இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்
ஜனாப் குத்புதீன் வீட்டு வாசல் எங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். பிறகு அவர் ‘லேபர் ஸ்வராஜ்’ என்ற கட்சியின் மற்றொரு ஸ்தாபகரானார். இரண்டாவது உலகப் பெரும்போர் நடந்த காலத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
குலாம் ஹுசேன் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்காகத் தம்முடைய அரசாங்க வேலையைத் துறந்தார். பின்னர் லாகூருக்குத் திரும்பினார். அங்கிருந்து அவர் ‘இன்குலாப்’ என்ற உருது மாத இதழை ஆரம்பித்தார். பிரசித்தி பெற்ற தென்மேற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளரானார்.
எங்களது இலட்சியம், இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிக்க வேண்டுமென்பதாக இருந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தினால் நான் உத்வேகமூட்டப்பட்டேன் என்பதை உறுதியுடன் சொல்லுகிறேன். கல்கத்தா, பம்பாய், லாகூர் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம். 1921 -ல் பிரான்சிலும், சீனாவிலும் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கு முன் முயற்சி எடுத்தவர்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் நாங்கள் மிகவும் குறைவானவர்களாக இருந்தோம். மிகக் குறைந்தபட்சம் எனது திறமையின்மைபற்றி முழுவதும் உணர்ந்திருந்தேன். மார்க்சிசத்தைப் பற்றிய எனது ஞானம் ஆழமின்றி மேலோட்டமாக இருந்தது. அனுபவமில்லாத துறையில் நான் நுழைந்தபோது எனக்கிருந்த ஒரே கைமுதல், மக்களிடம் நான் பெற்றிருந்த நம்பிக்கையும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதல்களின் மீதான எனது நம்பிக்கையுமே, என்பதை நான் உணர்ந்தேன்.
என் கையில் பணமோ, ஜீவிதற்திற்கான வேறுமார்க்கமோ இல்லை. இப்படிப்பட்ட வேளையில் நான் மனமொடிந்து போகாமலிருந்ததற்கு முக்கியக் காரணம் எனது மன வலிமைதான். அந்த மனவலிமை இல்லாமலிருந்திருந்தால் இன்று முப்பத்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் எங்கு போய்ச் சேர்ந்திருப்பேன்! அதுபற்றி எண்ணும்போது நான் வியப்பில் மூழ்கிவிடுவேன்.
‘ஹிஜ்ரத்’ இயக்கம்
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்காக கல்கத்தாவில் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் கவிஞர் நஸ்ருல்இஸ்லாமும் அந்தப்பணியில் கலந்து கொண்டார். எனினும், அவர் இறுதியில் கட்சியில் சேரவில்லை. ஆனால், அவர் எல்லா சமயங்களிலும் எங்கள் ஆதரவாளராக இருந்து வந்தார். பின்னர் நிறுவப்பட்ட ‘லேபர் ஸ்வராஜ்’ என்ற கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராய் ஆனார் அவர். எனது பணிகளோடு இணைந்து முன்னேறிச் செல்ல விரும்புவதாக பயங்கரவாதப் புரட்சியாளர்கள் சிலர் என்னிடம் சொன்னார்கள். அந்த விஷயத்தில் தங்களது உதவியையும் தருவதாக அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்களது நிலைபாட்டிற்கு எனது நிலைபாட்டோடு ஒருமைப்பாடு இல்லையென்பது பிறகு தெளிவானது. 1922-ல் முதலில் அப்துல் ரசாக்கானும், அடுத்து அப்துல் ஹலீமும் என்னுடைய பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினர். ஒத்துழையாமை இயக்கம் நடந்த காலத்தில் ரசாக்கான் ஒருமுறையும், அப்துல் ஹலீம் மூன்று முறைகளும் சிறை தண்டனை ஏற்றனர்.
1922-ல் வேறெருவரும் எங்கள் நண்பரானார். அவர் பெயர் குத்புதீன் அகமது. ஒரு காலத்தில் ‘அல்ஹிலால், அல்பிலால்’ ஆகியவற்றை நடத்துவதில் மௌலானா அப்துல்கலாம் ஆஸாத்தின் சகஊழியராக இருந்தார் அவர். அக்காலத்தில் கல்கத்தாவில் மார்க்சிய நூல்கள் கிடைப்பது மிக மிக அரிதாக இருந்தது. அவை எங்கேனும் கிடைத்தால் கூட அவற்றை வாங்க எங்களுக்கு யாதொரு வசதியுமில்லை. ஜனாப் குத்புதீன் ஏராளமான புத்தகங்கள் வாங்குவதையும், படிப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரிடமிருந்துதான் நான் பில்ப்ஸ் ரைஸர் எழுதிய ‘ரஷ்யப்புரட்சி’ பற்றிய எனது நினைவுகள் என்ற நூலை வாங்கிப்படித்தேன். ரஷ்யப்புரட்சி பற்றி நான் படித்த முதல் புத்தகம் அதுதான். 18 ஷில்லிங் விலையுள்ள அந்தப்புத்தகத்தை விலை கொடுத்து வாங்க எங்களால் இயலவில்லை.
