மத்திய அரசு நாடுமுழுவதும் திணித்து வரும் நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தமிழக எம்பிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை மாணவர்கள் மீது திணித்துள்ளது. இந்நிலையில் எம்டி மற்றும் எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைமுறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு பதில் தேசிய நிறைவு நிலைத் தேர்வு என்ற பெயரில் புதிய தேர்வு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் எம்பிபிஎஸ் முடித்த பிறகு மருத்துவ பணியை தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்கு தனித் தேர்வு எழுத தேவையில்லை என்றும் தேசிய நிறைவு நிலைத் தேர்வு முடிவுகளே போதுமானது என்றும் திருத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் ஒரு அம்சம் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இம்மசோதா விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.