tamilnadu

img

10 லட்சம் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்

புதுதில்லி, டிச.16-  பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் டிசம் பர் 16 வியாழனன்று தொடங்கியது. இந்த வேலைநிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.  ஒன்றிய பாஜக அரசு பொதுத் துறை வங்கிகளை தனியார்மய மாக்கும் மசோதாவை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரு வதை கைவிடக் கோரி வங்கி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இரண்டு நாள் (டிச. 16, 17) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. பெபி, ஏஐபிஇஏ, ஏஐபிஒசி, என்சிபிஇ,ஏஐபிஒ, ஐஎன்பிஒசி உட்பட ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான தேசிய வங்கிக ளின் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள் ளது. இதனையடுத்து நாடு முழு வதும் வங்கி ஊழியர்களின் ஆவேச போராட்டம் நடைபெற்றது. 

வராக்கடன் எனும் பயங்கரம்

2014 ஆம் ஆண்டில் மோடி அரசு ஆட்சிக்கு வரும்போது அரசு வங்கி களின் மொத்த வராக் கடன் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி.இந்த 7 ஆண்டு காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல். இந்த தள்ளுபடி அனைத்தும் பெரும் முதலாளி களுக்கே செய்யப்பட்டது. அதற் குப் பிறகும் தற்போதுள்ள வராக்  கடன் ரூ.9 லட்சம் கோடியை தாண்டி யுள்ளது. இவ்வராக் கடனில் சுமார் 90 சதவீதம் அளவிற்கு ரூ. 5 கோடி யும் அதற்கு மேல் கடன் வாங்கி திரும்பிச் செலுத்தாத பெருங்கட னாளிகள் உள்ளனர். சாமானிய மக் களுக்கு வழங்கப்படும் விவசாயக் கடன், குறுந்தொழில் கடன், கல்விக் கடன், பெண்களுக்கான சுயஉத விக்குழு கடன் ஆகியவற்றால் ஏற் படும் வராக் கடன் ஒட்டுமொத்த வராக் கடனில் 2 சதவீதம் கூட கிடையாது. கார்ப்பரேட் பெருநிறுவனங் களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வராக் கடனை வசூலித்தாலே அரசு கஜானாவிலிருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. நம் நாட்டில் 14 ஆயிரம் மக்க ளுக்கு ஒரு வங்கிக் கிளை தான் உள்ளது. இருந்தபோதும் இணைப் பின் விளைவாக பல்லாயிரம் கிளை கள் மூடப்படுகின்றன என்பது குறிப் பிடத்தக்கது.

ஏஐபிஓசி பொதுச் செயலாளர்  சௌமியா தத்தா கூறுகையில், “அர சாங்கத்தின் தவறான அணுகு முறை காரணமாகவே வேலைநிறுத் தம் நடைபெறுகிறது என்றார்.  நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாக இந்திய வங்கி ஊழியர் சங்கம் (பெபி) அறிவித்துள்ளது.  மகாராஷ்டிராவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தொழிற்சங்கங்கள் தெரி வித்துள்ளன.மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் வியாழக்கிழமையன்று 5 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றத்தின் (யுஎஃப்பியு) கன்வீனர் (மகாராஷ்டிரா) தேவிதாஸ் துல்ஜா புர்கர் தெரிவித்தார்.

தமிழகம்

தமிழகத்தில் மொத்தம் (2018 ஆண்டு தரவு களின் அடிப்படை) 10,758 வங்கிக் கிளைகள் உள்ளன. இதில் தனியார் வங்கிக் கிளைகள் 3,577. அயல்நாட்டுவங்கிகள் 20. இவற்றைக் கழித்தால் மொத்தம் 7,161 வங்கிக்கிளைகள் உள்ளன. இதில் பாரத ஸ்டேட் வங்கிகளின் குழுமம், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள், மற்ற பொதுத்துறை வங்கிகள், மண்டல அளவிலான கிராமப்புற வங்கிகள் என மொத்தம் 7,161 கிளைகள் உள்ளன. 

திமுக ஆதரவு

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவினை வழங்குகிறது என திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரை முருகன் தெரிவித்துள்ளார். கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்க ளிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோச மான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூ லிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள் - பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில் காட்டுவதில்லை. உழைத்துச் சம்பாதித்துப் பொதுத்துறை வங்கிகளில் போட்டுள்ள சேமிப்புகளைக் கூட சுரண்டுவதற்கு ஏதுவாக இதுபோன்ற வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிட ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று அவர் கண்டித்துள்ளார்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. ரூ.157 லட்சம் கோடி மக்கள் பணத்தை தனியாருக்கு கொடுப்பதா?  ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் மிக எழுச்சியு டன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொ துச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறினார். வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே கூட்டமைப்பு சார்பில் வியாழனன்று (டிச. 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதுகுறித்து சி.எச்.வெங்கடாச்சலம் செய்தி யாளர்களிடம் கூறுகையில்,

