tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

வேலூரில் நாளை தனியார்துறை  வேலைவாய்ப்பு முகாம்

 வேலூர், நவ.13- வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.15 (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர், காட்பாடி விஐடி. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு. 12-ஆம்வகுப்பு. தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு. பட்டயப்படிப்பு. முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, செவிலியர். பார்மஸி, பொறியியல் போன்ற பல்வேறு கல்வித்தகுதியுடைய வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, நவ.13-  ரஜினிகாந்த்,  கே.எஸ்.ரவிகுமார் உள்பட பல திரைப்பிரபலங்களின் வீடுகளுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். இதுவரை எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமச்சந்திரா மருத்துவமனைக்கு  ஐரோப்பிய அங்கீகாரம்

சென்னை, நவ.13-  போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் கதிர்வீச்சு துறைக்கு ஐரோப்பிய பயிற்சி அங்கீகாரத் திட்ட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இந்த அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே மருத்துவமனை என்ற பெருமையை இது பெற்றுள்ளது. மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை தலைவர் டாக்டர் பி.எம்.வெங்கடசாய் கூறுகையில், “அதி நவீன பெட் சிடி உள்பட பல்வேறு கதிரியக்க பரிசோதனைக் கருவிகள் இங்கு உள்ளன. ஆண்டுதோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு துல்லியமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பிய பயிற்சி அங்கீகாரத் திட்டக் குழுவினர் மதிப்பீடு செய்து, அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட தரநிலையில் உள்ளதை உறுதிசெய்தனர்” என்றார். ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, கதிரியக்க பாதுகாப்பு மற்றும் கதிர்வீச்சு நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 5ஆண்டுகளுக்கு இந்த அங்கீகாரம் செல்லுபடியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருவருக்கு 3 ஆண்டு சிறை

விழுப்புரம், நவ.13- விழுப்புரம் மாவட்டம், பாப்பனபட்டுப் பகுதியில் அரசு டாஸ்மாக்கில் பணிபுரியும் வெங்கடேசன் என்பவர், கடந்த 21.05.2017 அன்று இரவு, மறுநாள் வங்கியில் செலுத்த வைத்திருந்த ரூ. 4,37,592 பணத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது, பனையபுரம் என்ற இடத்தில் இரண்டு நபர்கள் வழிமறித்து மிரட்டிப் பணத்தைப் பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பண்ருட்டி தாலுக்காவைச் சேர்ந்த சசிகுமார் (31) மற்றும் ஜெயபிரகாஷ் (28) என்பது தெரியவந்தது. இவ்வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில், வியாழக்கிழமை அன்று நீதிபதி அரவிந்த் பாரதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இருவருக்கும் தலா ரூ. 5ஆயிரம் அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

மதுபானங்கள் கடத்திய இருவர் கைது

விழுப்புரம், நவ.13- விழுப்புரம் மாவட்டத்தில், கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடி அருகே மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான காவல்துறையினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாகச் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுகுந்தன் (24) மற்றும் தீபக் (20) ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் விற்பனைக்காக மதுபானங்களைக் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 180 மிலி அளவு கொண்ட 480 மதுபானப் பாட்டில்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சிதம்பரம், நவ.13- சிதம்பரம், கனகசபை நகர், முதலாவது குறுக்குத் தெருவில் தனியாக வசித்து வரும் விஜயலட்சுமி (83) என்ற மூதாட்டியின் வீட்டிற்கு, வியாழக்கிழமை காலை ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அவர், “அருகில் வீடு வாங்கியுள்ளேன், என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்” என்று கூறி, மூதாட்டியின் கழுத்தில் தனது கவரிங் செயினை அணிவிப்பது போல் பாசாங்கு செய்து, மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை நூதனமாக மாற்றிப் பறித்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவானந்தன் விசாரணை மேற்கொண்டு, மர்ம நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பசுமாட்டை மீட்க முயன்ற  மூதாட்டி  பாலாற்றில் மூழ்கி பலி

வேலூர், நவ.13- கே.வி.குப்பம் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்சென்ற தனது மாட்டை மீட்க முயன்ற மூதாட்டி நீரில் மூழ்கி பலியானார். அவரது மருமகள் உயிருடன் மீட்கப்பட்டார். காவனூர் ஊராட்சி கருத்தம்பட்டை சேர்ந்த வஜ்ஜிரம் (70) மாடுகள் வளர்த்து வருகிறார். அவரது மனைவி கீதா (60), மருமகள் பூர்ணிமா (30) ஆகியோர் செவ்வாயன்று  பசுமாடுகளை பாலாற்றங்கரை வயல்வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர். ஒரு பசுமாடு காணாமல் போனது. புதனன்று மாலை பசுமாடு ஆற்றின் மறுபக்கம் நீரில் அடித்துச்சென்று தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது. கீதாவும் பூர்ணிமாவும் மாட்டை மீட்க ஆற்றில் இறங்கியபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கிராம மக்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி இருவரையும் மீட்டனர். போலீசார் இருவரையும் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில் கீதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பூர்ணிமாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிற்கு அழைத்துச்செல்கிறது. கியூஆர் குறியீடு மூலம்  குறைதீர்க்கும் புதிய திட்டம்

