tamilnadu

தனியார்மய எதிர்ப்பு போராட்டம் குடும்பத்துடன் பங்கேற்க சாலைப்பணியாளர் முடிவு

திருப்பூர், மே 14 -தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்க திருப்பூர் கோட்டப் பொதுக்குழுக் கூட்டம் திங்களன்று கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் என்.சிவக்குமாரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இணைச் செயலாளர் அம்மாசை வரவேற்றார். கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் வேலை அறிக்கை முன்வைத்தார். மாநிலத் தலைவர் என்.பாலசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார். இதில் சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து மே 28ஆம் தேதி சென்னை இயக்குநர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.இதில் திருப்பூர் கோட்டத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பதென்று தீர்மானிக்கப்பட்டது. திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, பல்லடம், காங்கேயம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாலைப் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டப் பொருளாளர் ஆர்.கருப்பன் நன்றி கூறினார்.