விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரேசன் பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டை, மே 9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, கோட்டைப்பட்டினத்தில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரேஷன் பொருட்களை வியாழக்கிழமை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் எஸ். குலாமைதீன்(54). வடக்கு வீதியைச் சேர்ந்தவர் எஸ்.கான்(70). இவர்கள் இருவரும் 127 கிலோ ரேஷன் அரிசி, 15 கிலோ சீனி, 8.5 கிலோபருப்பு ஆகிய ரேஷன் பொருட்களை 2 இருசக்கர வாகனங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வியாழக்கிழமை வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில், கோட்டைப்பட்டினம் சோதனைச்சாவடியில் மணமேல்குடி கடலோர பாதுகாப்புபடை ஆய்வாளர் முத்துக்கண்ணு தலைமையிலான காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரேஷன் பொருட்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, குலாமைதீன் மற்றும் கான் ஆகிய 2 பேரையும் பிடித்து புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவில் ஒப்படைத்தனர். அங்கு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணி: சென்னை பேருந்து சேவைகள் தற்காலிக இடமாற்றம்
கும்பகோணம், மே 9- கும்பகோணம் புறநகர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மே 7 முதல் தற்காலிகமாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நெய்வேலி, பண்ருட்டி, ஜெயங்கொண்டம், அணைக்கரை வழியாகச் செல்லும் அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், கும்பகோணம் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து செயல்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை
தஞ்சாவூர், மே 9- சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ ஜெயினத் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் (48). செங்கல் அறுக்கும் தொழிலாளி. இவர் 2021 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வெண்ணாற்றங்கரைப் பகுதியில் செங்கல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போது 12 வயது சிறுமியை இவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து, திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, சிவசங்கரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ.தமிழரசி விசாரித்து, சிவசங்கருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.8 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
தோல்வி பயம்: மாணவி தற்கொலை
பாபநாசம், மே 9- பாபநாசம் படுகை புதுதெருவைச் சேர்ந்த புண்ணிய மூர்த்தியின் மகள் ஆர்த்திகா(17). பாபநாசத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆர்த்திகா +2 தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில், ஆர்த்திகா +2 தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் வீட்டின் பின்புறம் இருந்த மாட்டுக் கொட்டகையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு முடிவு வெளியான நிலையில் ஆர்த்திகா 413 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ஆர்த்திகா நன்றாக படிக்கக் கூடிய மாணவி என்று தெரிவித்தனர்.
புதிய பாரத திட்ட தன்னார்வலர்களுக்கு இரண்டாம் கட்டம் ஒரு நாள் பயிற்சி
அறந்தாங்கி, மே 9- புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மைய தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன்தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் எழுதப் படிக்க தெரியாத கற்போருக்கு எழுத்துக்களை தெரிந்து கொள்வதற்கும், எழுத்துக்களை எழுதுவதற்கு கற்றுக் கொள்வதற்கும், தனது பெயர், தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயர் எழுதி பழகுவதற்கும், அதேபோல் பேருந்து பயணம் செல்லும் பொழுது ஊர்களின் பெயர்களை தெரிந்து கொள்வதற்காகவும், கையெழுத்து போடுவதற்காகவும், கற்போருக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதேபோல் வாழ்வில் திறன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி, கற்போருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இப்பயிற்சியினை, ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில், தன்னார்வலர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
தஞ்சாவூர், மே 9- நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், பேராவூரணி அடுத்த செங்கமங்கலம் - அம்மையாண்டியில் உள்ள மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதிய 224 மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி அனுராகவி 600-க்கு 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ராம்குமார் என்ற மாணவன் 600-க்கு 581 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஹாசினி என்ற மாணவி 600-க்கு 580 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். சிறப்பிடங்களைப் பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் மூவேந்தர் அறக்கட்டளை தலைவருமான வி.ஏ.டி அரிமா சாமியப்பன், செயலாளர் இ.பி.ஏகாம்பரம், பொருளாளர் ஆர்.வேல்சாமி மற்றும் அறங்காவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பேராவூரணி குமரப்பா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
தஞ்சாவூர், மே 9- பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், பேராவூரணி டாக்டர். ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 104 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் நூறு ஆகும். 600 மதிப்பெண்களுக்கு 565 மதிப்பெண் பெற்ற மாணவி அருண்வதனி முதலிடமும், 560 மதிப்பெண் பெற்ற மாணவி பிரதிமா இரண்டாமிடமும், 555 மதிப்பெண் பெற்ற மாணவி ஹரிணி மூன்றாமிடமும் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவிகளை, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர், நிர்வாக இயக்குநர் எம். நாகூர்பிச்சை, அறங்காவலர்கள் மா.ராமு, மா.கணபதி, ஆனந்தன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், அதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் 92.55 சதவிகிதத் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்:
புதுக்கோட்டை, மே 9- பள்ளிக் கல்வி மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் 92.55 சதவிகிதத் தேர்ச்சி பெற்று, மாநிலத்தின் 35-ஆவது இடத்தில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 178 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9,348 மாணவர்கள், 11,019 மாணவிகள் என மொத்தம் 20,367 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 8,306 மாணவர்கள், 10,543 மாணவிகள் என மொத்தம் 18,849 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.55 சதவிகிதமாகும். மாநிலப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 35 ஆவது இடத்தில் உள்ளது. அரசுப் பள்ளிகள் மாவட்டத்திலுள்ள 108 அரசுப் பள்ளிகளில் 6,120 மாணவர்கள், 8,277 மாணவிகள் என மொத்தம் 14,397 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 5,185 மாணவர்கள், 7,827 மாணவிகள் என மொத்தம் 13,012 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள 178 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 54 பள்ளிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 7 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.