இந்த வாரக் கணித விளையாட்டுக்குத் தயாராகிவிட்டீர்கள்தானே? வழக்கம்போல், நீங்களே கண்டுபிடித்த பிறகுதான் விடையைப் பார்ப்பது என்ற உறுதியுடன் வாருங்கள்.
எத்தனை சாக்லெட் எடுக்க வேண்டும்?
ஒரு கூடையில் 53 சாக்லெட்டுகளை வைத்திருக்கிறார் அம்மா.. அவற்றில் 21 சாக்லெட்டுகள் சிவப்பு நிற உறையில் இருக்கின்றன. 15 சாக்லெட்டுகள் மஞ்சள் உறையில் உள்ளன.. 17 சாக்லெட் உறைகளின் நிறம் பச்சை. விளையாடிக்கொண்டிருக்கும் அனு சாப்பிடுவதற்கு ஒரே நிறத்தில் இரண்டு சாக்லெட் வேண்டுமென்று கேட்கிறாள். அறைக்குள் போய் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார் அம்மா. அனு உள்ளே போய் கூடையில் கையை விடுகிறபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அறை இருட்டாகிவிடுகிறது. எது என்ன நிறம் என்று பார்க்க முடியாத அந்த இருட்டில், அவள் குறைந்தது எத்தனை சாக்லெட்டுகளை எடுத்தால், இரண்டு சாக்லெட்டுகள் கண்டிப்பாக ஒரே நிறத்தில் இருக்கும்?
புதிர் விளையாட்டு விடை
இரண்டு பெரிய எண்ணிக்கைகளாகிய 21 மற்றும் 17 ஆகிய இரண்டையும் கூட்டினால் 38 இல்லையா? அனு இப்போது 38 சாக்லெட்டுகளை எடுத்தால் அவை எல்லாமே இரண்டே நிறங்களில் (சிவப்பும் மஞ்சளும், அல்லது மஞ்சளும் பச்சையும், அல்லது பச்சையும் சிவப்பும் இப்படி) வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகவே குறைந்தது இரண்டு சாக்லெட்டுகளாவது ஒரே நிறத்தில் இருப்பதற்கு அனு 40 சாக்லெட்டுகளை எடுக்க வேண்டும். இதைச் சரியாக ஊகித்தவர்களுக்குப் பாராட்டுகள்.