திங்கள், செப்டம்பர் 27, 2021

tamilnadu

img

பொறுமையும் போர்க்குணமும் மிக்க தலைவர்.... தோழர் கே.தங்கவேல் நினைவேந்தலில் கே.பாலகிருஷ்ணன் புகழாரம்.....

திருப்பூர்:
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் பொறுமையும், போர்க்குணமும் கொண்டு தங்கமாக மட்டுமல்ல, சிங்கமாகவும் திகழ்ந்தார். பல திறமைகள் பெற்றிருந்தாலும் அகங்காரம் இல்லாமல் தன்னடக்கத்தில் தலை சிறந்து விளங்கினார் என்று முதலாமாண்டு நினைவேந்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேலின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரவைக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார்.அப்போது அவர் கூறிய தாவது: தோழர் கே.தங்கவேல் எப்படி வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. ஓராண்டு கழித்து நடக்கும் இந்த நிகழ்விலும் அரங்கம் நிரம்பியிருக்கிறது. கட்சி ஊழியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகவும் அவர் இருந்திருக்கிறார் என்றால் மிகையல்ல. அவரது மிகச்சிறந்த பண்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பல்கலைக் கழகத்தில் படிக்கவில்லை, ஆனால் பல பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு வழிகாட்டக் கூடியவராக இருந்தார்.சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் சட்டமன்ற உரிமைக்குழு உறுப்பினராக இருந்தார். அந்த குழுவில் சபாநாயகர்தான் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் உள்பட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கும் இந்த குழுவில் மிகக் கடுமையான விவாதம் நடக்கும், உரிமை மீறல் பிரச்சனைகள் பற்றி இக்குழுவில் முடிவெடுப்பார்கள். அந்த குழுவில் மிக நிதானமாக, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் பாராட்டக்கூடிய வகையில் தங்கவேல் செயல்பட்டார். பொருத்தமானவரை உரிமைக்குழு உறுப்பினராக உங்கள் கட்சி நியமித்திருக்கிறது என்று சபாநாயகரே என்னிடம் நேரில் அவரைப் பாராட்டினார்.

பனியன் தொழிலாளியாக தொடங்கி தலைவராக, செயலாளராக, உரிமைகள் இல்லாத காலத்தில் தொழிலாளர்களின் 124 நாள் நீண்ட போராட்டத்துக்குத் தலைமை தாங்கி தொழிலாளர் ஒற்றுமை ஏற்படுத்தி, உரிமையைப் பெற உறுதியாகப் பாடுபட்டிருக்கிறார். கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று கட்சியைப் பலப்படுத்த, ஒற்றுமையைப் பாதுகாக்க  பணியாற்றிய பெருமை அவரைச் சாரும். பத்துக்கும் மேற்பட்டமாவட்டங்களுக்கு அவர் கட்சிப் பொறுப்பாள ராக தலைமை தாங்கி வழிநடத்தி இருக்கிறார். அப்போது அங்கு இருக்கும் கட்சியினருடன் இரண்டறக் கலந்து அந்தந்த மாவட்ட மக்களின் பழக்க  வழக்கம், நிலைமைகளை தெரிந்து மிகச் சிறந்த கட்சியாக உயர்த்துவதில் மகத்தான பங்களிப்பை அவர் செய்திருக்கிறார். தீக்கதிர் நாளிதழின் முதன்மைப் பொது மேலாளராகவும் குறிப்பிட்ட காலம் செயல்பட்டு திறம்பட வழிநடத்திய ஆசான் அவர்.

இளம் வயதிலேயே அவருக்கு பக்குவம், சரியான அணுகுமுறை இருந்திருக்கிறது. அந்தபண்பினால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். அவர் தங்கமாக மட்டுமின்றி சிங்கமாகவும் இருந்திருக்கிறார். பொறுமை, போர்க்குணம் இரண்டும் அவரிடம் ஒருங்கே இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அற்புதமான தலைவராக அவர் திகழ்ந்தார். அவரை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம்.

சட்டமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்ட போது, பேச வேண்டிய விசயம் குறித்து முழுமையான விபரங்களைத் தொகுத்து, அழுத்தமாக, ஆணித்தரமாக பேசும் தலைவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியை கடுமையாக பேசும் நிலையில், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கொஞ்சம் கூட பதற்றமின்றி உரையாற்றுவார். அவரது சட்டமன்ற உரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் அது சிறந்த ஆவணமாக இருக்கும்.நேரம் தவறாமை, தீவிர வாசிப்புப் பழக்கம் அவரிடம் இருந்தது. எண்ணற்ற விசயங்கள், திறமைகள் பெற்றவராக இருந்தாலும் எந்தவித அகங்காரமும் இல்லாமல் தன்னடக்கத்தில் தலை சிறந்தவராக தங்கவேல் திகழ்ந்தார். அவரது மறைவு இமயமலை சரிந்து விழுந்தது போன்ற நிலையாகும்.எனினும் தோழர் கே.தங்கவேல் இல்லா விட்டாலும் அவர் உருவாக்கிய பெரிய படை இருக்கிறது. அந்தப் படை, அவரது பணியை முன்னெடுத்துச் செல்லும்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

முன்னதாக நினைவஞ்சலி பேரவைக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.  தோழர் கே.தங்கவேலின் மூத்த மகள் கவிதா, மருமகன் ஏ.கே.தங்கவேலன் உள்பட குடும்பத்தினர், உறவினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு  உறுப்பினர்கள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். முன்னதாக கே.தங்கவேல் உருவப்படத்துக்கு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பேரவையில் பங்கேற்ற அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

;