157 லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம்  வைப்புத் தொகையாக உள்ள பொதுத்துறை வங்கிகளை ஒன்றிய அரசு தனியாரிடம் ஒப்ப டைக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடை பெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்வதாக அறிவித்தி ருக்கிறார்கள். அதை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக இரண்டு நாள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் சேமிப்பு பணத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என கோருகிறோம். மக்களுக்கு அதிக சேவை வழங்குவதும், தேவையான அளவு கடன் வழங்குவதும் பொதுத்துறை வங்கி கள்தான். பொதுத்துறை நிறுவனங்களை வளர்த்தெடுப்பதற்கு மாறாக தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு தவறானது. இது நாட்டிற் கும், மக்களுக்கும், ஊழியர்களுக்கும் எதிரானது. பெரு நிறுவனங்களும், பெரு முதலாளிகளும் வாங்கியிருக்கக் கூடிய கடன்கள்தான் வராக் கடன்களாக நிலுவையில் உள்ளது என்றார்.

1969ஆம் ஆண்டுக்கு முன்னர் வங்கிகள் தனி யாரிடம் இருந்த போது, அவை மோசடியாக நடத்தப்பட்டு மக்கள் பணத்தை இழந்திருக்கி றார்கள். இன்றைக்கும் கூட பல தனியார் வங்கிக ளின் நிலை அப்படித்தான் உள்ளது. எனவே மக்கள் பணத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்பது தான் முக்கியம். விவசாயம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற வளர்ச்சிக்கு, பெண்களுக்கு, கல்வி,  சுகாதாரம் உள்ளிட்ட பலவற்றிற்கு பொதுத்துறை  வங்கிகள்தான் கடன் வழங்குகிறது. தனியார் வங்கிகள் இதை வழங்காது என்பதை சுட்டிக் காட்டினார்.

போராட்டம் தீவிரமடையும் 

“இந்நிலையில் தொடர் போராட்டத்தின் விளைவாக ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர் புதன்கிழமை (டிச. 15) வரை பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம்  தொழிற்சங்கங்கள் சார்பில் மசோதா தாக்கல் செய்வதை கைவிட்டு விடுங்கள் என வலியுறுத்தி னோம். ஆனால் அரசு அதை ஏற்கவில்லை. அத னால் திட்டமிட்டபடி ஊழியர்கள், அதிகாரிகள், கிளை மேலாளர்கள் உட்பட 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 80 ஆயிரம் பேரும் வேலை நிறுத் தத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த போராட் டத்திற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும், அனைத்து தொழிற் சங்கங்களும், அரசியல் கட்சிகள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என்று  வலியுறுத்தினார். இல்லை என்றால் எங்கள் போராட்டம் தீவிரமடையும்” என்றும் சி.எச்.வெங்கடாசலம் எச்சரித்தார். 

இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்க ளுக்கு பாதிப்பு என்ற குற்றச்சாட்டு எழுகிறதே என்ற கேள்விக்கு, இந்த பாதிப்பு இரண்டு நாள்  மட்டும்தான். வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக் கப்பட்டு விட்டால் சேவைக் கட்டணம் கூடுதலா கும், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் குறையும், கடன்களுக்கு கூடுதல் வட்டி வசூ லிக்கப்படும், கிராமப்புறத்தில் உள்ள கிளைகள் மூடப்படும். எனவே இந்த வேலை நிறுத்தம் வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்துத்தான் என்றார்.

ஒன்றிய அரசு மறுத்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு, 1991ஆம் ஆண்டு முதல் 41 முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தனியாரிடம் ஒப்படைப்பதை தடுத்து நிறுத்தியுள்ளோம். அனைத்து தரப்பினர் ஆதர வும் இருப்பதால் இந்த முறையும் அரசு பின்வாங்கும் என நம்புகிறோம். இல்லையென் றால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார். வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்ட னர். வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தோழர்கள் கிருபாகரன், பாலாஜி (NCBE),  இ.அருணாசலம், சி.எச்.வெங்கடாசலம் (AIBEA), சி.பி.கிருஷ்ணன் (BEFI), ராமபத்தி ரன் (AIBOA), முரளி சௌந்தரராஜன் (AIBOC) மற்றும் ஜெர்ரி (INBOC) ஆகியோர் போராட் டத்தை ஆதரித்துப் பேசினர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், வேலூர், சேலம், ஈரோடு, தருமபுரி, கோயம்புத்தூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, புதுச்சேரி உட்பட 20க்கும் அதிகமான மையங்களில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி ஊழி யர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்ட சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் 600-க்கும் அதிகமான பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள் ளன எனக் குறிப்பிட்டுள்ளனர்.


 


 

;