tamilnadu

img

27 பேருக்கு ஆயுள் - கச்சநத்தம் பட்டியலினத்தவர் 3 பேர் கொடூர படுகொலை

சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை.ஆக.5-  தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கச்சநத்தம் பட்டிய லின மக்களை கொடூரமாக படு கொலை செய்த சம்பவத்தில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து  சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ.13 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச் சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் 50 பட்டியல் சாதி குடும் பங்களும் ஐந்து பிற சாதி குடும்பங் களும் வசித்து வருகின்றன. இதில் சுமன் என்பவரின் குடும்பம்  கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளது. இதை எதிர்த்து அங்கு வாழும் பட்டியலின மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுப்பதும், காவல்துறை இதில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் நிலையும் இருந்துள்ளது. இதன் காரணமாக  அவ்வப்போது சிறு சிறு  பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா முடிந்த நிலையில் பிற சாதி குடும்பங்களைச் சேர்ந்த சிலர், வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் கச்சநத்தம் சண்முக நாதன் (31), ஆறுமுகம் (65), சந்திர சேகர் (34) ஆகியோர் பலியாகினர். சுகுமாறன் (23), மலைச்சாமி (50), தனசேகரன் (32), மகேஸ்வரன் (18), தெய்வேந்திரன் (45), ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் தனசேகரன் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி காலமானார். கச்சநத்தம் சம்பவத்தில் சண்முக நாதன் என்ற மருது வீட்டில் தொலைக் காட்சியைப்  பார்த்துக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டினர். ரத்தம் பீறி ட்டு தெறித்து வீட்டில் ஆங்காங்கே விழுந்ததில் ரத்தக்கறைகள் இருந்தன.  இந்தச் சம்பவத்தில் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஒருவரின் வீடும் நாசமாக்கப்பட்டது. கோயம்புத்தூரில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த மலைச்சாமியை குண்டுக்கட்டாகத் தூக்கி வந்து மனோகரன் என்பவர் வீட்டு முன்பு வைத்து வெட்டினர்.  காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி படித்துக் கொண்டு, ஐஏஎஸ் பணிக்கான தேர்விற்கு தயாராகிக்கொண்டிருந்த சுகுமாறனை  வீடு புகுந்து வெட்டினர்.  

ஆறுமுகம் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து அவரை தரதர வென்று இழுத்துவந்து தெருவில் வைத்து அரிவாள், வாளால்வெட்டினர். கொடூரத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்களை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நீதி கேட்டு தொடர் போராட்டம்

இந்த வன்கொடுமைத் தாக்கு தலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி  கேட்டு மதுரையில்  மே 30-ஆம் தேதி முதல்  மூன்று நாட்கள் தொடர் போரா ட்டம் நடைபெற்றது. மூன்றாவது நாள் (ஜூன் 1-ஆம் தேதி) போராட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்தப் போரா ட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அன்றைய மதுரை புறநகர்  மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ் ணன், சட்டமன்ற முன்னாள் உறுப் பினர்கள் கே.பாலபாரதி, ஆர்.கிருஷ்ணன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி, தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் மதுரை  மாவட்டத் தலைவர் எம்.பாலசுப்ர மணியன், மாவட்டச் செயலாளர் த.செல்லக் கண்ணு, மாநிலக்குழு உறுப்பினர் மா.கணேசன், சிபிஐ சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு  மாவட்டச் செயலாளர் வி.பி.இன்குலாப், மாநகர் மாவட்டச்செய லாளர் கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான்பாண்டியன், தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நாகை திருவள்ளுவன், மக்கள் விடுதலைக் கட்சித் தலை வர் முருகவேல்ராஜன், இயக்கு நர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றி மாறன், ராம், பா.ரஞ்சித், மாரி செல்வ ராஜ் முத்துக்காமாட்சி  உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மூன்றாம் நாள் போராட்டத்தின் போது அன்றைக்கு மதுரை ஆட்சிய ரக இருந்த கொ.வீர ராகவ ராவ், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த லதா, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜெயச்சந்திரன், தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியின ஆணைய அன்றைய துணைத் தலைவர் எல்.முருகன் மற்றும் பல்வேறு அதிகாரிகள் போராட்டத் தில் ஈடுபட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கொல்லப்பட்டவர்களின் உடல்களை பெற்றுக் கொள்ள முன்வந்த மக்கள், போராட்டம் நடை பெற்ற மதுரை ஆட்சியர் அலுவல கத்திலிருந்து அரசு இராஜாஜி மருத்துவமனை வரை பேரணியாகச்  சென்றனர். இந்தப் பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   அன்றைய மதுரை புறநகர்  மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், சிவ கங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்த சாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில நிர்வாகி ஆர்.கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் மா.கணேசன், மாவட்டத் தலை வர் மா.பால சுப்பிரமணியம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.பி.ரமேஷ்கண்ணன், நடராஜன் மற்றும் தணிகைராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, உட்பட  500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர் அவர்களது உடல்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய  அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கச்சநத்தம்  மக்கள் பெற்றுக்கொண்டனர். பின்னர் காவல்துறை பாதுகாப்புடன் அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு  கொண்டு செல்லப் பட்டு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

