சென்னை, டிச. 10- சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் துவங்கியுள்ளது. தென் மாநிலங்களில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்னை துறைமுகம் வழியாக கப்பல்கள் மூலம் தொடர்ந்து அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
அரிசி மீதான கட்டுப்பாடுகள், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம், ஏற்றுமதிக்கான புதிய வரிகள் மற்றும் துறைமுகத்தில் போதுமான சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாதது போன்ற பல காரணங்களால் சென்னை துறை முகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் மொத்தமாக ஏற்றுமதி செய்வது படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் சரக்கு பெட்ட கங்கள் வழியாக அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதி அரிசி ஏற்றுமதி செய்வதற்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து அரிசி வகை களும் சரக்கு பெட்டகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும் உரிமம் முறையில் ஏற்றுமதி செய்வது என்றாலும், கூடுதல் வரி செலுத்தி யாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இந்நிலையில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இந்தியாவிலிருந்து அனைத்து விதமான அனைத்து வகை அரிசிகளையும் ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து இந்தியா வில் இருந்து கப்பல்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை துறைமுகத்திலிருந்து எம்.வி.வான் ஹே என்ற சரக்கு கப்பலில் இந்தோ னேசியா நாட்டிற்கு 5,100 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் ஏற்றி அனுப்பப்பட்டது. இதுகுறித்து துறைமுக போக்குவரத்து மேலாளர் எஸ்.கிருபானந்த சாமி கூறுகையில், சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டதன் பேரில், ரூ.25 கோடி மதிப்பீட்டில் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை இருப்பு வைக்கும் அளவிற்கு சேமிப்புக் கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
ஏற்கெனவே அமைந்துள்ள பழைய சேமிப்பு கிடங்குகளை மீண்டும் சீரமைப்பதன் மூலம் துறை முகத்தின் கிடங்கு கொள்ளளவு திறன் சுமார் 8 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு அதிகரிக்கும். இதற்காக ரூ. 52 கோடி செலவில் பழைய கிடங்குகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. துறை முகத்தின் கட்டமைப்பு வசதி களை அறிந்து ஏற்றுமதி, இறக்கு மதியாளர் தொடர்ந்து சென்னை துறைமுக நிர்வாகத்தை அணுகி வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய கூடுதல் வசதிகளையும் செய்து தருவதற்கு இசைவு தெரிவித்து வருகிறோம். இதன் மூலம் ஒட்டுமொத்த சரக்குகளை கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.