tamilnadu

சமூகத்தைச் சீர்திருத்த போராடிய மனிதநேயர் குன்றக்குடி அடிகளார்!

மதுரை புரட்சிப் பாவலர் மன்றம் சார்பில் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா பெரி யார் நெறியாளர் பி.வரதராசன் தலைமையில் நடைபெற்றது.  பன்னிருதிருமுறை மன்ற உறுப்பினர்  முனைவர்  க.செந்தில் வடிவு வரவேற்றார். ஆடிவீதி திருவள்ளுவர்கழக மதிப்பியல் தலைவர் பி.டி.ஆர். கமலை விசயராசன் , உலகத் திருக்குறள் பேரவை மதிப்பியல் தலைவர் கார்த்தி கேயன் மணிமொழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மேனாள் அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் புகழுரை ஆற்றினார். திருப்புகலூர் வேளாக்குறிச்சி திருமடத்தலை வர்  சத்திய ஞான மகாதேவ தேசிக சுவாமிகள் நிறைவுரையாற்றினார். முனைவர் நெல்லை சொக்கலிங்கம் அவர்களுக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் விருது வழங்கி பாராட்டினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  வேளாக்குறிச்சி ஆதீ னம்,  மேனாள் அமைச்சர் வைகைச்செல்வன் ஆகியோருக்கு ஆடை அணிவித்தார். இரா.விஜயராஜன் (சிபிஎம்), உதவி கல்வி அலுவலர் கென்னடி, மாவட்ட மேனாள் நீதிபதி பொ.நடராசன், மருத்துவர்  அப்துல் லத்தீப், அரவிந்த் கண் மருத்துவர் மகேசுக்குமார், குறும்பா பாவலர் இரா.இரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர் வீர அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

விழாவில் சத்திய ஞான மகாதேவ தேசிக சுவாமிகள் ஆற்றிய உரையில், “செந்தமிழால் சமயம் வளர்த்தது சைவம். சாத்திர,கோத்திர வேறுபாடுகளை எதிர்த்து, சமூக சீர்திருத்தத்தில் பயணித்தவர் அப்பரடிகள் (திருநாவுக்கரசர்). அவர் அடியொற்றி குன்றக்குடி அடிகளார் சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டார். அவ்வாறு தொண்டாற்றியதால் தான் பெரியார், அடிகளாரை பாராட்டினார், ஒன்றிணைந்தார். தொண்டாற்றி மக்களிடையே சமத்துவத்தை நிலைபெறச் செய்ய வேண்டும். 63 நாயன்மார்களில் பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களை இணைத்து அவர்களை ஆட்கொண்டு சாதி வேறுபாடுகளை களைந்தது சைவ சமயம். பெரியாரும் அடிகளாரும் சாதி வேறுபாடற்ற அன்பு மேலோங்கி நின்ற சமூகம் அமைய இயல்பாக ஒன்றிணைந்தவர்கள்.

கடவுள் பெயரால் அமைந்த ஏற்றத் தாழ்வு களைய பெரியார் கடவுள் இல்லை என்றார்.  சமயப்பணிகளோடு ஆதீனங்கள் நின்றுவிடாமல் சமுதாயப் பணிகளும் செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நூற்றாண்டு கொண்டாட வேண்டும். நம்மிடையே வேறுபாடுகள், மாறுபாடுகள் அதிகரித்ததால்தான் பெரியார் நினைப்பில் கடவுள் மறுப்பு சிந்தனை வந்தது. கடவுள் பெயரால் அமைந்த குறைகளை எதிர்த்த பண்பாளர் பெரியார்.