படுகொலைச் சம்பவம் நிகழ்ந்த  கிராமத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆகியோர் சென்று  பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். குற்றவாளிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய  நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினர். பின்னர், கச்சநத்தம் படுகொலைக்கு நீதி கேட்டு 2018-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி மானாமதுரையில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கச்சநத்தம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளைச் சார்ந்த மக்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

33 பேர் மீது வழக்கு

இந்தக் கொலை வழக்கில் ஆவரங்காடு கந்த சாமி (37), கச்சநத்தம் முத்தையா (60) உட்பட 33 பேர் மீது பழையனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு  செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறுவர்கள், இருவர் இறந்துவிட்டனர். மற்றொருவர் தலை மறைவாக உள்ளார். மீதமுள்ள 27 பேர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மதுரை, திருச்சிராப்பள்ளி சிறைகளிலிருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.  அன்று காலை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அன்று மாலை ஐந்து மணிக்கு, வழக்கில் கைதாகி சிறையில் இருப்ப வர்களின் விபரங்களை நீதிபதி முத்துக்குமரன் வாசித்தார். தொடர்ந்து  27 பேர்களும் குற்றவாளி கள் என அறிவித்தார். தண்டனை விவரத்தை ஆகஸ்ட் 3-ஆம் தேதி தெரிவிப்பதாக நீதிபதி கூறினார். ஆனால் தீர்ப்பை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

62 மாதங்களுக்கு பின் தீர்ப்பு

2018-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்த கொலை வழக்கு விசாரணை  நிறை வடைந்து 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம்  தேதி (62 மாதங்களுக்கு பின்) தீர்ப்பளிக்கப் பட்டது. தீர்ப்பை நீதிபதி ஜி.முத்துக்குமரன் காணொலி காட்சி மூலம் வழங்கினார். குற்றவாளி கள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

தண்டனை பெற்றவர்கள் விவரம்

சுமன், அருண்(எ)அருண்குமார்,  சந்திர குமார், ராஜேஷ் (எ) ராஜேஸ்வரன்,  இளைய ராஜா, கனித் (எ) கனித்குமார்,  கருப்பையா (எ) முனியாண்டி.  மைக்கேல் (எ) முனியாண்டி,  ஒட்டக்குளத்தான் (எ) முனியாண்டி (எ) கந்தசாமி, ராமகிருஷ்ணன், மீனாட்சி (பெண்), சின்னு (பெண்), செல்லம்மாள் (பெண்),  செல்வி  (பெண்), முத்தையா (எ) முத்துவேல், முத்து செல்வம், முக்கீஷ்வரன் (எ) முத்து முனீஸ் பரன், ராமச்சந்திரன், சுள்ளான்(எ) கருப்பையா, மாயச்சாமி, பிரசாத் (எ) அருண்பாண்டி, ரவி (எ) முகிலன்,  ரவி, அருண் நவீன், தவிடு(எ) கார்த்திக், மட்டிவாயன் (எ) முத்துமணி. இவர்களுக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை கட்டத்  தவறினால் கூடுதல் காலம் தண்டனை அனு பவிக்க வேண்டும். ரூ.13 லட்சத்தை இறந்த வர்கள் குடும்பத்திற்கும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கும் வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கறிஞர்களுக்கு பாராட்டு

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் துஷாந்த் பிரதீப்குமார், சின்னராசு, ஜி..பகத்சிங், வே.திசைஇந்திரன், எம்.வேல்முருகன், எம்.பி.ரோணிகா ஆகி யோர் ஆஜராகி வாதாடினர். தீர்ப்பு வெளியான தைத் தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு,  சிவ கங்கை மாவட்டத் தலைவர் முத்துராமலிங்க பூபதி, மாவட்டச் செயலாளர் வீரையா, மாவட்ட நிர்வாகிகள் பொன்னுச்சாமி, சுரேஷ், மதி, ஏ.ஆறு முகம், தென்னரசு, வேங்கையா, முருகானந்தம், தங்கராஜ், இன்னாசிராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தண்டியப்பன்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கருப்புச்சாமி, மோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அய்யம்பாண்டி, உலகநாதன், விஸ்வநாதன், பூவந்தி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜி.மகாலிங்கம், ஏ.சாத்தப்பன், தர்மராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
 

;