மலேரியா இல்லாத நாடு எகிப்து: உலக சுகாதார மையம் அறிவிப்பு கெய்ரோ, அக்.22- எகிப்தை மலேரியா இல்லாத நாடாக அறிவித்து அதற்கான சான்றையும் கொடுத்துள்ளது உலக சுகாதார மையம். எகிப்துக்கு வழங்கியுள்ள இந்த சான்று அந்நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் இடைவிடாத சுகாதார துறையில் செய்த அர்ப்பணிப்புமிக்க பணிக்கு கிடைத்துள்ள சான்றாகும். மலேரியாவை ஒழிக்கும் இந்த பணியில் அவர்களது அயராத உழைப்பு அடங்கி யுள்ளது என உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியஸ் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் 43 நாடுகள் மலேரியாவை ஒழித்துள்ளன. இந்நிலையில் எகிப்து 44 ஆவது நாடாக இந்த பட்டியலில் இணைந்துள்ளது. அனோபிலஸ் வகை கொசுக்களால் பரவும் மலேரியா பாதிப்பு சுமார் மூன்று ஆண்டு வரை பரவாமல் தடுக்கப்பட்டதை ஒரு நாடு நிரூபித்து அதற்கான ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் போது அந்நாட்டிற்கு உலக சுகாதார மையம் மலேரியா இல்லாத நாடு என்ற சான்றிதழை வழங்கும். அது மட்டுமின்றி மீண்டும் மலேரியா பரவுவதை தடுக்கும் திறனையும் அந்நாடு நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.