சென்னை, நவ.13-  ரயில் நிலைய உணவகங்களின் குறைபாடுகளை தீர்க்க கியூஆர் குறியீடு அடிப்படையிலான அமைப்பு இந்திய ரயில்வேயில் முதல்முறையாக சென்னை கோட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட அறிக்கையில், “ரயில்மதத் செயலி உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னோடி முயற்சியானது, கோட்டம் முழுவதும் உள்ள அனைத்து கேட்டரிங் ஸ்டால்களிலும் கியூஆர் குறியீடு மூலம் குறைகள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக கட்டணம் வசூல், சேவைக் குறைபாடு, உணவின் தரம் மற்றும் அளவு, உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமை, சுகாதாரம் தொடர்பான புகார்களை இந்த அமைப்பு மூலம் பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட்டரிங் ஆய்வாளர்கள் மற்றும் நிலைய மேலாளர்களுக்கு நிகழ்நேர எச்சரிக்கைகள் பகிரப்படுவ தால், பிரச்சனைகள் உடனடியாக கவனிக்கப்படும். இந்த முயற்சி பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள்  கார்ப்பரேசனில் இணைய மறுப்பு!

சென்னை, நவ.13-  ஒன்றிய அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு 7 கார்ப்பரேசன்களில் இணைவதற்கு 41 படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் எவரும் தயாராக இல்லை என அனைத்து சம்மே ளனங்களும், சங்கங்களும் பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளரிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் அதிகாரிகள் உட்பட எவரும் அரசு பணியை ராஜினாமா செய்து கார்ப்பரேஷன் ஊழியராக மாற விரும்பவில்லை என மத்திய அரசுக்கு தெளிவாக அறிவித்துள்ளோம். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர், 7 கார்ப்பரேசன்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைப்பு விடுத்தார்” என்றார். கூட்டத்தில் தலைமை தாங்கிய பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர், “உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறித்து பேசுவதற்காக அழைத்திருந்தாலும், கார்ப்பரேசனில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்” என வலியுறுத்தினார். இதை அனைத்து சம்மேளனங்களும் சங்கங்களும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தன. அரசு ஊழியர்களாகவே பணி நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தன்னிச்சையான பீஸ்ரேட் குறைப்பு, உத்தரவாத ஊதியம் வழங்காதது, அனைத்து தொழிற்சாலைகளுக்கும் போதுமான பணிச்சுமை வழங்காதது, பணிச்சுமை உள்ள தொழிற்சாலைகளில் மிகை நேர ஊதியம் வழங்காதது, கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு நிறுத்தம், காலியிடங்களை நிரந்தரமாக நிரப்பாதது ஆகியவற்றை கண்டித்து குரல் எழுப்பப்பட்டது. இந்த பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

விரைவு ரயில்களின் சேவை நேரங்களில் மாற்றம்

சென்னை, நவ.13- சென்னை ரயில் கோட்டப் பகுதிகளில் ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகள் நடை பெறுவதால், வரும் நாட்களில் பல விரைவு ரயில்களின் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் 26 அன்று, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு மற்றும் சென்ட்ரல் - ஏற்காடு விரைவு ரயில்கள் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும். மேலும், நவம்பர் 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாகச் சென்றடையும். திருவனந்தபுரம் - செகந்திராபாத் ரயில் உட்பட பல நீண்டதூர ரயில்கள் பல்வேறு நாட்களில் 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை தாமதமாகச் செல்லும் அல்லது சென்ற டையும். இதற்கிடையில், சூலூர்பேட்டை ரயில் நிலையம் அருகே நடைபெறும் பணி காரணமாக, சூலூர்பேட்டை - சென்ட்ரல் (மாலை 6:40) மற்றும் சென்ட்ரல் - ஆவடி (இரவு 9:25) மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், சென்ட்ரல் - சூலூர்பேட்டை மற்றும் சூலூர்பேட்டை - சென்ட்ரல்/கடற்கரைக்கு இடையே இயங்கும் பல மின்சார ரயில்கள் எளாவூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே பகுதியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆட்டோவில் பயணியிடம்  6 சவரன் நகை பறிப்பு

சென்னை, நவ.13- மாதவரம் அருகே ஆட்டோவில் வந்த பயணியிடம் 6 சவரன் நகை பறித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மாதவரத்தை சேர்ந்த அஜித் நாயர் (33) வட பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். புதன்கிழமை அன்று அவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் 20 வயது பெண்ணும் மாதவரம் பேருந்து நிலை யத்திலிருந்து ஆட்டோவில் பயணம் செய்தனர். மாத வரம் சின்ன ரவுண்டானா வி.எஸ்.மணிநகர் அருகே சென்றபோது ஆட்டோ ஓட்டுநர் மறைவிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி அஜித் நாயர் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கச் செயினைக் கேட்டார். அவர் மறுக்கவே, உடன் வந்த இளம்பெண்ணைப் பிடித்துக்கொண்டு நகையை கழற்றி கொடுக்கு மாறு மிரட்டினார். பயந்த பெண் அலறியதைக் கேட்டு அந்தவழியாக சென்ற வர்கள் ஓடிவர, ஓட்டுநர் செயினைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அஜித் நாயர் புகாரின் பேரில் மாதவரம் குற்றப்பிரிவு காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மாத வரத்தை சேர்ந்த பிரசாத் என்பவரை (24) கைது செய்தனர். 6 சவரன் செயின் மீட்கப்பட்டது. குற்றவாளி  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.