மானுடத்தில் மனிதநேயம் உயர வேண்டும் என்று சிந்தித்தவர்கள் பெரியாரும் அடிகளாரும். சமயம் வெறும் பச்சைப் பெட்டகமாக, சாதாரண வழிபாட்டோடு நின்றது. வாழ்வியலில்  ஏற்றத் தாழ்வு அகற்றி மானுடத்தின் வாழ்வின் மகத்துவத்தை உயர்த்த பெரியாரும் அடிகளாரும் செயல்பட்டனர். சமஸ்கிருதம் மக்களிடமிருந்து விலகியது. சமுதாயத்தை வெறுத்தால் வெற்றி பெற முடியாது. சமயம் வேறு சமுதாயம் வேறு அல்ல. பெரியார் எதிர்த்தாலும் அறத்தோடு செயல்பட்டார் சமயக்கதைகளை விடுத்து உட்பொருள் பார்த்து நடக்க வேண்டும். மொழியை, இனத்தை அரவணைத்து அறவழியில் ஆற்றுப்படுத்தி மக்களுக்கும் மதத்திற்கும் இடைவெளி இல்லாமல் குன்றக்குடி அடிகளார் சமூக சீர்திருத்தத்திற்காக செயல்பட்டார். அடிகளார் தொண்டு நெறி ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற கருத்து அமைந்தது.

சமுதாயம் இல்லாமல் சமயம் இல்லை. பெரியாரும் அடிகளாரும் தோளோடு தோள் நின்று பாடுபட்டனர். அதனால்தான் ஆதீனங்கள்  எடுக்காத விழாவை பெரியார் தொண்டர் வரதராசன் மதுரையில் அடிகளாருக்கு விழா எடுக்கிறார்” என்றார்.

தமிழ் மொழி காக்க போராடியவர் அடிகளார்

விழாவில் மேனாள் அமைச்சர் சு.ச.வைகைச் செல்வன் ஆற்றிய உரையில், “தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். பிறமொழி தவிர்த்து தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டும். சாதி வேறுபாடின்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற முதன்மையான சமூக சமத்துவம் அமைந்த முழக்கங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்து பாடுபட்டவர். மக்கள் நலனில் அக்கறையோடு, குமரி மாவட்ட மண்டைக்காடு கலவரமானாலும், இயற்கைப் பேரழிவுகளாலும் மக்கள் பட்ட துன்பம் துடைக்க பாடுபட்டவர். இந்த அறச்சிந்தனையால் பெரியாரும் அடிகளாரும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். திமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டமன்ற தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்ற காஞ்சி சங்கராச்சாரியாரின் கருத்தை மறுத்து அரசின் தீர்மானத்தை ஆதரித்தவர் அடிகளார். கோடிகளில் பணம் ஒதுக்கி வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை வளர்க்கப் பாடுபடுகிறார்கள். தொலைக்காட்சிகளில் சமஸ்கிருதத்தில் செய்தி படிக்கிறார்கள்.

பேசாத மொழி சமஸ்கிருதம் 6000 ஆண்டுகளாக மக்கள் மொழியாக அமைந்த தமிழில் இறைவனைப் பாடக்கூடாதா என்று கேட்டவர்கள் தான் பெரியாரும் அடிகளாரும். உள்ளத்தால் பொய்யாது ஒழுகி, ஆழ்ந்த கருத்து ஒற்றுமை உடையவர்கள் பெரியாரும் அடிகளாரும்.  மதுரையிலிருந்து அங்கையர்க்கண்ணி திருக்கோயிலில் தமிழ் அர்ச்சனையை தொடங்கி வைத்தவர் அடிகளார். தமிழை நேசித்த காரணத்தால் அறிஞர்கள் செய்யாததை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்து மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டார். இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ் மொழி காக்க போராட்டத்தில் கலந்து கொண்டவர் அடிகளார். முதலமைச்சர் பக்தவச்சலம் அடிகளார் மீது வழக்குப்பதிவு செய்து  ரூ. 350 தண்டத்தொகை செலுத்த வைத்தார். அண்ணா முதலமைச்சரானவுடன் வழக்கை திரும்பப் பெற்று, தண்டத்தொகையை திருப்பிக் கொடுத்தார். மக்கள் மீது கொண்ட பேரன்பும் கருணையும் பெரியாரையும் அடிகளாரையும் இணைத்தது. நேர்மையான கருத்தை கூறுபவர்கள் காலம் கடந்தும் நினைக்கப்படுவார்கள்” என்றார். - தொகுப்பு : பி.வரதராசன்