 2019 - 2020-ஆம் கல்வியாண்டில் பிலிப்பைன்ஸில் பி.எஸ்(B.S.,) படிப்பு அல்லது வெளிநாடுகளில் முன் மருத்துவ படிப்பை  (Pre Medical Courses) தொடங்கியவர்கள் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் (MBBS) அல்லது அதற்கு இணையான மருத்துவ படிப்புகள் பயில்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் தகுதிச் சான்றிதழ் பெறுவதும் கட்டாயமாகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேசிய மருத்துவ ஆணையம் தகுதிச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. 
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற 400 மாணவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி 17ஆம் தேதி வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வு (FMGE ) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையம்  தகுதிச்  சான்றிதழ் வழங்காததால் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வில் பங்கேற்பதற்கு,  தகுதிச் சான்றிதழ் வழங்கிடுவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும் என்று ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அவர்களிடம் கடிதம் வாயிலாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார்