tamilnadu

கொடுமுடியில் ரூ.4.93 லட்சம் பறிமுதல்

கொடுமுடி, ஏப்ரல் 1-கொடுமுடி அருகே முட்டை லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரொக்கம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் ஞாயிறன்று பறிமுதல் செய்யப்பட்டது. மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி தமிழரசு தலைமையில் கண்ணையன், எஸ்.எஸ்.ஐ. தயாளன் ஆகியோர்கொடுமுடி அருகே உள்ள காங்கேயம்- முத்தூர் சாலையில் இச்சிப்பாளையம் அருகே வாகனச் சோதனையில் ஞாயிறன்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் நாமக்கல் மாவட்டம், நாகர்பாளையம் பகுதியைச் நாகராஜ் என்பதும், கேரள மாநிலத்தில் முட்டைகளை விற்பனை செய்துவிட்டு வசூல் தொகையான ரூ. 4 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரொக்கத்தைக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.  ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மொடக்குறிச்சி கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டாட்சியர் அசரப் புனிஷாவிடம் ஒப்படைத்தனர். மேலும், சம்பவ இடத்தை தேர்தல் செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

;