tamilnadu

img

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) வரவேற்றுள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 
"கோவை கல்லூரி மாணவி மீது நடைபெற்ற கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ், கார்த்திக், தவசி ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து சாகும் வரை சிறை தண்டனை என்ற தீர்ப்பை கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது.
கோவையில் கடந்த 2025 நவம்பர் 2 ம்தேதி நடைபெற்ற இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவி தனது  நண்பருடன் இருந்தபோது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி அவரை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த கொடூரச் சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிய கவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடைபெற்ற உடனேயே ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையரரை சந்தித்து உடனடி நடவடிக்கை கோரி மனுவும் அளிக்கப்பட்டது.
கோவை மாநகர காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தது. காவல்துறை விசாரணையின் போது சம்பவ இடத்திலிருந்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. மருத்துவ பரிசோதனை அறிக்கைகள்,  சிசிடிவி காட்சிகள் மற்றும் பல்வேறு சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி குறுகிய காலத்திலேயே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் முழுமையான விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்பட்டு  அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மிகக் கொடூரமான குற்றங்கள் என்றும் இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்ததும், அரசு வழக்கை துரிதமாக விசாரணைக்கு கொண்டு வந்ததும், அரசு வழக்கறிஞரின் வாதமும், நீதிமன்றம் விரைவாக தீர்ப்பு வழங்கியதும் பெண்களுக்கு நீதியை உறுதி செய்யும் நடவடிக்கையாகும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில், இத்தகைய வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோரிக்கையாகும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறையின் உறுதியான நடவடிக்கைகளை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. இந்த கொடூரமான வன்முறைக்கு ஆளானபோதும் அச்சமின்றி நீதிக்காக உறுதியுடன் நின்று போராடிய  மாணவியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுகிறது. சமூக அழுத்தங்களையும் மீறி நீதிக்காக அவர் எடுத்த துணிச்சலான நிலைப்பாடு  பாதிக்கப்படுகிற பெண்களுக்கு ஊக்கமளிப்பதாகும்.
மேலும் நிலுவையில் உள்ள பெண்கள் மீதான பாலியல் வன்முறை  வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கி தண்டனை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.