அரபாத் ஏரியில் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணிகள் அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
அம்பத்தூர், நவ.12- அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் அரபாத் ஏரியில் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். திருமுல்லைவாயில் அரபாத் ஏரி 26.40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை சுற்றி 3 கி.மீ நீளத்திற்கு நடைபாதை அமைத்தல், குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், உணவு அரங்கம், உயர்தர மின் விளக்குகள், யோகா மையம், நூலகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேற்கொள்ள ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை அரபாத் ஏரி புனரமைப்பு பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் சோழம்பேடு பிரதானச் சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை திறந்து வைத்து சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்தார். மேலும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஆவடியில் 8 இடங்களில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்குகளை அமைச்சர் நாசர் மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தார். நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், ச.சசிகாந்த் செந்தில் எம்பி, ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆணையர் ரா.சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.