1944 - ‘வி-1 பறக்கும் குண்டு’ என்ற ஆயுதத்தால் லண்டனை ஜெர்மனி தாக்கியது. ‘வெர்கல்ட்டங்ஸ்வாஃபே(வஞ்சம்தீர்க்கும் ஆயுதம்)-1’ என்று பெயரிடப்பட்ட இதுதான் உலகின் முதல் வெற்றிகரமானதும், பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டதும், பயன்படுத்தப்பட்டதுமான ஏவுகணையாகும். பல்ஸ்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட, சீர்வேக(க்ரூஸ்) ஏவுகணையான இது, 850 கிலோ வெடிபொருளை(வார்ஹெட்), 250 கி.மீ. தொலைவுக்கு 640 கி.மீ. வேகத்தில் எடுத்துச்சென்று வீசக்கூடியது. நேசநாடுகளின் படைகள் ஐரோப்பாவுக்குள் நுழைந்ததற்குப் பதிலடியாகவே இதனை லண்டன்மீது ஜெர்மனி பயன்படுத்தியது. பிரான்சை ஆக்கிரமித்திருந்த ஜெர்மனி, லண்டனுக்கு அருகிலுள்ள பிரான்சின் வடஎல்லையிலிருந்து இதனை வீசியது. பறந்துவந்து குண்டுவீசிவிட்டுத் திரும்பும் விமானங்களையே அதுவரை அறிந்திருந்த நிலையில், சிறிய விமானங்களே விழுந்து வெடிப்பதைப் புரிந்துகொள்ள முடியாததால் தொடக்கத்தில் தடுமாறினாலும், விரைவில் இங்கிலாந்து சுதாரித்துக்கொண்டு இவற்றை வழியிலேயே அழிக்கத்தொடங்கியது. துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் பெற்றிருக்காவிட்டாலும், இது இங்கிலாந்துக்குக் குறிப்பிடத்தக்க அழிவை ஏற்படுத்தியது. பின்னர், எறியும் உயரத்திற்கேற்ப அடையும் தொலைவு அமையும் பேலிஸ்டிக் விதிகளின் அடிப்படையில், ராக்கெட் என்ஜின் பொருத்தப்பட்ட நீண்டதொலைவுக்குத் தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணையையும் (வி-2) ஜெர்மனி உருவாக்கி, 1944 செப்டம்பரில் லண்டன் உள்ளிட்ட நேசநாடுகளின் நகரங்களின்மீது வீசியது. ஜெர்மன் ஏவுகணைகளில் வெடிக்காமல் கைப்பற்றப்பட்டவற்றை ஆய்வுசெய்து அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் முதலானவை ஏவுகணைகளை பின்னர் உருவாக்கின. துல்லியமாக இலக்குகளைத் தாக்கச் செய்யும் தொழில்நுட்பங்களும், அகச்சிவப்புக் கதிர்கள், லேசர், ரேடியோ அலைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி, வழிநடத்தப்படும் ஏவுகணைகளும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டன. இலக்கின் அகச்சிவப்புக்கதிர் உருவம் உள்ளிட்ட ஏதாவதோர் அடையாளத்தின்மூலம், விடாமல் துரத்திச்சென்று இலக்கைத்தாக்க ‘ஃபயர் அண்ட் ஃபர்கெட்’ ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. தரையிலிருந்து-தரையில், விண்ணிலிருந்து-விண்ணில், தரையிலிருந்து-விண்ணில், விண்ணிலிருந்து-தரையில் உள்ள இலக்குகளைத் தாக்குதல், செயற்கைக்கோள்களைத் தாக்குதல் ஆகியவற்றுக்கு தனித்தனி ஏவுகணைகள் இன்று உள்ளன. இலக்கில் துல்லியம் குறைவென்றாலும் தடுக்க முடியாதவையான பேலிஸ்டிக் ஏவுகணைகளையும் வழிமறித்து அழிக்கக்கூடிய ஏவுகணைகள் இன்று உருவாகிவிட்டன.
-அறிவுக்கடல்