ஜனாப் குத்புதீன் வீட்டு வாசல் எங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். பிறகு அவர் ‘லேபர் ஸ்வராஜ்’ என்ற கட்சியின் மற்றொரு ஸ்தாபகரானார். இரண்டாவது உலகப்பெரும்போர் நடந்த காலத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1948 பிப்ரவரி 1ஆம் தேதியன்று அவர் காலமானார். அந்தச்சமயத்தில் ஏனைய சிலரும் எங்களோடு சேர்ந்தனர். பம்பாயைப் பற்றி குறிப்பிடும் போது ஸ்ரீபாத் அமிர்த டாங்கேயின் பெயரைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும். கல்லூரிப்புதுமுக வகுப்பில் படிக்கும்போது மாணவர் இயக்கத்தில் கலந்து கொண்டதால் அவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் காந்தியத் தத்துவத்தை விரும்பாததால் 1921 லேயே “காந்தி வெர்சஸ் லெனின்” என்ற நூலொன்றை ஆங்கிலத்தில் எழுதினார். அது அந்தக் காலத்தில் செய்ய முடியாத பெருந்தீவிரச் செயலாக இருந்தது. 1922 -ல் அவர் “சோஷலிஸ்ட்” என்ற ஆங்கில வார இதழொன்றைத் துவக்கினார். இந்தப் பெயரில் வேறொரு இதழ் முன்னெப்போதும் வந்ததில்லை. டாங்கே தொழிலாளர்களுடன் என்னைக் காட்டிலும் அதிகத் தொடர்பு வைத்திருந்தார். பம்பாயிலிருந்த மற்றவர்களைப் பற்றி நான் பிறகு சொல்கிறேன்.
குலாம் ஹுசேன் லாகூரில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் ஓர் அரசாங்கக்கல்லூரியில் (பெஷாவரில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் ) பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஹுசேன், முகமது அலியின் நண்பராக இருந்தார். ஒரு சமயம் லாகூர் மாணவர்கள் சிலர் புரட்சிப் பணிகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள இந்தியாவுக்கு வெளியே சென்றிருந்தார்கள் . அக்குழுவில் முகமது அலியும் ஒருவர். ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் அவர் ரஷ்யாவுக்குச் சென்றார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். குலாம்ஹுசேனை காபூலுக்கு அழைத்தவரும், அவருக்கு மார்க்சிஸத்தின் பால் பற்று ஏற்பட வழி செய்தவரும் அவர்தான். இறுதியில் குலாம் ஹுசேன் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்காகத் தம்முடைய அரசாங்க வேலையைத் துறந்தார். பின்னர் லாகூருக்குத் திரும்பினார். அங்கிருந்து அவர் ‘இன்குலாப்’ என்ற உருது மாத இதழை ஆரம்பித்தார். பிரசித்தி பெற்ற தென்மேற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளரானார்.
கான்பூர் சிறையில்
1921 -ல் நான் கான்பூர் சிறையில்தான் முதலில் டாங்கேயைக் கண்டேன். எனினும், கடிதத்தின் வாயிலாக ஏற்கனவே அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன். ஆனால், குலாம் ஹுசேனை நான் ஒரு போதும் கண்டது இல்லை. அதுமட்டுமல்ல, கடிதத்தின் மூலம் கூட அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டதில்லை. 1922-ல் சென்னையில் புகழ்பெற்ற வழக்கறிஞரான மலயாபுரம் சிங்காரவேலு, தம்மை ஒரு கம்யூனிஸ்ட் என தாமாகவே அறிவித்துக்கொண்டார். மார்க்சிஸ்ட் நூல்களைக் கொண்ட அவரது நூலகம் மிகப்பிரமாதமாக இருந்தது. அவர் தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது, அந்நிய நாட்டில் தான் என்பதை இங்குச் சுட்டிக்காட்டுகிறேன். 1920ஆம் ஆண்டின் நடுவில் ‘ஹிஜ்ரத்’ என்றழைக்கப்பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கும், சக்தியும் கொண்ட ஓர் இயக்கம் சண்டீகரிலும் பஞ்சாபிலும் ஆரம்பமானது.