tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சர்வதேச நாள்: மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவம் வளர்க்க உறுதியேற்போம்: சிபிஎம்

மாற்றுத்திறனாளிகள் சர்வதேச நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

டிசம்பர் 3, மாற்றுத்திறனாளிகள் சர்வதேச நாளுக்காக இந்த ஆண்டின் கருப்பொருள், “மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கி நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமையை மேம்படுத்துதல்” என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளை அரசின் நிர்வாகப் பொறுப்புகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளிலும், பொது அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளிலும் அமர்த்தப்பட வேண்டும் என்பதே இந்த முழக்கத்தின் நோக்கமாகும். எனவே, இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் இந்த இலக்கை முன்னெடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதியேற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களின் மீது 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி போட்டுள்ள மோடி அரசாங்கம், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு நேர்மாறாக பயணிக்கிறது. மேலும், 2016 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சட்டத்தை முழுமையாக அமலாக்கவும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. மாநில அரசுகளால் தரப்படும் மாதாந்திர உதவித் தொகையில் வெறும் 3 சதவீதம் பேருக்கு பெயரளவில் ரூ.300 மட்டும் ஒன்றிய அரசால் தரப்படும் நிலைமை மாறவில்லை, கடந்த 12 ஆண்டுகளாக இந்த தொகையில் சிறிதளவு உயர்வு கூட இல்லை.

எனவே, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்தை, மாற்றுத்திறனாளிகளின் தலைமையையும் வலுப்படுத்தி, நலன் காக்கும் போராட்டத்தை வலுப்படுத்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோருகிறது. டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் வாழ்த்துக்களை பொருளுள்ளதாக்கிடுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.