தீவிரமடையும் போர்; லெபனான் மீதும் குண்டுவீசித் தாக்குதல்! அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராட்டம்
டெஹ்ரான், மார்ச் 2 - ஈரான் மீது குண்டு வீசி, அந்நாட் டின் மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனி, பாதுகாப்புத்துறை அமைச்சர், ராணுவத் தளபதிகள் என 40-க்கும் மேற்பட்டவர்களை படு கொலை செய்த அமெரிக்கா - இஸ் ரேல், தற்போது லெபனானையும், தாக்கி வருகிறது. இங்கு குண்டு வீசி, 30-க்கும் மேற்பட் ட்டோரை கொன்று குவித்துள்ளது. இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா விற்கு உள்ளேயே பெரும் அரசியல் விவாதங்கள், சர்வதேச அளவில் தீவிரமான போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளன. ஏமனில் காமேனியின் உருவப் படங்களை ஏந்தியபடி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல்லா யிரக்கணக்கான மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதேபோல ஈராக்கில் போராடிய ஈராக்கிய ‘ஷியா’ ஆயுதக் குழுக்களின் ஆதரவாளர்கள், பாக்தாத் தின் அதீத பாதுகாப்பு வளையமான ‘கிரீன் ஜோன்’ (Green Zone) பகுதிக் குள் நுழைந்து, அமெரிக்கத் தூத ரகத்தை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறை அவர்கள் மீது வன்முறையை ஏவித் தாக்குதல் நடத்தியது. துருக்கி தலைநகர் அங்காரா வில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் திரண்ட போராட்டக்கா ரர்கள், டிரம்பின் உருவப்படத்தைக் காலில் போட்டு மிதித்துத் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென் ஸில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரே லியத் தூதரகங்களை நோக்கி அந்நாட்டு மக்கள் போர் எதிர்ப்பு பேரணிகள் நடத்தினர். ஈரானின் பதிலடி இதனிடையே, அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சுமார் 550-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி யுள்ள நிலையில், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களை குறிவைத்து, ஈரான் தாக்கு தல் நடத்தி வருகிறது. குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் ராணுவத்தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சவூதியில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோ மீதும் ஈரான் தாக்கு தல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து அந்நிறுவனம் மூடப் பட்டுள்ளது. இதேபோல கத்தாரின் ராஸ் லாஃபன் (Ras Laffan) நக ரத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது இரண்டு டிரோன் தாக்குதல் நடத்தப் டுள்ளது. இதனைத் தொடர்ந்து கத்தா ரும் தனது எரிவாயு உற்பத்தியை நிறுத்தியுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட அமெ. போர் விமானங்கள் அமெரிக்காவின் மூன்று எப்-15இ ரக போர் விமானங்கள் குவைத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. குவைத் அமெரிக்க ஆதரவு நாடு என்ற நிலை யில், இந்த தாக்குதலானது ஏவுகணை தடுப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தவறுதலாக நடந்தது என கூறப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி ஓமன் நாட்டின் மஸ்கட் மாகா ணத்தில் இருந்து 96 கி.மீ. தொலை வில் நடுக்கடலில் சென்று கொண்டி ருந்த ‘MKD VYOM’ என்ற எண்ணெய் கப்பல் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மூலம் தாக்கப்பட்டது. ஈரான் ஆதரவுக்குழுக்கள் நடத்தியதாகக் கூறப்படும் இந்த தாக்குதலில் கப்பலின் எஞ்சின் அறையில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 21 ஊழி யர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் மீது குண்டுமழை இவை ஒருபுறமிருக்க, லெப னான் தலைநகர் பெய்ரூட் மற்றும் பிற பகுதிகள் மீது இஸ்ரேல் போர் விமா னங்கள் குண்டுமழைபொழிந்துள்ளன. லெபனான் தேசிய செய்தி முகமை யின்படி, இஸ்ரேலின் இந்த தாக்குத லில் 31 பேர் கொல்லப்பட்டிருப்பதும், 149 பேர் படுகாயம் அடைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. தெற்கு பெய்ரூட், தெற்கு லெபனானின் கிராமங்கள் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு (Bekaa Valley) ஆகிய இடங்களில் இஸ்ரேல் தீவிரமாக குண்டு வீசி வரு கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங் கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும் இஸ்ரேல் ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா பதிலடி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரே லின் ஹைஃபா (Haifa) ராணுவத் தளம் மீது, ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. லெபனானையும் அதன் மக்களை யும் பாதுகாப்பதற்காகவும், ஈரான் தலைவர் அலி காமேனி படுகொலை க்குத் தீர்ப்பு வழங்கவும் இந்தத் தாக்கு தல் நடத்தப்பட்டது. கடந்த 15 மாதங் களாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை நடத்தி வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் எனவும் ஹிஸ்புல்லா திங்கள்கிழமை அதிகாலை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொலை மிரட்டல் ஹிஸ்புல்லாவின் பொதுச் செய லாளர் நயீம் காசிம்இப்போது இஸ்ரே லின் கொலைப் பட்டியலில் உள்ளார். ‘காமேனியின் பாதையைப் பின்பற்று பவர்கள் அனைவரும் விரைவில் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்’ என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 2024 போரில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர்கள் பலரை இஸ்ரேல் கொன்றதால் அந்த அமைப்பு பலவீனமடைந்துள்ளது என கூறப்படு கிறது. இருப்பினும், தற்போது அமெரிக்கா - இஸ்ரேல் ஒருபுறமும், ஈரான் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் மறுபுறமும் என இந்தப் போர் ஒரு முழுமையான பிராந்தியப் போராக மாறும் அபாயம் எழுந்துள்ளது. தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் நியமனம் அமெரிக்க - இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானிய புரட்சிகர காவல் படையின் (Revolutionary Guards) ஜெனரல் மஜித் எப்னெல்ரெசா ஈரானின் தற்காலிக பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவரது ஊடகத் தொடர்புத் துறை துணை அதிகாரி மெஹ்தி தபதாபயீ தெரிவித்துள்ளார்.
