tamilnadu

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து: இருளில் தத்தளித்த கிராமங்கள்

சீர்காழி, ஏப்.22-கொள்ளிடம் பகுதியில் திடீர் மின் நிறுத்தத்தால் கிராமங்கள் இருளில் மூழ்கின.நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதி அருகே குத்தவக்கரை செல்லும் சாலையின் ஓரத்தில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியின் நடுவே பொருத்தப்பட்டுள்ள பெட்டியில் ஏற்பட்ட துவாரம் வழியே எண்ணெய் போன்ற திரவம் சுமார் 20 லிட்டர் அளவுக்கு கசிந்து மின்மாற்றியின் இரண்டு மின்கம்பங்களுக்கு அடியில் ஊற்றிக் கொண்டேயிருந்தது. இந்நிலையில் திடீரென அந்தத் திரவத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியவுடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த கொள்ளிடம் மின் அலுவலர்கள் மின்சாரத்தை நிறுத்தி விட்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மின் மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் ஏற்பட்ட துவாரத்தை அடைத்தனர்.மின் மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 13 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த மின் நிறுத்தத்தால் கொள்ளிடம் கடைவீதிகள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

;