டிஆர்ஏ ஹோம்ஸ் ஊழியர்களுக்கு ரூ.125 கோடி மதிப்புள்ள பங்குகள் வருவாயை பெருக்கியதால் நிறுவனம் வெகுமதி
சென்னை, நவ.13- சென்னையில் இயங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஆர்ஏ ஹோம்ஸ், ரூ.125 கோடி மதிப்புள்ள ஊழியர் பங்கு மற்றும் உரிமைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது நிறுவனத்துடன் தொடர்புடைய ஓட்டுநர்கள் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் ரத்தோட் தெரிவித்துள்ளார். “நிறுவனத்தில் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கலாச்சாரத்தைக் கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். முதல் கட்டமாக, டிஆர்ஏ 100 தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு உரிமையை வழங்கியுள்ளது, மீதமுள்ளவை படிப்படியாக வழங்கப்படும்,” என்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். குடும்பத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.2,500 கோடி ஆகும். கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.525 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. ஈசாப் திட்டத்துடன், இந்த நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.6 கோடி மதிப்புள்ள செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளது. அத்துடன், ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களுக்காக நவம்பர் 14 முதல் 19 வரை வியட்நாமிற்கு அழைத்துச்செல்கிறது.